காதலும் கடந்து போகும் - விமர்சனம்

மெல்ல கடந்து சென்றிருக்கிறது இக்காதல்!

விமர்சனம் 12-Mar-2016 10:40 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Nalan Kumarasamy
Production : Thirukumaran Entertainment
Starring : Vijay Sethupathi, Madonna Sebastian, Samuthirakani
Music : Santhosh Narayanan
Cinematography : Dinesh Krishnan
Editing : Leo John Paul

‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய டிரன்டை உருவாக்கிய இயக்குனர் நலன் குமரசாமியும், நடிகர் விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இப்படத்தில் மேலும் ஒரு போனஸாக இளைஞர்களின் திடீர் கனவுக்கன்னியாக மாறியிருக்கும் ‘பிரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டினும் இணைந்திருக்கிறார். ‘மை டியர் டெஸ்பரடோ’ எனும் கெரியன் படத்தின் அதிகாரபூர்வ தழுவலாக உருவாகியிருக்கும் ‘காதலும் கடந்து போகும்’ படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு எப்படி?

கதைக்களம்

எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டு, ரவுடியாக உதார்விட்டுக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதிக்கும், ஐடி கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வரும் மடோனா செபாஸ்டியனுக்கும் இடையே கடந்து போகும் காதலைப் பற்றிப் பேசுவதுதான் இப்படத்தின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

இப்படம் பற்றி பேசுவதற்கு முன், ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியம். ஒரு அப்பாவி ரவுடிக்கும், அழகான அடாவடிப் பெண்ணுக்கும் இடையே மலரும் மெல்லிய காதலை ஒரு பூ மலர்வது போன்று மெதுவாக இப்படம் பேசியிருப்பதால், இதன் திரைக்கதையையும் மெதுவாக நகரும் வகையிலேயே உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி. கொரியன் படத்தின் சாராம்சம் குறையாமல், முடிந்தளவுக்கு அதை அப்படியே தமிழில் தர முயன்றிருக்கிறார் இயக்குனர். அதனால் தேவையில்லாத காமெடிகள், பாடல்கள் (க..க..க.. போ பாடலைத் தவிர்த்து) போன்ற கமர்ஷியல் விஷயங்களை அறவே தவிர்த்திருக்கிறார்கள். ‘நானும் ரௌடிதான்’, ‘இ.தா.ஆ.பா’ போன்ற படங்களிலிருந்த காமெடியை எதிர்பார்த்து இப்படத்திற்கு வரும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே ஏற்படும்.

ஒரு அழகான காதலை ஒரு சிறு முத்தம்கூட இல்லாமல் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் நலன். ‘மூவி லவ்வர்’களுக்கு மிகவும் பிடிக்க வாய்ப்புள்ள இப்படம், நம்மூர் சாதாரண ரசிகர்களுக்கு எந்தளவுக்கு பிடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘க... க... க.... போ’ பாடல் ரசிகர்களை உற்சாக ஆட்டம் போட வைத்திருக்கிறது. மற்ற பாடல்கள் படத்தின் பின்னணி இசைக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவும் இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. சின்னச் சின்ன வசனங்களின் பின்னணியில் பெரிய பெரிய விஷயங்களைப் புகுத்தி கைதட்டல் வாங்கியிருக்கிறார்கள்.

நடிகர்களின் பங்களிப்பு

விஜய்சேதுபதிக்கு இதுபோன்ற கதாபாத்திரங்கள் புதிதில்லை என்றாலும், இப்படத்தின் கதிரவன் கேரக்டருக்காகவும் முடிந்தளவுக்கு புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வளர்ந்துவரும் ஒரு முன்னணி ஹீரோ இதுபோன்ற கேரக்டர்களில் நடிப்பதை நிச்சயம் பெரிதாக வரவேற்க வேண்டும். ஆமை வேகத்தில் நகரும் ஒவ்வொரு காட்சியிலும் விஜய்சேதுபதியின் என்ட்ரிதான் ரசிகர்களுக்கு உற்சாக டானிக். அவரின் டைமிங் வசனங்களுக்கு ஆங்காங்கே தியேட்டரில் சிரிப்பலையும் எழுகிறது. ‘பிரேமம்’ புகழ் மடோனாவுக்கு இதைவிட ஒரு நல்ல அறிமுகம் கிடைக்க வாய்ப்பில்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் அவரின் பங்களிப்பு வெகு சிறப்பு. மொத்த கதையும் இந்த இரண்டு பேரை மட்டுமே சுற்றி நகர்வதால் இப்படத்தின் மற்ற கேரக்டர்களின்மேல் பெரிய கவனம் ஏற்படவில்லை.

பலம்

1. விஜய்சேதுபதி + மடோனா செபாஸ்டியன்
2. ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை அமைப்பு

மொத்தத்தில்...

விஜய்சேதிபதியிடமிருந்து ஒரு கமர்ஷியல் படத்தை எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றத்தையும், மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான காதல் படத்தைப் பார்த்த அனுபவத்தையும் கடத்திச் செல்கிறது இப்படம். ‘ஏ’ சென்டர் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற வாய்ப்பிருக்கும் இப்படத்திற்கு மற்ற சென்டர்களில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படும்.

ஒரு வரி பஞ்ச்: மெல்ல கடந்து சென்றிருக்கிறது இக்காதல்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;