மனிதன் - விமர்சனம்

விறுவிறுப்பில்லாத வாதம்!

விமர்சனம் 29-Apr-2016 4:45 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : I. Ahmed
Production : Red Giant Movies
Starring : Udhayanidhi Stalin, Hansika Motwani, Prakash Raj, Vivek
Music : Santhosh Narayanan
Cinematography : R. Madhi
Editing : J. V. Manikanda Balaji

அந்தக்கால ‘கௌரவம்’ முதல், லேட்டஸ்ட் ‘தெய்வத்திருமகள்’ வரை ஏகப்பட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை தமிழ்சினிமா கண்டிருக்கிறது. அந்த வரிசையில், இந்தியாவின் பிரபலமான விபத்து வழக்கு ஒன்றை கதைக்களமாக்கி, அதில் கற்பனைகளைப் புகுத்தி பாலிவுட்டில் வெளிவந்த ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்திருக்கிறது ‘மனிதன்’. ‘என்றென்றும் புன்னகை’ அஹமது இயக்கத்தில் வழக்கறிஞர் உதயநிதியின் வாதத்திறமை எப்படி?

கதைக்களம்

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மேல் காரை ஏற்றிக் கொலை செய்யும் பணக்கார குற்றவாளி ஒருவனை, தன் வாதத் திறமையால் நிரபரயாதியாக்குகிறார் பிரபல வக்கீல் பிரகாஷ் ராஜ். ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் பார்த்துப் பயப்படும் அளவுக்கு அதிரடி வக்கீலாக வலம் வரும் பிரகாஷ் ராஜை எதிர்த்து, அதே கேஸை மீண்டும் உயிர்ப்பிக்கிறார் அமெச்சூர் வக்கீலான உதயநிதி. இதுவரை தன்னிடம் வந்தவர்களுக்கு ஒரு பெயில்கூட வாங்கிக் கொடுக்க முடியாத உதயநிதி, பிரபல வக்கீலை எதிர்த்து நியாயத்தை எப்படி நிலைநாட்டுகிறார் என்பதே ‘மனிதன்’.

படம் பற்றிய அலசல்

உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் படத்தின் மையக்கதை உருவாக்கப்பட்டிருப்பதால், ரசிகர்களை எளிதில் வசீகரிக்கிறது மனிதன். ஆனால், படத்தின் நாயகனுக்கும், கதையில் வரும் முக்கிய பிரச்சனைக்கும் எந்தவித ‘எமோஷனல்’ அட்டாச்மென்ட்டும் இல்லாததால், திரைக்கதை ‘தேமே’வென நகர்கிறது. முதல்பாதி முழுக்க, உதயநிதியின் காதல், கோர்ட்டில் நடக்கும் காமெடிகள் என மெல்ல மெல்ல ஊர்ந்து, அதன்பிறகே படம் கதைக்குள் நுழைகிறது. படத்தின் கடைசி 30 நிமிடங்களில் நடக்கும் காட்சிகள் மட்டுமே தூங்கிக் கொண்டிருந்த ரசிகனை தட்டி எழுப்புகிறது. குறிப்பாக க்ளைமேக்ஸ் நீதிமன்றக் காட்சிகள் படத்தின் பெரிய பலம்.

டெக்னிக்கல் விஷயங்களைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு படத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்ச்சிமிகு வசன உச்சரிப்பை உறுத்தாத ‘க்ளோசப்’பில் காட்டி அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதி. சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் கதையோட்டத்திற்கு இடையூறாகவே அமைந்துள்ளன. பின்னணி இசை ஓகே.

நடிகர்களின் பங்களிப்பு

முதல் மூன்று படங்களில் காமெடி, ரொமான்ஸ் நாயகனாக சுற்றிவந்த உதயநிதி ‘கெத்து’ படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தார். இப்படத்தில் வக்கீல் வேடமேற்று முழுமையான நடிகராக முயற்சித்திருக்கிறார். அவரின் முயற்சிக்கு பாதி வெற்றி கிடைத்திருக்கிறது. கதைக்கு நாயகியே தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களே என்பதற்காக, உதயநிதியை ‘மோட்டிவ்’ செய்யும் நபராக வந்துபோகிறார் ஹன்சிகா. வழக்கம்போல் அழகாக படம் நெடுக வந்துபோகிறார். ரிப்போர்ட்டராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் பங்களிப்பு கவனிக்க வைத்துள்ளது. தொய்வடைந்த திரைக்கதையை படம் முழுக்க தூக்கி நிறுத்தியிருப்பது பிரகாஷ் ராஜின் மிரட்டலான நடிப்பு. கடைசி நேரத்தில் ராதாரவியும் பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து கைதட்டல்களை அள்ளியிருக்கிறார். சின்னச் சின்ன காமெடிகள் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார் விவேக்.

பலம்

1. மையக்கதை
2. பிரகாஷ் ராஜ், ராதா ரவியின் நடிப்பு
3. ஒளிப்பதிவு

பலவீனம்

1. மெல்ல நகரும் முதல்பாதி
2. ‘என்கேஜ்மென்ட்’ இல்லாத திரைக்கதை
3. பாடல்கள்

மொத்தத்தில்...

நீதிமன்றத்தை கதைக்களமாக வைத்து தமிழ்சினிமாவில் வெற்றிபெற்ற அத்தனை படங்களிலும் ‘சென்டிமென்ட்’ காட்சிகளுக்கு முக்கியப்பங்குண்டு. அந்த ஏரியாவை சரிவர கவனிக்காததே ‘மனிதன்’ படத்தின் பலவீனம். அதை சரிசெய்து, திரைக்கதையை இன்னும் ‘ஷார்ப்’பாக்கியிருந்தால் ‘மனிதன்’ பெரிதாக ரசிக்க வைத்திருப்பான்.

ஒரு வரி பஞ்ச் : விறுவிறுப்பில்லாத வாதம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மனிதன் புதிய டிரைலர்


;