2015ல் ஏமாற்றிய ‘டாப் 10’ திரைப்படங்கள்!

2015ல் ஏமாற்றிய ‘டாப் 10’ திரைப்படங்கள்!

கட்டுரை 2-Jan-2016 1:16 PM IST Top 10 கருத்துக்கள்

வெற்றியும், தோல்வியும் சகஜம்தான் என்றாலும், வெற்றியைவிட தோல்வியையே அதிகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. வியாபார ரீதியாக தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் நஷ்டப்படுத்துவதோடு மட்டுமின்றி, ரசனை ரீதியாகவும் பல படங்கள் ஒவ்வொரு வருடமும் ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது, சம்பந்தப்பட்ட படங்களின் மீது எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக செய்யப்படும் மிதமிஞ்சிய விளம்பர யுக்திகள்தான். அதேபோல ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் அல்லது நடிகரின் அடுத்த படத்திற்கு தானாகவே எதிர்பார்ப்பும் கூடிவிடுகிறது. இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியாமல் போன படங்களே தோல்விப் படங்களாகவும் அமைந்துவிட்டன. அந்த வகையில் 2015ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படங்களின் ‘டாப் 10’ பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். (ரிலீஸ் தேதி அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது).

1. எனக்குள் ஒருவன் (மார்ச் 6)பல பேருடைய ‘நிதி’ மூலம் உருவாகி வெளிவந்து வெற்றிபெற்ற ‘லூசியா’ கன்னடப்படத்தின் தமிழ் ரீமேக் என்பதால் ‘எனக்குள் ஒருவன்’ படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது உண்மை. அதோடு சித்தார்த் நாயகனாக நடித்திருந்தது, புதுமுயற்சிகளை ஊக்குவிக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பு, சந்தோஷ் நாராயணின் சூப்பர்ஹிட் பாடல்கள் என படத்தில் பல ப்ளஸ்களும் இருந்தன. ஆனால், கன்னடத்தில் பெற்ற வெற்றியை தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ பெறவில்லை. படம் மெதுவாக பயணிக்கிறது என்ற குற்றச்சாட்டை விமர்சனங்களில் பரவலாக காணமுடிந்தது. படத்தின் ஒரே ஆறுதல் பாடல்கள் மட்டுமே.

2. உத்தமவில்லன் (மே 2)இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸருக்கு கிடைத்த வரவேற்பும், சர்ச்சையுமே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை பன்மடங்கு அதிகப்படுத்தியிருந்தது. உத்தமன், மனோரஞ்சன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் இப்படத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன். அதில் மனோரஞ்சன் பகுதி அனைத்து ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட, உத்தமன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை சோர்வடைய வைத்தன. இதனால் இப்படத்திற்கான வரவேற்பு குறைந்து, பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக சறுக்கியது. பட்ஜெட் அதிகம் என்பதால் நினைத்த வசூலை இப்படம் எட்டமுடியாமல் போனது கசப்பான உண்மை.

3. எலி (ஜூன் 19)‘தெனாலிராமனி’ல் ஏமாற்றிய வடிவேலு, ‘எலி’யில் எப்படியும் மீண்டு வந்து சாதிப்பார் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ‘பீரியட் காமெடி ஃபிலிம்’ என்ற போர்வையில் அரதப்பழசான காமெடிக் காட்சிகளை வைத்து, 60களில் வெளிவந்த தமிழ்ப் படங்களைப்போல் இப்படத்தை உருவாக்கியிருந்தது படத்தின் பெரிய மைனஸ். 2015ல் வெளிவந்த படங்களில் பெரிய ஏமாற்றத்தை தந்த படங்களில் ‘எலி’யும் ஒன்று.

4. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (ஆகஸ்ட் 14)‘இனி குடி சம்பந்தப்பட்ட காட்சிகள்’ தன் படத்தில் இடம்பெறாது என அறிவித்திருந்த இயக்குனர் எம்.ராஜேஷ் தன் படத்திற்கு பெயரையே மதுபான வகையைக் குறிக்கும் வகையில் வைத்து ‘பப்ளிசிட்டி’ உண்டாக்கினார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் வெற்றிக்கூட்டணியான ஆர்யா, சந்தானத்தை மீண்டும் களமிறக்கி, அவர்களுடன் தமன்னாவையும் சேர்த்துக்கொண்டார் ராஜேஷ். ஆனால், அதே டெம்ப்ளேட் காமெடிக் காட்சிகளால் இப்படம் ரசிகர்களை பெரிதாக சோர்வடைய வைத்தது. பெரும்பாலான விமர்சனங்கள் இப்படத்தை ‘ஸ்டாண்டப் காமெடி’ என வர்ணித்தன.

5. பாயும் புலி (செப்டம்பர் 4)‘பாண்டியநாடு’ வெற்றிக்கூட்டணியான இயக்குனர் சுசீந்திரனும், விஷாலும் மீண்டும் கைகோர்த்த படம்தான் ‘பாயும் புலி’. முதல்முறையாக விஷாலுடன் காஜல் களமிறக்கப்பட்டார். சமுத்திரக்கனி வித்தியாசமான வில்லன் வேடம் ஏற்றிருந்தார். டிரைலர், பாடல்கள் என ரிலீஸுக்கு முன்பு ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பை படம் தக்க வைக்காததுதான் சோகம். பாண்டியநாடு படத்தில் இருந்த யதார்த்தமான காட்சியமைப்புகள் ‘பாயும் புலி’யில் இல்லாததே படத்திற்கு பின்னடைவாக அமைந்தது.

6. யட்சன் (செப்டம்பர் 11)இயக்குனர் விஷ்ணுவர்தன், ஆர்யா, யுவன் என்ற சூப்பர் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகின. ஆனந்த விகடனில் எழுத்தாளர்கள் சுபா எழுதிய தொடர்கதையை ‘யட்சன்’ படமாக மாற்றியிருந்தார் விஷ்ணுவர்தன். ஆக்ஷன், காதல் படமாக வெளிவந்த இப்படம் சுவாரஸ்யமில்லாத திரைக்கதை அமைப்பால் எடுபடாமல் போனது. பாக்ஸ் ஆபிஸிலும் சறுக்கியது.

7. புலி (அக்டோபர் 1)ஃபேன்டஸி படத்தில் விஜய்... அதுவும் சிம்புதேவன் இயக்கத்தில்... இது போதாதா இப்படத்திற்கான எதிர்பார்ப்பை எக்குத்தப்பாய் எகிற வைக்க? விஜய், சுதீப், ஸ்ருதிஹாசன், ஹனசிகா, ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவானது இப்படம். குழந்தைகளை கவரும் வகையிலான ஃபேன்டஸி கதையில், விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் காரணமாக தேவையில்லாத பஞ்ச் வசனங்கள், ஓவர் பில்டப் ஆக்ஷன் காட்சிகளை அதிகமாக வைத்திருந்தார் சிம்புதேவன். இது படத்திற்கு மைனஸாக அமைந்தது. அதோடு இது குழந்தைகளுக்கான படம் என்பதையும் ஆரம்பத்திலிருந்தே ‘புரமோட்’ செய்யத் தவறிவிட்டார்கள். ‘பாகுபலி’ பார்த்து வாய்பிளந்த ரசிகர்களிடம், ‘புலி’ கிராபிக்ஸ் காட்சிகள் எடுபடவில்லை. தயாரிப்புத்தரப்பே ‘புலி’யால் நஷ்டம் என சொல்லும் அளவுக்கு அமைந்துவிட்டது இப்படம் தந்த ஏமாற்றம்!

8. 10 எண்றதுக்குள்ள (அக்டோபர் 21)சின்னப்பசங்களை வைத்தே சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனராயிற்றே, விக்ரம் போன்ற சூப்பர் ஹீரோ கிடைத்தால் எப்படியெல்லாம் புகுந்து விளையாடியிருப்பார் என ரசிகர்கள் அளவில்லாத உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், மொத்த உற்சாகமும் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே வடிந்துபோனது. ‘கோலிசோடா’வில் இருந்த சுவாரஸ்யமான, லாஜிக்கலான திரைக்கதை ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் இல்லாததே படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

9. இஞ்சி இடுப்பழகி (நவம்பர் 27)20 கிலோ எடையைக்கூட்டி, இந்திய நடிகைகள் செய்யத் துணியாத காரியத்தில் இப்படத்திற்காக தைரியமாக குதித்தார் அனுஷ்கா. ‘வெயிட்’ சம்பந்தப்பட் இப்படத்தின் திரைக்கதை ரொம்பவும் ‘வீக்’காக இருந்ததால் படம் சுவாரஸ்யமில்லாமல் போனது. அதோடு இரண்டாம்பாதியில் மையக்கருவை விட்டுவிட்டு வேறொரு ‘டிராக்’கில் படம் பயணித்ததும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது எனலாம். அனுஷ்காவின் உழைப்பை ‘இஞ்சி இடுப்பழகி’ பயன்படுத்தத் தவறிவிட்டது என்பதே சோகமான உண்மை.

10. தங்கமகன் (டிசம்பர் 18)2014ஆம் ஆண்டின் ‘பிளாக்பஸ்டர்’ வெற்றிப்படமான ‘வேலையில்லா பட்டதாரி’யின் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் என்பது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். விஐயின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அனிருத்தின் இசை. ஆனால், ‘தங்கமகனி’ல் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக எடுபடவில்லை. அதோடு படத்தின் இரண்டாம்பாதி ‘சீரியல்’ போல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் முணுமுணுத்தார்கள். தனுஷ் பேசிய தேவையில்லாத பஞ்ச் வசனங்களும் எடுபடாமல் போனது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்ரு ட்ரைலர்


;