கூஸ்பம்ஸ் - திரை விமர்சனம்

3டியில் பார்ப்பது கூடுதல் அனுபவத்தைத் தரும்!

விமர்சனம் 2-Nov-2015 11:08 AM IST Top 10 கருத்துக்கள்

ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜுமாஞ்சி’ படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. குழந்தைகள் கையில் கிடைக்கும் மேஜிக் போர்டு கேம் ஒன்றிலிருந்து விதவிதமான விலங்குகள் வெளிவருவது போன்று வித்தியாசமான கதையமைப்பில் உருவான அப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. கிட்டத்தட்ட ‘ஜுமாஞ்சி’ போலவே மீண்டும் ஒரு படம் 3டியில் தற்போது வெளிவந்திருக்கிறது. படத்தின் பெயர் ‘கூஸ்பம்ஸ்’.

தனது அம்மாவுடன் நியூயார்க்குக்கு வரும் நாயகன் ஸேக், தன் பக்கத்து வீட்டுப் பெண் ‘ஹன்னா’வுடன் நட்பாகிறான். ஆனால் இது ஹன்னாவின் அப்பா ஷிவர்ஸ்க்கு பிடிக்காததால், ஸேக்கை எச்சரித்து விரட்டுகிறார். அன்றைய இரவு ஹன்னாவின் வீட்டிலிருந்து அலறல் சப்தம் கேட்கவே, ஸேக் அவள் வீட்டிற்குள் செல்ல முயல்கிறான். ஆனால் மீண்டும் ஷிவர்ஸால் அவன் விரட்டப்படுகிறான். ஷிவர்ஸ் வீட்டை விட்டு வெளியே சென்றதும், தன் நண்பனை அழைத்துக் கொண்டு ஹன்னா வீட்டிற்குள் பதுங்கி பதுங்கி செல்கிறான் ஸேக். அந்த சமயம், வீட்டினுள்ளே இருக்கும் புத்தக அலமாரியிலிருந்து வினோதமான சப்தங்கள் எழவே, அதிலிருந்து புத்தகம் ஒன்றை எடுத்துப் பார்க்கிறான் ஸேக். அந்த புத்தகம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமாகும் ஸேக், அதனுடைய சாவியைக் கண்டுபிடித்து, அதை திறக்கிறான். திறந்த மறுவிநாடியே அதிலிருந்து மிகப்பெரிய மனிதக் குரங்கு ஒன்று வெளியே வருகிறது. அதேநேரம் ஹன்னாவின் அப்பாவும் வீட்டிற்குள் நுழைகிறார்.

எதனால் அந்த புத்தகத்தைத் திறந்ததும் இப்படி நடக்கிறது? அதன்பிறகு என்னென்ன அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்கின்றன? மற்ற புத்தகங்களிலும் காத்திருக்கும் ஆச்சரியங்கள் என்னென்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது ‘கூஸ்பம்ஸி’ன் திரைக்கதை.

இது ஒரு காமெடியான ஃபேன்டஸி அட்வெஞ்சர் படம் என்பதால் ‘லாஜிக்’ என்ற வஸ்துவை ஆள் வைத்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் சொல்லப்படும் ‘பெட் டைம் ஸ்டோரி’ டைப்பிலேயே இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்கள் டேரன் லேம்கே மற்றும் ஸ்காட் அலெக்ஸாண்டர். இவர்களின் கைவண்ணத்தில் உருவான திரைக்கதைக்கு தன் இயக்கம் மூலம் உயிர்கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரோப் லெட்டர்மேன்.

கிட்டத்தட்ட ‘ஜுமாஞ்சி’ படத்தை ஞாபகப்படுத்துவதுபோல்தான் உள்ளது இப்படமும். அதில் பகடையை உருட்ட, மேஜிக் அட்டையிலிருந்து புதிது புதிதாக விலங்குகள் கிளம்பி வரும். இந்த ‘கூஸ்பம்ஸி’ல் புத்தகங்களை ஒவ்வொன்றாக திறக்க, அதிலிருந்து மிகப்பெரிய ஜந்துக்கள், ஆக்ரோஷமான விலங்குள், வில்லத்தனமான பேய்ப்பட கதாபாத்திரங்கள் என படையெடுக்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் ‘ஜுமாஞ்சி’ படத்திலிருந்த வேகமும், விறுவிறுப்பும் இப்படத்தில் சற்று குறைவுதான். விஷுவல் எஃபெக்ட்ஸ், 3டி உருவாக்கம் போன்றவையே ‘கூஸ்பம்ஸி’ன் பெரிய பலம். முழுக்க முழுக்க காமெடி படமாக ‘கூஸ்பம்ஸ்’ உருவாக்கப்பட்டிருந்தாலும் அதையும் தாண்டி நட்பு, காதல், சென்டிமென்ட், திகில் என பலவித அனுபவங்களையும் இப்படம் தருகிறது.

இப்படத்தின் முதல் அரைமணி நேரம் ரொம்பவே மெதுவாக நகர்கிறது. முதல் புத்தகம் திறக்கப்பட்டதும் படம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. அதன்பிறகு இடைவேளை வரை பல திகில் காட்சிகளுடன் விறுவிறுப்பாக பயணிக்கிறது. ஆனால் இரண்டாம்பாதியில் கதையை எப்படி நகர்த்துவது என்பதில் சற்று தடுமாறியிருக்கிறார்கள். இதுதான் பிரச்சனை, இந்தப் பிரச்சனை இப்படித்தான் சரியாகப் போகிறது என்பது ஒவ்வொரு காட்சிக்கும் முன்பாகவே நம்மால் எளிதாக யூகிக்க முடிவதால் பெரிய ஆச்சரியங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை. க்ளைமேக்ஸும் எதிர்பார்த்தபடியே அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு, டெக்னிக்கல் விஷயங்கள் போன்றவை இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளன. திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் பெரிதாக ரசித்திருக்கலாம். ஆனாலும், குழந்தைகளுடன் சென்று ஜாலியாக ரசித்துவிட்டு வருவதற்கு ஏற்ற படம்தான் இந்த ‘கூஸ்பம்ஸ்’. 3டியில் பார்ப்பது கூடுதல் அனுபவத்தைத் தரும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;