‘ஜாக்சன் துரை’யைப் பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

‘ஜாக்சன் துரை’யைப் பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்!

முன்னோட்டம் 29-Jun-2016 2:22 PM IST Top 10 கருத்துக்கள்

‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மூலம் தனது 2வது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவங்கியுள்ள நடிகர் சிபிராஜின் அடுத்த வரவு ‘ஜாக்சன் துரை’. ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் ஏதாவது ஒரு பேய்ப்படம் தியேட்டருக்கு படையெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தபோதிலும், இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘ஜாக்சன் துரை’யைப் பார்க்கத் தூண்டும் சில பல காரணங்களில் 5 முக்கிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

1. ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் சிபிராஜுக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்துள்ளது. அதோடு, குடும்பர ரசிகர்களையும், குறிப்பாக குழந்தைகளையும் வெகுவாகக் கவர்ந்தது இப்படம். இதனால், அவரின் அடுத்த படைப்பான ‘ஜாக்சன் துரை’க்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது உண்மை.

2. ஸ்டூடன்ட் நம்பர் 1, வெற்றிவேல் சக்திவேல், ஜோர், மன்னின் மைந்தன், கோவை பிரதர்ஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து மகன் சிபிராஜுடன் இணைந்து ‘ஜாக்சன் துரை’யில் அப்பா சத்யராஜ் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். அதிலும் இப்படத்தில் சத்யராஜ் வில்லன் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3. இன்றைய தேதியில் காமெடியில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் கருணாகரன். அதுவும் ஹாரர் காமெடியென்றால் சொல்லவே வேண்டாம், மனிதர் அடித்து தூள்கிளப்பிவிடுவார். இந்த ‘ஜாக்சன் துரை’யிலும் அவரின் காமெடி அட்டூழியங்கள் நிச்சயம் இருக்கும் என்பதை டிரைலரே பறைசாற்றியிருக்கிறது.

4. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எந்த ஹீரோ படம் வேண்டுமானாலும் ரிலீஸாகலாம். ஆனால், அதில் நிச்சயம் ஒரு காட்சியிலாவது கண்டிப்பாக தலைகாட்டி மறையும் ஒருவர் நம் தமிழ்சினிமாவில் இருக்கிறார். அவர் வேறுயாருமல்ல... ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்தான். இவர் நடித்தாலே படம் ஹிட் என்றொரு சூழல் உருவாகியிருப்பதுதான் இவரின் ‘மார்க்கெட்’ உச்சத்திலிருப்பதற்கு காரணம். அவரின் பாஸிடிவ் எனர்ஜி ‘ஜாக்சன் துரை’க்கும் கைகொடுக்கும் என நம்புவோம்.

5. ‘இதுவும் ஒரு பேய்ப்படம் என்ற ரீதியில் ஜாக்சன் துரை’யை பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காரணம், இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் காமெடி படம். ஆங்காங்கே சிரிக்கவும், எதிர்பாராத தருணங்களில் பயந்து நடுங்க வைக்கவும் செய்யும். எனவே, தங்களின் பெற்றோர்களுடன் வந்து குழந்தைகளும் இப்படத்தை பொழுதுபோக்குவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;