Direction : Anand Shankar
Production : Thameens Films (Shibu Thameens)
Starring : Vikram, Nayantara, Nithya Menen
Music : Harris Jayaraj
Cinematography : R. D. Rajasekhar
Editing : Bhuvan Srinivasan
இதுவரை ஒரு முகம் காட்டி கலக்கிக் கொண்டிருந்த ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக ‘இருமுகன்’ அவதாரம் எடுத்திருக்கிறார். கெமிக்கல் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் த்ரில்லராக ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?
கதைக்களம்
70 வயது தாத்தா ஒருவர் மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்திற்குள் புகுந்து, அங்கிருக்கும் காவாலாளிகளை சுட்டு வீழ்த்திவிட்டு இறந்துபோகிறார். இந்த சம்பவத்திற்குப் பின்னணியிலிருந்து செயல்படுவது யார் என்பதை கண்டுபிடிக்க, இந்திய ‘ரா’ பிரிவிலிருந்து சஸ்பென்ஸ் செய்யப்பட்ட அகிலன் வினோத் (விக்ரம்) வரவழைக்கப்படுகிறார். அவருக்குத் துணையாக இன்னொரு ரா அதிகாரியான நித்யா மேனனும் உடன் களமிறங்குகிறார். அதன்பிறகு நடக்கும் பரபர இன்வெஸ்டிகேஷன் அடுத்தடுத்து பல அதிர்ச்சி சம்பவங்களை அரங்கேற்றுகிறது. அவை என்ன? விக்ரம் ஏன் ரா பிரிவிலிருந்து சஸ்பென்ஸ் செய்யப்பட்டார்? தாக்குதலுக்குப் பின்னணியிலிருக்கும் வில்லன் யார்? அவனை கண்டுபிடித்தார்களா இல்லையா? என்பதற்கான விடையாக விரிகிறது ‘இருமுகன்’.
படம் பற்றிய அலசல்
வித்தியாசமாக உருவாக்கப்பட்ட இரட்டை வேட கதாபாத்திரம், தமிழில் அதிகம் கையாளப்படாத ‘கெமிக்கல்’ சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதை என எதிர்பார்ப்புகளை அதிகம் ஏற்றிவிட்டிருந்த ‘இருமுகன்’ படத்தை லாஜிக் விஷயங்களைப் பற்றி எந்த கவலையுமில்லாமல் படமாக்கியிருக்கிறார் ஆனந்த் ஷங்கர். காட்சிக்குக் காட்சி ரசிகர்களை கைதட்ட வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் விக்ரமை முன்னிறுத்தியே திரைக்கதை அமைத்திருப்பதால், ஒரு நல்ல த்ரில்லர் படத்தை பார்க்கப்போகிறோம் என்ற ஆவலுடன் படத்திற்கு வந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமே. படத்தின் முதல்பாதி கொஞ்சம் விறுவிறுப்பாகவும், பரபர காட்சிகளுடனும் பயணித்து, இடைவேளையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சூப்பர் ட்விஸ்ட்டையும் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், இரண்டாம்பாதி படத்தை எந்தவித லாஜிக்கும் இல்லாமல், முழுக்க முழுக்க விக்ரமின் நடிப்பை மட்டும் நம்பியே படமாக்கியிருக்கிறார்கள். இதனால் இரண்டாம் பாதியின் நீளம் ரசிகர்களை சோதிக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் கேமரா ஜாலங்கள் படத்திற்கு பெரிய பலம். ஹாரிஸின் பாடல்களை ரசிக்க முடிந்தாலும், படத்தின் ஓட்டத்திற்கு அவை ‘ஸ்பீட் பிரேக்‘குகளாகவே அமைந்திருக்கின்றன.
நடிகர்களின் பங்களிப்பு
படத்தின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களையும் விக்ரமே செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், அவரைத் தவிர ‘லவ்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் வேறொரு ஹீரோவை நிச்சயம் யோசிக்க முடியவில்லை. இரண்டு கேரக்டர்களுக்குமான உடல்மொழி, வசன உச்சரிப்பு, முக பாவனை என அசத்தியிருக்கிறார் விக்ரம். பட்டென்ற தோன்றி, சட்டென மறைந்துவிட்டாரே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என ஏமாற்றத்திலிருந்த ரசிகர்களுக்கு தன் ரீ என்ட்ரி மூலம் ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் நயன்தாரா. ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ‘இருமுகன்’ நயன் போல்டு அன்ட் தி ப்யூட்டிஃபுல். படத்தில் எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத ஒரு கேரக்டரில் நித்யா மேனனை நடிக்க வைத்து வீணடித்திருக்கிறார்கள். அதேபோல், காமெடிக்கென சேர்க்கப்பட்டிருக்கும் தம்பி ராமையா படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துவிட்டார். உளவுத்துறை உயரதிகாரியாக வரும் நாசருக்கும் பெரிய வேலை எதுவும் இல்லை.
பலம்
1. விக்ரமின் அபார உழைப்பு (குறிப்பாக ‘லவ்’ விக்ரம்)
2. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு
3. அடிப்படைக் கதை
பலவீனம்
1. திரைக்கதை (குறிப்பாக இரண்டாம்பாதி)
2. லாஜிக் ஓட்டைகள்
3. கதாபாத்திர வடிவமைப்பு
மொத்தத்தில்...
ஒரு த்ரில்லர் படத்தின் முக்கிய அம்சமே லாஜிக்கலாக காட்சிகளை நகர்த்த முயல்வதில்தான் இருக்கிறது. ஆனால், இந்த ஏரியாவைப் பற்றி எந்த கவலையுமில்லாமல் விரக்மிற்கு இரட்டை வேட படமொன்றைத் தரவேண்டும் என்ற ஒற்றை விஷயத்திலேயே திருப்திபட்டுள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். விக்ரமின் அபாரமான உழைப்பு, ஆர்.டி.ராஜசேகரின் அற்புதமான ஒளிப்பதிவு போன்ற விஷங்களுக்காக மட்டுமே ‘இருமுகன்’ மேல் ரசிகர்களுக்கு வருகிறது ‘லவ்’.
ஒரு வரி பஞ்ச் : விக்ரமிற்காக மட்டுமே இந்த ‘இருமுகன்’
ரேட்டிங் : 5/10
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...