பென்சில் – விமர்சனம்

பாஸ் மார்க்!

விமர்சனம் 14-May-2016 12:17 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Mani Nagaraj
Production : Kalsan Movies Pvt Ltd
Starring : G. V. Prakash Kumar, Sri Divya
Music : G. V. Prakash Kumar
Cinematography : Gopi Amarnath
Editing : Anthony

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க துவங்கிய முதல் படம்! ஆனால் மூன்றாவது படமாக வெளியாகியுள்ளது. கௌதம் மேனன் உதவியாளர் மணி நாகராஜ் இயக்கத்தில் வந்துள்ள ‘பென்சில்’ எப்படி?

கதைக்களம்

பிரபல பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் ஜி.வி.பிரகாஷ் அந்த பள்ளிக்கு பெருமை சேர்க்கும் நல்ல மாணவன். தன்னுடன் படிக்கும் ஸ்ரீதிவ்யா மீது ஜி.வி.க்கு ஒருதலை காதல்! இவர்கள் படிக்கும் அதே வகுப்பில் ஷாரிக் ஹாசன் என்ற மாணவனும் படிக்கிறார். இவர் தமிழ்நாட்டின் மிகப் பெரிய சினிமா நட்சத்திரத்தின் மகன். பண பலம், ஆள் பலம் என திமிர் பிடித்தவனான திரியும் ஷாரிக் ஹாசன் ஒரு மாணவன் செய்யக் கூடாத அத்தனை காரியங்களையும் செய்கிறார். அவனால் சக மாணவர்கள், மாணவிகள் என்றில்லாமல் அந்த பள்ளியில் பாடம் நடத்தும் சில ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். பெரிய இடத்து பிள்ளை என்பதால பள்ளி நிர்வாகம் அவனுக்கு உடந்தையாக இருப்பதால் அவனது லீலைகள் எல்லை மீறிச் செல்ல, ஒரு நாள் அவன் வகுப்பறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்படுகிறார். ஏற்கன்வே ஜி.வி.பிரகாஷுக்கும் அவனுக்கும் இடையில் பிரச்சனை இருப்பதால் அந்த கொலைப் பழி ஜி.வி.பிரகாஷ் மீது விழும் சூழ்நிலை உருவாகிறது. உண்மையில் ஷாரிக் ஹாசனை கொன்றது யார்? ஜி.வி.பிரகாஷ் அந்த கொலை பழியிலிருந்து தப்பிக்கிறாரா, இல்லையா? என்பதே ‘பென்சில்’.

படம் பற்றிய அலசல்

பணபலம் மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு மாணவனால் சீரழியும் சில மாணவிகள், ஆசிரியர்கள், அந்த மாணவனுக்கு துணை போகும் பள்ளி நிர்வாகம் என நடந்த சில உண்மை சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வரும் மாதிரியான ஒரு திரைக்கதை அமைத்து, அதில் கல்வியை வியாபாராம் ஆக்கக் கூடாது என்ற நல்ல ஒரு கருத்தையும் வலியுறுத்தி இப்படத்தை இயக்கியிருக்கும் மணிநாகராஜுக்கு முதலில் ஒரு ‘சபாஷ்’ சொல்லலாம்! ஆனால் இடைவேளை வரை நேர்த்தியாக கதை சொன்ன மணிநாகராஜ், இடைவேளைக்கு பிறகான திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். கொலைப் பழியிலிருந்து தப்பிக்க ஜி.வி.பிரகாஷ் மேற்கொள்ளும் முயற்சிகள் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கிறது என்றாலும், அவருக்கு உதவியாக இருந்து அந்த கொலையை யார் செய்திருப்பார் என்பதை புலனாய்வு செய்யும் ஸ்ரீதிவ்யாவின் செயல்கள் கொஞ்சமும் நம்பும் படியாக அமையவில்லை! பரபரப்பாக செல்ல வேண்டிய பிற்பகுதி திரைக்கதை படம் பார்ப்பவர்களை கொஞ்சம் சோர்வடைய வைக்கிறது. இந்த காட்சிகளில் படத்தொகுப்பாளர் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம்! மற்றபடி காட்சி அமைப்புகளிலாகட்டும், திரைக்கதை அமைப்பிலாகட்டும் தன் குருநாதர் கௌதம் மேனனின் பெயரை காப்பாற்றியிருக்கிறார் மணி நாகராஜ். பிரம்மாண்டமான அந்த பள்ளி வளாகத்தில் நடக்கும் சம்பவங்களை அழகாக படம் பிடித்திருக்கிறது கோபி அமர்நாதின் கேமிரா! பரபரப்பான திரைக்கதைக்கு ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மேலும் வலு சேர்த்துள்ளது. பாடல்களிலும் ஜி.வி.குறை வைக்கவிலை. அதனால் பார்க்க கூடிய ஒரு படமாக அமைந்துள்ளது ஜீ.வி.யின் பென்சில்!

நடிகர்களின் பங்களிப்பு!

இரண்டு வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட படம் இது என்பதால் ஜி.வி.பிரகாஷ் பன்னிரெண்டம் வகுப்பு மாணவனுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். முதல் படம் என்பதால் சில குறைகள் இருந்தாலும், நடிப்பில் ஏமாற்றவில்லை ஜி.வி.! ஸ்ரீதிவ்யாவும் பன்னிரெண்டாம் மாணவிக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முதலில் ஜி.வி.யின் காதலை எற்றுக் கொள்ள மறுக்கும் ஸ்ரீதிவ்யா, நாளடைவில் ஜி.வி.யின் மீது காதல் கொண்டு அவரை காப்பாற்ற போராடும் காட்சிகளில் நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். வில்லனாக வரும் ஷாரிக் ஹாசன் நடிகர் ரியாஸ் கான், நடிகை உமா ரியாஸ்கான் தம்பதியரின் மகன்! முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். ஸ்கூல் பிரின்சிபாலாக வரும் டி.பி.கஜேந்திரன், ‘ISO’ அதிகாரியாக வரும் ஊர்வசி, ஆசிரியர்களாக வரும் அபிஷேக், வி.டி.வி.கணேஷ், திருமுருகன், சுஜா என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் தங்களது பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியுள்ளனர்.

பலம்

1.முதல் பாதி திரைக்கதை
2. கலைஞர்களின் நேர்த்தியான பங்களிப்பு
3. இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1.இரண்டாம் பாதி திரைக்கதை
2. நம்பமுடியாத சில காட்சி அமைப்புகள்
3. படத்தொகுப்பு

மொத்தத்தில்…

இப்படத்தில் சில குறைகள் இருந்தாலும் ஜி.வி.யின் ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படங்களின் வரிசையில் இப்படமும் இளைஞர்களை கவர வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : பாஸ் மார்க்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100% காதல் ட்ரைலர்


;