சூப்பர்ஸ்டார் ‘கபாலி’யின் 5 சிறப்பம்சங்கள்!

ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் ரஜினியின் ‘கபாலி’ படம் குறித்த சிறப்புக் கட்டுரை

முன்னோட்டம் 20-Jul-2016 3:05 PM IST Top 10 கருத்துக்கள்

‘ரஜினி படத்தைப் பார்க்கத் தூண்டும் காரணங்கள்’ என பட்டியலிடத் துவங்கினால் பல நூறு பக்கங்கள் எழுதிக் கொண்டே போகலாம். அல்லது ரொம்பவும் சிம்பிளாக ‘சூப்பர்ஸ்டார்’ என்ற ஒற்றை வரிக் காரணத்தை மட்டும் எழுதிவிட்டும் கடந்து செல்லலாம். ‘கபாலி’ படத்தைப் பற்றி நமக்குத் தெரியும் விஷயங்களைவிட, ஒவ்வொரு ரஜினி ரசிகர்களும் அப்படத்தைப் பற்றி பல நூறு விஷயங்களை தேடித் தேடி கண்டுபிடித்து படித்து வருகிறார்கள். அந்தவகையில், ‘கபாலி’ படத்தின் முக்கிய 5 அம்சங்களை ரசிகர்களுக்கு நினைவுகூறும் கட்டுரையே இது...

1. நீண்ட நாட்களுக்குப் பிறகு, முழுக்க முழுக்க ஒரு இளமையான கூட்டணியுடன் ரஜினி நடிக்கும் படம் என்ற ஒற்றை விஷயமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்காக்கியிருக்கிறது. இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள பா.ரஞ்சித்திற்கு ரஜினியை இயக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறதென்றால், அவரின் திறமைமீது எத்தனை பெரிய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்? பா.ரஞ்சித்தும், தனது முந்தைய டெக்னீஷியன்களை அப்படியே ‘கபாலி’க்குப் பயன்படுத்தியிருப்பது கூடுதல் சிறப்பு.

2. உலகளவில் ‘கபாலி’யைக் கொண்டு சேர்த்ததில் படத்தின் டீஸருக்கு முக்கியப்பங்குண்டு. யு டியூப்பில் டீஸர் வெளியான முதல் நாளிலேயே அதிரிபுதிரியான முறை பார்க்கப்பட்டும், ‘லைக்’கப்பட்டும் சாதனை படைக்கப்பட்டது. தற்போது, ‘கபாலி’ டீஸரின் பார்வையிடல்கள் 2 கோடி 60 லட்சத்தையும் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ‘கபாலி’யைவிட அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்ட டிரைலர் இந்திய அளவில் ‘சுல்தான்’ மட்டுமே. அந்த சாதனையும் ‘கபாலி’ ரிலீஸுக்குப் பிறகு முறியடிக்கப்படும் என்பதே நிதர்சனம்.

3. இந்தியாவிலேயே ஒரு படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை பெரிய வியாபாரம் வேறெந்த நடிகரின் படத்திற்கும் நடந்தேறியிராத ஒன்று. பட வெளியீட்டு உரிமை வியாபாரங்களிலேயே 200 கோடிக்கும் அதிகமாக புழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுதவிர அஃபீஷியல் பார்ட்னராக ‘கபாலி’யில் இணைந்து கொண்ட பெரிய நிறுவனங்கள் மூலமே 100 கோடிக்கும் மேல் கைமாறியிருப்பதாகவும் கூறுகிறார்கள். இன்னும் சாட்டிலைட் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ், மெர்சன்டைஸ் ரைட்ஸ் போன்ற வகைகளிலும் பல கோடிகள் குவிக்கப்பட்டுள்ளனவாம்.

4. ஒருபுறம் ‘கபாலி’ பட போஸ்டரைத் தாங்கிய ஏர் ஏசியா விமானம் விண்ணில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொருபுறம் கபாலியின் தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டு மூத்தூட் நிறுவனம் ஆச்சரியப்படுத்துகிறது. இந்த இரண்டு விஷயங்களுமே வேறெந்த படத்திற்கும் இதுவரை நிகழவில்லை என்பதே உண்மை.

5. பொதுவாக நம்மூர் படங்கள் வடஇந்தியாவில் அதிகபட்சமாக 100 தியேட்டர்களில் வெளியானாலே ஆச்சரியம். ஆனால், ‘கபாலி’யை வாங்கியிருக்கும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் 1000 தியேட்டர்களில் கபாலியை ரிலீஸ் செய்கிறதாம். தவிர, மும்பையின் அடுக்கு மாடி பஸ்களை ‘கபாலி’யின் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தியும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளோடு மலாய் மொழியிலும் இந்திய படம் ஒன்று வெளியாவது இதுவே முதல்முறை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;