‘கள்ளப்படம்’ திரைப்படத்தில் புதிய முயற்சி!

‘கள்ளப்படம்’ திரைப்படத்தில் புதிய முயற்சி!

செய்திகள் 14-Mar-2015 11:57 AM IST VRC கருத்துக்கள்

‘இறைவன் ஃபிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் பொன்னிறைவன் தயாரித்துள்ள படம் ‘கள்ளப்படம்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜே.வடிவேல் இயக்கியுள்ளார். இயக்குனர் வடிவேலிடம், ‘அது என்ன கள்ளப்படம்?’ என்று கேட்டால், ‘இது நல்ல ஒரு படம்’ என்கிறார் நம்பிக்கையுடன்!

ஆனந்த விகடன் பத்திரிகையில் நிருபராக பணியாற்றி, பிறகு இயக்குனர் மிஷ்கினுடன் ‘நந்தலாலா’, ‘யுத்தம் செய்’, ‘முகமூடி’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவத்துடன் இந்த ‘கள்ளப்படம்’ படத்தை இயக்கியிருக்கிறார் வடிவேல்! இவர் இப்படத்தை இயக்குவதோடு நிற்கவில்லை! சினிமாவில் சாதிக்க துடிக்கும் நான்கு இளைஞர்கள் பற்றிய இப்படத்தில் இயக்குனராக துடிக்கும் ஒரு இளைஞனின் கேரக்டரில் நடிக்கவும் செய்திருக்கிறார்! அத்துடன் தன்னுடன் ஆனந்த விகடன் பத்திரிகையில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய ஸ்ரீராம் சந்தோஷ் என்பவரை இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியிருப்பதோடு, அவரை இப்படத்தில் ஒளிப்பதிவாளராக துடிக்கும் இளைஞனின் கேரக்டரில் நடிக்க வைக்கவும் செய்திருக்கிறார். அத்துடன் ‘கள்ளப்படம்’ படத்திற்கு இசை அமைக்கும் ‘கே’யை படத்தில் இசை அமைப்பளராக வேண்டும் என்ற கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞனின் பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பதோடு, இப்படத்திற்கு எடிட்டிங் பொறுப்பேற்றுள்ள காகின் என்பவரை படத்தில் சினிமாவில் படத்தொகுப்பாளராக வரவேண்டும் என்ற முயற்சிகளோடு கோலிவுட்டிற்கு வரும் இளைஞரின் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இப்படி படத்தின் முக்கிய நான்கு டெக்னீஷியன்களே அப்படத்தில் அந்தந்த கேரக்டர்களில் நடித்து ஒரு புது முயற்சியை செய்திருக்கிறார்கள்!

இந்த ‘கள்ளப்படம்’ படத்தில் ஹீரோயின் என்று சொல்ல கூடிய வகையில் கேரக்டர் இல்லையாம்! மாறாக, நெகட்டீவான ஒரு கேரக்டரில் ‘சுட்டகதை’ படப் புகழ் லட்சுமி ப்ரியா நடித்துள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு கோலிவுட்டிற்கு வரும் இளைஞர்கள் பற்றி ஏற்கெனவே பல படங்கள் வெளிவந்துள்ளது என்றாலும் இப்படம் அப்படங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும் என்று கூறும் இயக்குனர் வடிவேல், இப்படத்தில் எல்லா உதவி இயக்குனர்களின் வாழ்க்கையும் அடங்கியிருக்கும் என்கிறார்.
செந்தில், சிங்கம் புலி, நரேன், கவிதாபாரதி, சமையல் கலை நிபுணர் தாமு ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னிறைவன் ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணிபுரிந்து வருபவர்! இவருடன் இப்படத்தில் டாக்டர் கார்த்திக் செந்தில் ராஜா இணை தயாரிப்பாளராக இருக்கிறார். ‘கள்ளப்படம்’ வருகிற 20 தேதி ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களம் - டிரைலர்


;