‘யான்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

‘யான்’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

முன்னோட்டம் 1-Oct-2014 10:32 AM IST Top 10 கருத்துக்கள்

கடந்த வருடம் வெளியான ‘என்றென்றும் புன்னகை’ படத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு ஜீவாவின் நடிப்பில் வெளியாகவிருக்கிறது ‘யான்’ திரைப்படம். ஜீவா, கே.வி.ஆனந்த், வேல்ராஜ், சந்தோஷ் சிவன் வரிசையில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக களமிறங்கியிருக்கிறார் ரவி கே.சந்திரன். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என டெக்னிக்கலில் உச்சம் தொட்டிருக்கும் ‘யான்’ படம் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) உலகமெங்கும் வெளியாகிறது.

1. பிரபலங்களால் எகிறும் புரமோஷன்கள் : இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் கடந்த வாரம் முதலே டிவி, எஃப்.எம், பத்திரிகை, இணையதளம் என அனைத்து மீடியம்களிலும் ‘யானி’ன் விளம்ரபங்களை பெரிய அளவில் செய்து வருகிறது. அதோடு, ரவி கே.சந்திரனுடன் கொண்டுள்ள நட்பு காரணமாக மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா என பலரும் இப்படம் குறித்து தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். தவிர, ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் ‘யான்’ பட டிரைலர் குறித்து வெளியிட்ட பாராட்டால் இப்படம் பற்றி இந்தியா முழுவதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. விளம்பரங்கள் மற்றும் பிரபலங்களின் கருத்துக்களால் ‘யான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உயர்ந்திருப்பது உண்மை.

2. ஆவலை ஏற்படுத்தும் டிரைலர்: தற்போதைய சினிமா சூழலில் ஒரு படத்தின் டிரைலர், ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த விதத்தில் இப்படத்தின் படுவேகமான டிரைலருக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆக்ஷனையும், ரொமான்ஸையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த டிரைலரில் படத்தின் பிரம்மாண்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வெளிநாட்டு சேசிங் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. ஜீவாவின் வெளிநாட்டு போலீஸ் அதிகாரி போன்ற தோன்றமும் சஸ்பென்ஸை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இந்த டிரைலருக்கு பக்க பலமாக உழைத்திருக்கின்றன. அடுத்தடுத்து படபடவென பறக்கும் வகையில் இந்த டிரைலர் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

3. ‘யூத்’களை கவர்ந்த ஜோடி : பொதுவாக இதுபோன்ற ரொமான்டிக் த்ரில்லர் படங்களில் ஹீரோ, ஹீரோயின் காம்பினேஷன் மிக முக்கியமான ஒன்று. ‘கடல்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ராதாவின் இளைய மகள் துளசி இப்படத்திலும் நாயகியாகியிருக்கிறார். அவருடைய அம்மாவின் புகழாலும், தன்னுடைய வசீகரத் தோற்றத்தாலும் முதல் படத்திலேயே தனக்கான ரசிகர்களை உருவாக்கினார் துளசி. ஜீவாவைப் பற்றி சொல்லவே வேண்டாம்... ‘யூத்’களின் ஃபேவரைட் நாயகனாக உருவெடுத்திருக்கும் இவரும், துளசியும் சேர்ந்து நடித்திருப்பது இளைஞர்களின் மத்தியில் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருப்பது உண்மை.

4. படத்தின் லொக்கேஷன்கள் : கோலிவுட்டின் தற்போதைய சூழலில் ரசிகர்களை பாடல்களின்போது தியேட்டரில் அமர வைப்பதென்பது பெரிய காரியம். பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாக இருந்தால்தான் உட்கார்ந்த இடத்திலேயே ரசிகர்கள் இருப்பார்கள். இல்லையென்றால் கேன்டீன் சேல்ஸ்தான் அதிகரிக்கும். ஆனால், ‘யான்’ படத்தின் பாடல்களுக்கு மட்டுமின்றி பல காட்சிகளுக்காகவும் இதுவரை நாம் பார்த்திராத வெளிநாட்டின் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக மொராக்கோவில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக இருக்குமாம்.

5. ஹாரிஸின் மயக்கும் இசை : ஆரம்பத்தில் ஏற்கெனவே கேட்டதுபோன்ற உணர்வைக் கொடுத்தாலும் ‘யான்’ பாடல்கள் கேட்க கேட்க ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது உண்மை. குறிப்பாக ஹாரிஸின் இசையில் கானா பாலா பாடியிருக்கும் ‘ஆத்தங்கரை....’ பாடல் புது அனுபவத்தைக் கொடுக்கிறது. அப்பாடலின் வீடியோவும் வெளிவந்து ‘யு டியூப்’பில் ஹிட்டடித்திருக்கிறது. பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறாராம் ஹாரிஸ் ஜெயராஜ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாக்பாட் ட்ரைலர்


;