‘பெங்களூர் நாட்கள்’ - பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

‘பெங்களூர் நாட்கள்’ - பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

கட்டுரை 3-Feb-2016 11:41 AM IST Chandru கருத்துக்கள்

மலையாள படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், ரீமேக் செய்யப்பட்ட படங்களில் வெற்றிப்படங்களாக அமைந்தவை சொற்பமே. அந்தவகையில், இந்த ‘பெங்களூர் நாட்கள்’ படம் அந்த சொற்ப பட்டியலில் இடம்பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. அதைப்பற்றிய ஒரு அலசலை இங்கே பார்க்கலாம்.

1. வெற்றிப்பட ரீமேக்:

அஞ்சலிமேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா, பார்வதி, நித்யாமேனன், இஷா தல்வார் என பெரும் நட்சத்திரப் பட்டாளங்களோடு வெளிவந்த மலையாள படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தின் ரீமேக்தான் இப்போது ‘பெங்களூர் நாட்கள்’ படமாக தமிழ் பேசுகிறது. நட்பு, காதல், பாசம், அன்பு என உணர்ச்சிகள் நிறைந்த படமாக வெளிவந்த ‘பெங்களூர் டேஸ்’ மலையாள படம் சென்னையில் மட்டுமே நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது என்றால், இப்படம் கேரளாவில் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நம்மூர் ரசிகர்கள் இப்படத்தை மலையாளத்தில் பார்த்திருந்தால்கூட, அதன் தமிழ் வெர்ஷன் எப்படியிருக்கும் என்பதைக் காணவும் பெரிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

2. நட்சத்திரப் பட்டாளங்கள்:

இது ஒரு மல்டி ஸ்டார் படம் என்பதால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கும் பரிச்சயமானவர்களை ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். தமிழ் பிரபலங்களான ஆர்யா, பாபி சிம்ஹாவுடன் ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு நஸ்ரியா நடித்த கேரக்டரில் ஸ்ரீதிவ்யாவும், நித்யாமேனன் நடித்த கேரக்டரில் சமந்தாவும், மலையாளத்தில் நடித்த அதே கேரக்டரை பார்வதியும் செய்திருக்கிறார்கள். கூடவே யூத்களை கவரும் வண்ணம் ராய் லட்சுமியையும் களத்தில் இறக்கியிருக்கிறார்கள். இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுவதற்கு இந்த நட்சத்திரப் பட்டியல் மிக முக்கிய காரணம்.

3. பிவிபியின் பிரம்மாண்ட தயாரிப்பு:

பொதுவாக ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படங்கள் என்றாலே பிரம்மாண்டமானதாகத்தான் இருக்கும். அதிலும் இந்த ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் முக்கிய நடிகர்கள் பலரும் நடித்திருப்பதால் ‘பட்ஜெட்’டைப் பற்றி கவலைப்படாமல் தாராளமாகச் செலவு செய்திருக்கிறார்கள். கண்ணைக்கவரும் அழகிய இடங்களில் இப்படத்திற்காக படப்பிடிப்பை நடத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கே.வி.குகன். அதோடு ஸ்ரீதிவ்யாவின் அறிமுக திருமணப் பாடல் ஒன்றிற்காக மட்டுமே 100க்கும் மேற்பட்ட துணை நடிகர்களைப் பயன்படுத்தி, கோலகலமாக அப்பாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.

4. இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர்:

‘பொம்மரிலு’ தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பாஸ்கர். சித்தார்த், ஜெனிலியா நடித்த இப்படம் தெலுங்கு சினிமா வரலாற்றில் பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியே பாஸ்கராக இருந்தவரை ‘பொம்மரிலு’ பாஸ்கராகவும் மாற்றியது. இதே படம் ‘சந்தோஷ் சுப்பிரமணியமா’க ரீமேக்காகி தமிழிலும் சூப்பர்ஹிட்டாக அமைந்தது. அதோடு பாஸ்கரின் இரண்டாவது படமான ‘பருகு’வும் தெலுங்கில் சூப்பர்ஹிட். இதனால் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ‘பெங்களூர் நாட்கள்’ உருவாகியிருப்பதே தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

5. டிரைலர், பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு:

இது ஒரு ரீமேக் படம் என்பதால் இப்படத்தின் டீஸரை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுதாக ஈடுசெய்தது ‘பொங்களூர் நாட்கள்’ டீஸர். டிரைலருக்கும் நல்ல வரவேற்பு. அதோடு மலையாளத்தில் இசையமைத்த கோபி சுந்தர்தான் ‘பெங்களூர் நாட்கள்’ தமிழ் படத்திற்கும் இசையமைத்துள்ளார். குறிப்பாக ஸ்ரீதிவ்யா திருமணப் பாடல் அப்படியே மலையாள வெர்ஷனைப்போலவே உருவாகியிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ். பாடல்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

‘பெங்களூர் நாட்கள்’ படம் வரும் 5ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வாங்கியிருப்பதால் இப்படத்தை குடும்பத்துடன் வந்து கண்டுகளிக்கலாம். தமிழகத்தில் மட்டுமே 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ஒட்டுமொத்தமாக உலகளவில் 500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;