ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! - விஷால்

ராதாரவியுடன் நடித்தது மறக்க முடியாதது! - விஷால்

கட்டுரை 17-May-2016 3:55 PM IST VRC கருத்துக்கள்

விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி முதலானொர் நடித்துள்ள படம் 'மருது' .இப்படத்தை 'குட்டிப்புலி' ,'கொம்பன்' படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ளார். கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் ஜி.என்.அன்புசெழியன் தயாரித்துள்ளார். தென்னிந்திய நடிகர்சங்க தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த ராதாரவியும், விஷாலும் இணைந்து நடித்து உட்பட இப்படம் குறித்து விஷால் பேசும்போது,

'மருது'வின் கதை?

'அவன் இவன்' படத்திற்குப் பிறகு நல்லதொரு கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்படி அமைந்த கதைதான் 'மருது. என் முந்தைய கிராமத்துப் படங்கள் 'தாமிரபரணி' ,'சண்டக்கோழி' படங்களில் கூட நகரம் சார்ந்த சிலகாட்சிகள் வரும். வெளிநாட்டு பாடல் காட்சிகள் வரும். இதில் அப்படி இல்லை. முழுதுமே கிராமம்தான். இந்த கதையை முத்தையா சொன்னபோதே கிராமம், காட்சிகள், என் தோற்றம், உடல்மொழி எல்லாமே மாறுபட்டதாக இருக்கும் என்கிற நம்பிக்கை வந்தது. இது ஒரு பாட்டி பேரன் பற்றிய உணர்வு பூர்வமான கதை என்றாலும் ஒரு முழுமையான கமர்ஷியல் படத்துக்குரிய எல்லாமும் இருக்கும் .

உடன் நடித்தவர்கள்!

என்னுடன் ஸ்ரீதிவ்யா நடிக்கும் முதல் படம் இது. அவருக்கு பொருத்தமான வேடம்! சிறப்பாக செய்திருக்கிறார். என் படங்களில் என் பாத்திரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போலவே எனக்கு எதிரியாக வரும் வில்லன் பாத்திரமும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புவேன். இதில் வில்லனாக வரும் ஆர்கே சுரேஷ் ஒரு மனுஷனே கிடையாது. அவர் ஒரு பேய், ராட்சசன் என்று கூறும் அளவிற்கு அவரது வில்லன் வேடம் அமைந்திருக்கிறது. படத்தில் கிராமத்துப் பாட்டியாக மலையாள நடிகை ‘கொளப்புள்ளி’ லீலா நடித்திருக்கிறார். அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார் அவர்! ராதாரவி அண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சூரியும் நடித்துள்ளார்.

ராதாரவி அண்ணனுடன் நடித்த அனுபவம்!

முத்தையா என்னிடம் கதை சொன்னபோது அந்தப் பாத்திரத்துக்கு ராதாரவி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் , உங்களுக்கு எப்படி என்று தயங்கியபடி கேட்டார். இதை ஏன் கேட்க தயக்கம்? யார் தேவையோ அவர்களை நடிக்க வையுங்கள் என்றேன். இதுவரை நாங்கள் இணைந்து நடித்ததில்லை என்று சொன்னேன். நடிகர் சங்க தேர்தல் பிரச்சினையில் அவர் எதிர் தரப்பில் நின்றார் என்று பகைமை பாராட்டுவது சரியில்லை. அப்படி நான் செய்யவும் மாட்டேன். அவர் சிறந்த அனுபவம் உள்ள நடிகர். சங்கம் வேறு, நடிப்பு வேறு! ராதாரவி அண்ணன் வந்தார். என்னை கட்டிப் பிடித்தார். ‘இப்போது தொடர்ச்சியாக நிறைய படங்களில் நடிக்கிறேன். வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப் பட்டாலும் சொல்லுப்பா செய்றேன்' என்றார் அவர்.

இயக்குனர் முத்தையா!

முத்தையா உணர்வு பூர்வமாக கதை சொல்வதில் திறமையானவர். அவர் சொன்ன கதை பிடித்து விட்டது. இப்படத்தில் அவர் சொன்னதை மட்டுமே செய்துள்ளேன். அவர் எழுதும் வசனம் சக்தி மிக்கதாக இருக்கும். அழுத்தமாக இருக்கும். .இன்று கிராமம் பற்றி சினிமா எடுக்க ஆளில்லை. அவர் கிராமம் பட்டுமே தனக்கு தெரியும் என்பார்! அவர் வாழ்வில் நடந்த பல அனுபவங்களை இதில் வைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முத்தையாவுக்கு ஏற்ற பெண்டாட்டி போல இருப்பவர். அவர்களுக்குள் அவ்வளவு பொருத்தம்! ‘மருது' வருகிற 20 –ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் அனைவருக்கும் திருப்தி தரும் படமாக அமையும் என்பது என் நம்பிக்கை’’ என்றார் விஷால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;