இயக்குனர்கள் சங்கம் செயல்படுத்த உள்ள தீர்மானங்கள்!

இயக்குனர்கள் சங்கம் செயல்படுத்த உள்ள தீர்மானங்கள்!

செய்திகள் 23-Jul-2013 12:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கான தேர்தல் நடைபெற்று, அதன் தலைவராக இயக்குனர் விக்ரமனும், பொது செயலாளராக ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக வீ.சேகர் ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக புதிய நிர்வாகிகள் செயல்படுத்த உள்ள தீர்மானங்கள் குறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் விளக்கினர். அதன் விவரங்கள் வருமாறு:

1. நமது சங்க இயக்குனர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குனர்கள் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொழிலாளர்கள் நல ஆணையர் முன்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்பாக கையெழுத்தானது. நம்து சங்க உறுப்பினர்களுக்கு மாத வருமானம் உறுதியானது.நம் சங்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஒப்பந்த காலம் 6 மாதங்கள் மட்டுமே. அதற்கு மேலும் படப்பிடிப்பு தொடர்ந்தால் மாதாமாதம் வருமானம் நிச்சயம்.
2. வருடா வருடம் நம் இயக்குநர்கள் சங்கம் மூலம் 1000 கண் தானம் வழங்கப்படும்.
3. நமது சங்க அலுவலகத்திற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இடம் கேட்டிருந்தோம். நமது கோரிக்கை நியாயமானது என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் பதில் கூறியதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
4. விஷுவல் கம்யூனிகேஷன் பயிற்சியில் உள்ளது போல நமது சங்க உறுப்பினர்கள் குறும்படங்களை எடுக்க, நமது இயக்குநர்கள் சங்கத்தில் இலவசமாக 5D கேமரா, எடிட்டிங், ரீ-ரெகார்டிங் வசதிகள் செய்து தரப்படும். நாளைய இயக்குநர்கள் போல் தங்களது குறும்படங்களை ஒரு சேனலில் பேசி ஏற்பாடு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் குறும்பட விழாக்களில் அவர்களது குறும்படங்களும் இடம்பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

5. பிரபலம் என்கிற இணையதளம் தொடங்கி, அதில் சாதனை புரிய வேண்டும் என்று ஆர்வமுள்ள திறமையுள்ள நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் திறமையுள்ள உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உடனே வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் இடைத்தரகர்கள் மூலம் மேற்குறிப்பிட்டவர்கள் ஏமாற்றம் அடைவதைத் தடுக்கலாம். அத்துடன் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு நிச்சயமாவது.
6. நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு ஒழுங்காக கால்ஷீட் கொடுக்க வேண்டும். தவறியவர்கள் மீது தொழில் ஒத்துழையாமை அமல்படுத்தப்படும்.
7. தமிழில் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு முன்னுரிமை தரப்படும்.
8. இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல் இனிமேல் இயக்குநராக, உதவி இயக்குநராக பணிபுரிய முடியாது.
9. இயற்கை எய்தியவர்களுக்கு 1 லட்சம் நிதிநிலையை உயர்த்தப்படும்.
10. போலீஸ் கமிஷனரிடம் கடிதம். உறுப்பினர்கள் அடையாள அட்டை காட்டினால் அதற்குத் தகுந்த கண்ணியமாக நடத்துதல்…

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் விக்ரமன், ஆர்,கே.செலவமணி, வீ.சேகர் ஆகியோருடன் சங்கத்தின் இணைச்செயலாளர்கள் என்.வேல்முருகன், என். ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் ஈ.ராமதாஸ், டி.பி..கஜேந்திரன், மனோபாலா, ரவிமரியா, திருமதி. மதுமிதா, ராஜாகார்த்திக், ஏ.கே..நம்பிராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;