குழந்தைகள் முன்னிலையில் நடைபெற்ற ‘பசங்க-2’ ஆடியோ விழா!

குழந்தைகள் முன்னிலையில் நடைபெற்ற ‘பசங்க-2’ ஆடியோ விழா!

கட்டுரை 17-Oct-2015 3:04 PM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், பாண்டிராஜின் ‘பசங்க புரொடக் ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பசங்க-2’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. குழந்தைகளை வைத்து குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் இது என்பதால் இவ்விழாவுக்கு நிறைய குழந்தைகளும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கும் அரோல் கொரேலியின் வயலின் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து ‘மைம்’ கோபி தலைமையில் குழந்தைகளின் மைம் நாடக நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படத்தில் பங்காற்றியவர்கள் மேடைக்கு வந்து படத்தை பற்றி வாழ்த்திப் பேசினர். மேடைக்கு வந்த பாண்டிராஜ், ‘இந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான்’’ என்று கவின், நயனா ஆகிய இரண்டு குழந்தைகளை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து பேசும்போது, ‘‘பசங்க’ படத்தை முடித்து ‘மெரினா’ படத்தை பண்ணும்போதே இந்த கதை என் மனதில் இருந்தது. அதை படமாக்கும் சந்தர்பம் இப்போது தான் கிடைத்தது. இந்த கதைய படமாக்க முன் வந்த சூர்யா சாருக்கு நன்றி’’ என்றார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, ‘‘இப்போது இருக்கிற சூழ்நிலையில் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. அதற்கு நேரமும் கிடையாது. ஏன் என்றால் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போகிறார்கள். அதனால் இப்போது குழந்தைகள் எல்லாம் ஐ-போன், ஐ-பாட் வைத்து தான் விளையாடுகிறார்கள். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், பள்ளிகளில் குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும் போன்ற நல்ல கருத்துக்களை தாங்கி வரும் படம் இது என்று நினைக்கிறேன். பெண்களுக்காக ‘36 வயதினிலே’ படத்தை எடுத்தார். இப்போது குழந்தைகளுக்காக இந்த படம்! இது போன்ற படைப்புகளை எடுக்க வேண்டும் என்ற ஐடியா எல்லாம் எப்படி அண்ணாவுக்கு வருகிறது என்று தெரியவில்லை. உண்மையை சொன்னால் அண்ணாவை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும்’’ என்றார்.

இயக்குனர் சீனுராமி பேசும்போது, ‘‘வழக்கமாக எந்த மேடையேறி பேசும்போது எனக்கு ஒரு பதட்டம் ஏற்படும். ஆனால் இந்த விழாவுக்கு வந்து பார்த்தபோது இங்கு நிறைய குழந்தைகள் வந்திருப்பதை பார்த்து மனம் மகிழ்ந்தது. பாண்டிராஜ் தனது முதல் படமான ‘பசங்க’ மூலமே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். இந்த காலகட்டத்துக்கு தேவையான இதுபோன்ற ஒரு படத்தை பதிவு செய்தமைக்கு அவருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை தயாரித்திருக்கும் சூர்யா அவர்கள் பெண்களுக்காக ‘36 வயதினிலே’ படத்தை எடுத்தார். இப்போது குழந்தைகளுக்காக இந்த படத்தை எடுத்திருக்கிறார். அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி பயில நிறைய உதவிகளை செய்து வருகிறர். அவரது ஓவ்வொரு முயற்சிகளும் சமூகத்திற்கு பயன்படும் வகையில் உள்ளது, அந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். ‘பசங்க’ படத்தை விட ‘பசங்க-2’ படம் மாபெரும் வெற்றிபெறவும் என் வாழ்த்துக்கள்’’ என்றார்.

இவர்களை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, சி.வி.குமார், தனஞ்சயன், இயக்குனர்கள் சமுத்திரகனி, பிரபு சாலமன், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய், சுசீந்திரன், படத்தில் நடித்த பிந்துமாதவி, அமலாபால், ராமதாஸ், வித்யா ஆகியோரும் பேசினார்கள். சூர்யா அனைவருக்கும் நன்றி கூறினர்.

விழா இறுதியில் விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் ‘பசங்க-2’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. விரைவில் ரிலீசாகவிருக்கிற இப்படத்தின் விநியோக உரிமையை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் கைபற்றியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;