தில்லுக்கு துட்டு - விமர்சனம்

கொடுத்த ‘துட்டு’க்குத் தகுந்தபடி சிரிக்க வைக்கவில்லை!

விமர்சனம் 7-Jul-2016 12:28 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Rambala
Production : Sri Thenandal Films
Starring : Santhanam, Shanaya
Music : S. Thaman
Cinematography : Deepak Kumar Pathy
Editing : Gopi Krishna

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக நாயகனாகியிருக்கிறார் சந்தானம். இந்த முறை அவரின் ஆஸ்தான இயக்குனரான ‘லொள்ளு சபா’ ராம்பாலாவுடன் கைகோர்த்திருக்கிறார். ‘தில்லுக்கு துட்டு’ எவ்வளவு தேறும்?

கதைக்களம்

தன் சிறு வயது பள்ளித் தோழனான சந்தானத்தை நீண்ட வருடங்கள் கழித்து சந்திக்கும் ஷனாயா பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சந்தானத்திற்கும் அவர்மேல் லவ் வருகிறது. ஆனால், இதற்கு குறுக்கே நிற்கிறார் ஷனாயாவின் அப்பா சௌரப் சுக்லா. ஆனால், சந்தானத்தை திருமணம் செய்து வைக்கவில்லையென்றால் உயிரைவிடவும் துணிகிறார் ஷனாயா. இதனால், சந்தானத்தை சத்தமில்லாமல் முடிப்பதற்காக ரௌடி ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை அணுகி, ஐடியா கேட்கிறார் சௌரப் சுக்லா.

மகளின் காதலுக்கு பொய்யாக சம்மதம் தெரிவித்து, ரகசியமாக திருமணம் செய்ய சிவன் கொண்டை மலை எனும் ஊரில் சந்தானத்தின் குடும்பத்தை வரவழைத்து, அங்கே சந்தானத்தை பேய் அடித்து கொன்றதுபோல் நாடகமாடிவிடலாம் என சுக்லாவிற்கு ஐடியா கொடுக்கிறார் ராஜேந்திரன். அதன்படி இரண்டு குடும்பங்களும் அங்கே ஆஜராகிறது. அந்த பங்களாவில் பல வருடங்களாக உண்மையான பேய் நடமாட்டம் இருப்பது தெரியாமல், செட்அப் நடிகர்களை வைத்து பேய் நாடகமும் ஆடத் தயாராகிறது ராஜேந்திரன் அன்ட் கோ. இதன் பிறகு நடக்கும் காமெடி களேபரங்கள்தான் ‘தில்லுக்கு துட்டு’.

படம் பற்றிய அலசல்

படத்தின் கதைக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத டைட்டிலோடு தன் அறிமுகப் படத்தை இயக்கியிருக்கிறார் ராம்பாலா. சந்தானத்தின் இன்றைய சினிமா வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டதே, தனியார் தொலைக்காட்சிக்கு அவர் இயக்கிய ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சிதான். அந்தளவுக்கு சந்தானத்தின் பலம் என்ன என்பதைத் தெரிந்து அற்புதமாக அதை வெளிகொணர்ந்த ராம்பாலா, இன்றைய சந்தானத்தின் ரசிகர்கள் என்ன எதரிபார்ப்பார்கள் என்பதைத் தெரிந்து படம் இயக்கத் தவறியிருக்கிறார். சந்தானத்தின் ஹீரோ இமேஜிற்குத் தேவையான ஓபனிங் பாடல், பவர்ஃபுல் ஃபைட், நடனம் ஆடுவதற்குத் தோதான பாடல், ரொமான்ஸ் காட்சி என யோசித்த ராம்பாலா, அவரின் முக்கிய பலமான ‘ஹியூமர்’ ஏரியாவை சரியாகக் கையாளவில்லை.

ஹாரர் காமெடிப்படமாக ‘தில்லுக் துட்டு’ படத்தை விளம்பரப்படுத்தியிருந்தாலும், படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மட்டுமே அந்த ஜேனருக்கு மரியாதை செய்திருக்கின்றன. குறிப்பாக, போலி பேயும் ஒரிஜினல் பேயும் திரைக்கதையில் கலக்கும் இடங்களில் சரவெடி சிரிப்பு. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் மேற்படி காட்சிகளில் இடைவிடாமல் சிரிக்க வைத்த ராம்பாலா, ஒட்டுமொத்த படத்தையும் அதற்கு இணையாக உருவாக்கியிருந்தால் கொடுத்து ‘துட்டு’க்கு சந்தோஷமாக இருந்திருப்பார்கள் ரசிகர்கள். சுவாரஸ்யமே இல்லாத முதல்பாதி, தேவையில்லாத பாடல்கள், சண்டைகள் என ரசிகர்கள் எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டன. ஒளிப்பதிவு, பின்னணி இசை ஓகே.

நடிகர்களின் பங்களிப்பு

தான் திரையில் தோன்றினாலே உற்சாகமாகிவிடும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் சந்தானம், அவர்களை ஏமாற்றும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தையே தேர்வு செய்திருக்கிறார். ஆனாலும், நடிப்பு, சண்டை, நடனம் என அவரின் மெனக்கெடல்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்தால், நிச்சயம் சந்தானத்தால் ஹீரோவாக ஜெயிக்க முடியும். அதை அடுத்தடுத்த படங்களில் செய்வார் என நம்புவோம். அறிமுக நாயகி ஷனாயாவுக்கு பெரிய வேலைகள் இல்லை. ரொமான்ஸ் காட்சிகள், பாடல்களுக்குப் பயன்பட்டிருக்கிறார். அவரின் அப்பாவாக நடித்திருக்கும் சௌரப் சுக்லா மிகச்சரியான தேர்வு. ஒரிஜினல் ‘சேட்’டாக அசத்தியிருக்கிறார். படத்தின் காமெடிக்கு முக்கியப் பங்கான்றியிருக்கும் ராஜேந்திரன், ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். ‘ஜாக்சன் துரை’யில் இழந்ததை இப்படத்தில் வட்டியும் முதலுமாக திருப்பிப் பெற்றிக்கிறார் ராஜேந்திரன். இவர்களைத் தவிர கருணாஸ், ஆனந்தராஜ் ஆகியோரின் பங்களிப்பும் பாராட்டும்படி அமைந்துள்ளது.

பலம்

1. இரண்டாம்பாதியில் வரும் அரைமணி நேர காமெடி காட்சிகள்
2. நடிகர்களின் பங்களிப்பு

பலவீனம்

1. படத்தின் முதல்பாதி
2. பாடல்கள்

மொத்தத்தில்...

தனது முதல் இரண்டு படங்களில் காமெடி நாயகனாக தன்னை முன்னிறுத்திய சந்தானம், ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் முழுமையான ‘மாஸ்’ ஹீரோவாக மாற முயன்றிருக்கிறார். ஆனால், ஒன்றரை மணி நேரம் மெனக்கெட்ட ஹீரோ சந்தானத்தைவிட, அரைமணி நேரமே வந்த ‘காமெடியன்’ சந்தானத்தையே ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்பதே உண்மை!

ஒரு வரி பஞ்ச் : கொடுத்த ‘துட்டு’க்குத் தகுந்தபடி சிரிக்க வைக்கவில்லை!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;