பசங்க 2 - டிரைலர் விமர்சனம்

பசங்க 2 - டிரைலர் விமர்சனம்

கட்டுரை 17-Oct-2015 1:57 PM IST Chandru கருத்துக்கள்

வெளிநாட்டு சினிமாவை கம்பேர் செய்கையில் இந்திய சினிமாவில் குழந்தைகளுக்கான படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் வெளிவருகின்றன. அப்படி வரும் படங்களிலும் ரசிகர்களை, குறிப்பாக குழந்தைகளைக் கவரும் வகையில் எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிஞ்சிப் பூதான்! தமிழில் அப்படி வெளியான படங்கள் என யோசிக்கத் தொடங்கினால் மைடியர் குட்டிச்சாத்தான், அஞ்சலி படங்களுக்குப் பிறகு பாண்டிராஜின் ‘பசங்க’, ‘மெரினா’ படங்கள்தான் நம் நினைவுக்கு வரும். சமீபத்தில் வெளிவந்த ‘காக்கா முட்டை’க்கும் இந்த பட்டியலில் இடம் உண்டு. தன் ஆதர்ச நாயகர்களான குழந்தைகளை மையமாக வைத்து மீண்டும் ஒரு படத்தோடு வந்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘பசங்க 2’ படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டிரைலரும் வெளிவந்திருக்கிறது. டிரைலரில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

குழந்தைகளின் ஆட்டம், பாட்டம், கேலி, கிண்டல்களோடு ஜாலியாக ஆரம்பிக்கும் இந்த டிரைலர், முடியும்போது மனதை லேசாக கனக்கச் செய்கிறது. கவின், நயனா என்ற இரண்டு குழந்தைகள்தான் ‘பசங்க 2’வின் நாயகர்கள், அவர்களை மையமாக வைத்தே இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் நடவடிக்கையும், கல்விக்கூடங்கள் அவர்களுக்குள் தோற்றுவிக்கும் மாற்றத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையுமே இப்படம் பேசவிருக்கிறது என்பதையே இந்த டிரைலர் நமக்கு காட்டுகிறது.

கார்த்திக் குமார், பிந்துமாதவி, ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ் ஆகியோருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சூர்யாவும், அமலாபாலும் சிறப்புத் தோற்றம் ஒன்றில் வருகிறார்கள். கலர்ஃபுல் ஒளிப்பதிவு, ஃபீல்குட் இசை, செயற்கைத்தனம் இல்லாத நடிப்பு என ‘பசங்க 2’ டிரைலர் ரசிகர்களை பெரிதாக கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படம் தமிழில் ஒரு ‘தாரே ஜமீன் பர்’ ஆக இருக்கும் என்பதற்கு இந்த டிரைலர் உத்தரவாதம் தந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;