‘கபாலி’, ‘தெறி’யை தொடர்ந்து ‘நையப்புடை’

‘கபாலி’, ‘தெறி’யை தொடர்ந்து ‘நையப்புடை’

செய்திகள் 22-Dec-2015 2:19 PM IST VRC கருத்துக்கள்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ‘கபாலி’, ‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் ‘தெறி’ ஆகிய இரண்டு பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, ‘நையப்புடை’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விஜய் கிரண் இயக்கும் இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, ‘சித்து ப்ளஸ் டூ’ படத்தில் ஹீரோயினாக நடித்த சாந்தினி கதையின் நாயகியாக நடிக்கிறார். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 73 வயது கோபக்கார முதியவர் ஒருவர், பத்திரிகை நிருபர் ஒருவர், ஒரு ரேடியோ ஜாக்கி இம்மூவருக்குள் நடக்கும் உணர்ச்சிமிக்க ஆக்‌ஷன் கதையாம் இப்படம்! 73 வயது கோபக்கார முதியவராக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க, பத்திரிகை நிருபராக பா.விஜய் நடிக்கிறார். ரேடியோ ஜாக்கியாக சாந்தினி நடிக்கிறார்.

படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஜீவன் கவனிக்கிறார். தாஜ்நூர் இசை அமைக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் ஜீவனின் புதல்வர் தான் இப்படத்தை இயக்கும் விஜய் கிரண்! 19 வயது இளைஞரான விஜய் கிரண், சில குறுபடங்களை இயக்கிய அனுபவங்களோடு, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படம் சம்பந்தப்பட்டு நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு பேசுபோது, ‘‘என் அலுவலகத்திற்கு ஒரு நாள் என்னை பார்க்க வந்திருந்தார் விஜய் கிரண்! அவரிடம் என்ன தம்பி வேண்டும் என்றேன். ‘நான் ஒரு கதை வைத்திருக்கிறேன், அதை கேளுங்கள் சார்’ என்றார். சரி கதையை சொல்லுங்கள் என்றேன்! அப்போது அவர் ‘எனக்கு கதை சொல்ல தெரியாது சார்! எல்லாம் இந்த ‘லேப் டாப்’பில் இருக்கிறது, இதை ஒரு முறை பாருங்கள் சார்’ என்றார். அவர் ‘லேப் டாப்’பில் பண்ணி வைத்திருந்தை பார்த்ததும் எனக்கு இந்த தம்பி மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. ஒரு வித்தியாசமான கதையை பண்ணி வைத்திருந்தார்! இக்கதையை நாம் படமாக்குவோம்! இந்த கதைக்கு யார் யார் வேண்டும் என்று அவரிடம் கேட்டேன்! அவர் கேட்டுக் கொண்டவர்கள் தான் எஸ்.ஏ.சி., பா.விஜய் முதலானோர்! இக்கதைக்கு அவர்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்ற அவரது முடிவு சரியாகதான் இருக்கிறது என்பதை நானும் உணர்ந்து அவர்களையே பேசி முடித்து கொடுத்தேன். இப்போது அவர் எடுத்து முடித்த காட்சிகளை பார்த்தப்போது அவரது முடிவுகள் சரியாக தான் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். ‘கபாலி’, ‘தெறி’ படங்கள் வரிசையில் இந்த ‘நையப்புடை’யும் பேசப்படும்’’ என்றார் தாணு!

தாணுவை தொடர்ந்து இப்படம் குறித்து இயக்குனர்கள் விக்ரமன், வெற்றிமாறன், எஸ்.ஜே.சூர்யா, ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ தியாகராஜன், டி.சிவா, பி.டி.செல்வகுமார் முதலானோரும் பேசினார்கள். இப்படத்தில் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;