தெறி - இசை விமர்சனம்

தெறி - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 21-Mar-2016 11:06 AM IST Top 10 கருத்துக்கள்

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, வெற்றிகரமாக 10வது வருடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் 50வது படம் ‘தெறி’. ‘தலைவா’ படத்தைத் தொடர்ந்து இளையதளபதி விஜய்யுடனும், ‘ராஜா ராணி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அட்லியுடனும் 2வது முறையாக ஜி.வி. இணைந்து உருவாக்கியிருக்கும் ‘தெறி’ ஆல்பம் எப்படி இருக்கிறது?

1. ஜித்து ஜில்லாடி...
பாடியவர்கள் : ‘தேனிசைத் தென்றல்’ தேவா, பாலசந்திரன்
பாடலாசிரியர் : ரோகேஷ்


விஜய்யின் அறிமுகமாகப் பாடல், தேவாவின் கானா குரலில் வித்தியாசமாக ஒலிக்கிறது. ‘உலகத்தர லோக்கல்’ என ‘தெறி’ டீமால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஆல்பத்தின் முதல் பாடலை கானா பாடல் புகழ் ரோகேஷ் எழுதியிருக்கிறார். அஜித் ரசிகர்களுக்கு ஒரு ‘ஆலுமா டோலுமா’ என்றால், இனி விஜய் ரசிகர்களுக்கு இந்த ‘ஜித்து ஜில்லாடி...’. தியேட்டரில் ரசிகர்களின் ஆட்டம் நிச்சயம்!

2. என் ஜீவன்...
பாடியவர்கள் : ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலக்ஷ்மி
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார், ஆர்.தியாகராஜன் (சமஸ்கிருதம்)


ஜி.வி.யின் ஆல்பங்களில் மெலடிப் பாடல்கள் எப்பவுமே ஸ்பெஷல்தான். இந்த ‘என் ஜீவன்...’ பாடலும் அந்த சிறப்பைப் பெற்றிருக்கிறது. விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ்பேக் ரொமான்டிக் மெலடியாக இருக்கலாம். நா.முத்துக்குமாரின் வரிகளில் காதலும், அன்பும் கரைந்து உருகியிருக்கிறது. ஹரிஹரன், சைந்தவியின் குரல்களில் அழகாக ஒலிக்கும் இந்தப் பாடலின் நடுவில் சமஸ்கிருத வார்த்தைகள் ‘வைக்கம்’ விஜயலக்ஷ்மியின் குரலில் ஒலிக்கிறது.

3. ஈனா மீனா டீகா...
பாடியவர்கள் : உத்ரா உன்னிகிருஷ்ணன், ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : பா.விஜய், அருண்ராஜா காமராஜ் (ராப்)


விஜய்க்கும், நய்னிகாவுக்கும் இடையே இருக்கும் பாசத்தையும், குறும்புத்தனத்தையும் பேசும் அப்பா-மகள் ஜாலிப்பாடலாக ஒலிக்கிறது இந்த ‘ஈனா மீனா டீகா...’. ஜாலியான இசை, வித்தியாசமான வரிகளில், குதூகலமான குரல்கள் என குழந்தைகளைக் குறிவைத்து இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் ஜி.வி. விஷுவல் ட்ரீட் நிச்சயம் உண்டு!

4. செல்லாக்குட்டி...
பாடியவர்கள் : விஜய், நீத்தி மோகன்
பாடலாசிரியர் : கபிலன்


‘இளையதளபதி’ ரசிர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாடல். ‘கத்தி’யின் செல்ஃபி புள்ள... பாடலைப்போல விஜய்யின் குரலில் ஜாலியாக இப்பாடலை ஒலிக்கவிட்டிருக்கிறார் ஜி.வி. விஜய்யுடன் நீத்தி மோகன் இணைந்து பாடியிருக்கும் இப்பாடலுக்கு ஜாலி வரிகளை தட்டிவிட்டிருக்கிறார் கபிலன். ‘இன்ஸ்டன்ட் ஹிட்’ பாடல்!

5. தாய்மை...
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர் : புலவர் புலமைபித்தன்


அற்புதமான தாலாட்டுப் பாடல். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ, நீண்டநாட்களுக்குப் பிறகு தமிழில் பாடியிருக்கும் பாடல். புலவர் புலமைபித்தன் உணர்வுப்பூர்வமான வரிகளை தந்திருக்கிறார். ரிப்பீட் மோடில் கேட்கத் தூண்டும் மெலடி இந்த ‘தாய்மை...’.

6. ராங்கு...
பாடியவர்கள் : டி.ராஜேந்தர், ஜி.வி.பிரகாஷ் குமார், சோனு கக்கர்
பாடலாசிரியர் : கபிலன்


விஜய் ரசிகர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இன்னொரு பாடல் இந்த ‘ராங்கு...’. விஜய்க்கு டி.ஆரின் குரல் எனும்போதே பாடலைக் கேட்க வேண்டுமென்ற உற்சாகம் தன்னிச்சையாக தொற்றிக்கொள்கிறது. கூடவே சோனு கக்கரின் மயக்கும் குரலும் ரசிகர்களை மேலும் துள்ளல்போட வைக்கிறது. ‘செல்லாக்குட்டி...’யைத் தொடர்ந்து இப்பாடலையும் கபிலனே எழுதியிருக்கிறார். இப்பாடலுக்கும் தியேட்டரில் ஆட்டம் நிச்சயம்!

7. டப் தெறி ஸ்டெப்...
பாடியவர் : அருண்ராஜா காமராஜ்
பாடலாசிரியர் : அருண்ராஜா காமராஜ்


ஆல்பத்தின் கடைசிப்பாடல், அதிரடியாக ஒலிக்கிறது. ‘தீம்’ பாடலாக ஒலிக்கும் இப்பாடலின் வரிகளை உருவாக்கிப் பாடியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். விஜய் சம்பந்தப்பட்ட மாஸ் ஆக்ஷன் காட்சிகளுக்கு பின்னணி இசையாக இந்த ‘டப் தெறி ஸ்டெப்...’ பாடல் ஒலிக்கவிடப்படலாம். அதனால் விஷுவல்களுடன் பார்க்கும்போது இன்னும் கூடுதல் எனர்ஜி இப்பாடலுக்கு கிடைக்கலாம்.

மொத்தம் 7 பாடல்களைக் கொண்டிருக்கும் ‘தெறி’ ஆல்பம், ஜனரஞ்சக ரசிகர்களை குறிவைத்து மாஸாக உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த ஆல்பத்திற்கு இளையதளபதி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். இந்த ஆல்பத்தில் புதிதாக எதையும் முயற்சி செய்யவில்லை என்றாலும், உற்சாகமான ஒரு ஆல்பத்தைத் தந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மொத்தத்தில் ‘தெறி’க்க விட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;