பாலாஜிமோகன் மீது எனக்கு பொறாமை! - மணிரத்னம்

Vaayai Moodi Pesavum Audio Launch

செய்திகள் 15-Mar-2014 10:23 AM IST Top 10 கருத்துக்கள்

ரேடியன்ஸ் மீடியா, ஒய்நாட் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் படம் ‘வாயை மூடி பேசவும்’. இப்படத்தின் ஆடியோவை இயக்குனர் மணிரத்னம் வெளியிட, நடிகர் ரானா பெற்றுகொண்டார். டிரைலரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் வெளியிட, செலவராகவன் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் பேசிய மணிரத்னம், ‘‘நான் இயக்குனராவதற்கு முன்பு நான் செய்துகொண்ட வேலையை விட்டுவிட்டு ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தேன். நான் வேலையை விட்டது எனது பெற்றோர்களுக்கு தெரியாது. ஒரு நாள் என்னுடைய அம்மா, வேலைக்கு போகாமல் என்ன எழுதி கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் இயக்குனராவதற்கு ஸ்கிரிப்ட் எழுதுகிறேன் என்றேன். கொஞ்சம் நேரம் என்னை பார்த்துக் கொண்டே இருந்த அங்கிருந்து சென்று விட்டார். நான் முடிவு எடுத்துவிட்டதாக, அவர் தெரிந்து கொண்டார்.

சில மாதங்கள் முன்பு ரேடியன்ஸ் மீடியா வருண்மணியன் என்னிடம் வந்து படம் தயாரிக்க போகிறேன் என்றார். நான் எனது அம்மாவிடம் சொன்னது ஞாபகம் வந்தது. எனக்கு கவலையாக இருந்தது. ஏனென்றால் சினிமா ஆட்களிடம் ஏமாந்து போகாமல் இருக்கவேண்டுமென்று! படம் ஆரம்பித்து 2 மாதங்கள், அவருடைய நடவடிக்கைகள் பற்றி தெரிய வந்தபோது அவர் உஷாராகத்தான் இருக்கிறார் என்பதை அறிந்தேன்! மேலும் அவர் ஒய்நாட் ஸ்டுடியோவுடன் இணைந்தது எனக்கு திருப்தி அளித்தது.முன்பெல்லாம் சினிமா துறைக்கு அதிகம் படிக்காதவர்கள் தான் வருவார்கள். ஆனால் இப்போது அதிகம் படித்த இளைஞர்கள் வருகிறார்கள். பைலட்டாக வேலை செய்தவர்கள் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் வந்துள்ளனர். இப்படி புதியவர்கள் எல்லாத் துறையிலும் சாதித்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.

‘வாயை மூடி பேசவும்’ டிரைலர் பார்த்தேன். வித்தியாசமாக இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. இதை பார்க்கும்போது இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் மேல் பொறாமையாக இருக்கிறது. அதுவும் அவர் கோபப்படமாட்டார் என்கிறார்கள். அதை எப்படியென்று அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
ஷான் ரோல்டன் இசை நன்றாக இருக்கிறது. இன்றைய தலைமுறையினரின் விருப்பத்திற்கேற்ப நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இன்னும் திறமையான இளைஞர்கள் வந்துள்ளனர். துல்கர் சல்மானுக்கு வாழ்த்துக்கள். அவரை பார்க்கும்போது எனக்கு வயதாகிவிட்டதாக நினைக்கிறேன்’’ என்றார்.

இயக்குனர் செல்வராகவன் பேசும்போது, ‘‘சினிமாவை ஒரு பெரிய விஷயமாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நான் முன்பே சொன்னது போல் உதவி இயக்குனர்களாக வேலை செய்துவிட்டு தான் படம் இயக்க வேண்டும் என்பதில்லை. குறும்படம் இயக்கி அதில் ஜெயித்துவிட்டு நேரடியாக படம் இயக்கலாம். அதற்கு உதாரனம் பாலாஜி மோகன். மேலும் ஒய் நாட் ஸ்டுடியோ சஷிகாந்த், சி.வி.குமார் மற்றும் இளம் தயாரிப்பாளர்கள் பலரும் குறும்பட இயக்குனர்களை ஊக்குவித்து வருவது நல்ல விஷயம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;