‘காவியத்தலைவன்’ - ஒரு சிறப்புப் பார்வை

‘காவியத்தலைவன்’ - ஒரு சிறப்புப் பார்வை

முன்னோட்டம் 25-Nov-2014 1:23 PM IST Top 10 கருத்துக்கள்

சினிமா என்பது வியாபார நோக்கம் கொண்ட ஒரு தொழிலாக இருந்தாலும், அதில் அவ்வப்போது கலையின் முக்கியத்துவத்திற்கும் மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி.... தெருக்கூத்துக் கலைக்கும், நாடகக்கலைக்கும் கௌரவம் சேர்க்கும் வகையில் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் நாடக மேடை அமைக்கவிருக்கிறது இயக்குனர் வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’. ‘வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’ என ஒவ்வொரு படத்திலும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காத வசந்தபாலன், இந்த முறை சுதந்திரம் வாங்குவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறாராம்.

சித்தார்த், ப்ரித்விராஜ், வேதிகா, அனைகா சோட்டி, நாசர், தம்பி ராமையா, பொன்வண்ணன், சிங்கம் புலி உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன்.கே.எல் எடிட்டிங் செய்திருக்கிறார். அந்தக்கால நாடகக்கலைஞர்களைப் போன்ற மேக்அப், அவர்களின் வாழ்விடங்களுக்கான ‘செட்’ என இப்படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘காவியத்தலைவன்’ படத்தைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானே நாயகனாகப் பார்க்கப்படுகிறார். வரலாற்றுக் கதையான ‘கோச்சடையான்’ படத்தைப் போன்றே ‘காவியத்தலைவன்’ ஆல்பத்திற்கும் ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, மறைந்த காவியக் கவிஞர் வாலி அவர்களின் தேன்தமிழ் வரிகளில் உருவான ‘அல்லி அர்ஜுனா...’ என்ற 10 நிமிடப் பாடல் உணர்ச்சிபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த ஆல்பத்தின் ‘யாருமில்லா தனியரங்கில்...’ பாடல் பட்டி தொட்டியெங்கும் எல்லாதரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. காதுகளுக்கு விருந்து படைத்த இந்தப் பாடல்களை தியேட்டரில் கண்டுகளிக்க ரசிகர்கள் பலத்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

‘ஒய் நாட் ஸ்டுடியோ’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அதிக லாபம் தரும் ‘என்ஆர்ஏ’ என்ற புதிய முறையை இப்படத்தின் விநியோகத்தில் பயன்படுத்தியிருக்கிறார்களாம். இந்த முறை வெற்றிபெற்றால், ‘காவியத்தலைவன்’ படத்தின் விநியோக முறை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தனி இடம் பிடிக்கும்.

கிட்டத்தட்ட 3 வருட காலங்கள் நிறைய விஷயங்களை சேகரித்து உருவாகக்கப்பட்டிருக்கும் இந்த ‘காவியத்தலைவன்’ தமிழகமெங்கும் வரும் 28ஆம் தேதி 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கி, தமிழக அரசின் வரிவிலக்கிற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ள இப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளதாம். மலையாளத்தில் ‘பிரதி நாயகன்’ என்ற பெயரில் இப்படம் விரைவில் வெளியாகுமாம்.

சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் வெளிவந்து தமிழ் சினிமாவின் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த வெற்றிப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ வரிசையில் வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ படமும் இடம்பிடிக்கும் என எதிர்பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'காவியத்தலைவன்' படத்தை பற்றி விஜய்


;