கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் 5 முக்கிய பாடல்கள்!

கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் 5 முக்கிய பாடல்கள்!

கட்டுரை 22-Dec-2016 2:16 PM IST Chandru கருத்துக்கள்

தமிழ்த்திரைப்படங்களின் முக்கிய அம்சமே பாடல்கள்தான். பாடல்களுக்கிடையே கொஞ்சம் காட்சிகளோடு படங்கள் வெளிவந்த பாகவதர் காலத்தில் தொடங்கி, பாடல்களே இல்லாத படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலிலும் பாடல்களுக்காக ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறான் தமிழ் சினிமா ரசிகன். ஆனாலும், பாடல்கள் என்பது தமிழ் சினிமாவில் கதைக்கு சம்பந்தமேயில்லாமல் இடைச்செருகலாகவோ, கனவுப்பாடலாகவோ, நாயகனின் ஓபனிங் சாங்காகவோதான் பெரும்பாலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதையும் தாண்டி, சில பாடல்கள் அப்படத்தின் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன. அப்படிப்பட்ட 5 பாடல்களைப் பற்றிய ஒரு தொகுப்புதான் இக்கட்டுரை.

1. உயிரின் உயிரே... (காக்க காக்க)

படத்தின் ஆரம்பக்காட்சியாக இடம்பெறும் பாடல். நாயகன் சூர்யா குண்டடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், நாயகி ஜோதிகாவை நினைக்கும்போது திரையில் தோன்றும் அதிரடிப் பாடல். ‘காக்க காக்க’ படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான அத்தனை பாடல்களுமே ஹிட்தான் என்றாலும், இந்த ‘உயிரின் உயிரே’ பட்டிதொட்டியெங்கும் அப்போது ஒலித்த பாடலாக இருந்தது. கௌதம் மேனன் இயக்கத்தில் வித்தியாசமான ஒரு பாடலாக இப்பாடல் படத்தில் இடம்பெற்றிருந்தது.

2. நெஞ்சமெல்லாம் காதல்... (ஆயுத எழுத்து)

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் உருவான பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அத்தனையும் அதிரிபுதிரி ஹிட். அந்தவகையில் ‘ஆயுத எழுத்து’ படத்தில் அத்னன் சாமி, சுஜாதாமேனன் குரலில் இடம்பெற்ற ‘நெஞ்சமெல்லாம் காதல்...’ பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட். காதல் பாடலான இதன் முடிவில் கதையின் முக்கிய திருப்பம் ஒன்று இடம்பெறும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பார் மணிரத்னம். படத்தின் முக்கிய மூன்று மையப்புள்ளிகள் இணைவதை ஆரம்பக்காட்சியாக வைத்த இயக்குனர், இப்பாடலின் முடிவில் சூர்யாவை மாதவன் சுடுவதுபோல் காட்சி அமைத்திருப்பார். ஒரு அருமையான மெலடிப் பாடலின் முடிவை இத்தனை அதிர்ச்சியாக ரசிகர்கள் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

3. உன் மேல ஆசைதான்... (ஆயிரத்தில் ஒருவன்)

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் 2010ல் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் கதைப்படி சோழர்களைத் தேடிப் பயணிக்கும் கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் பல தடங்களுக்குப் பிறகு ஒருவழியாக சோழர்களின் எல்லைப் பகுதியைச் சென்றடைந்ததும் இப்பாடல் படத்தில் இடம்பெறும். இப்பாடலின் முடிவில் மீண்டும் ஒரு ஆபத்தை இவர்கள் சந்திப்பார்கள். ‘உன் மேல ஆசைதான்...’ என தொடங்கும் இப்பாடலை தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், ஆன்ட்ரியா ஆகியோர் பாடியிருக்கின்றனர். ஆடியோவாகவே பெரிய ஹிட்டடித்த இப்பாடல், படத்திலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

4. ஒய் திஸ் கொலவெறி... (3)

இந்திய சினிமாவிலேயே அறிமுக இசையமைப்பாளர் ஒருவரின் அறிமுகப் பாடல் ஒன்று உலகளவில் ஹிட்டடித்ததென்றால் அது கண்டிப்பாக அனிருத் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலாகத்தான் இருக்கும். இப்பாடல் இதுவரை யு டியூபில் 11 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளதென்றால் அதன் வெற்றியை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்பாடல் படத்தில் எப்படி இடம்பெறப்போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் பெரிய ஆவல் கொண்டிருந்தனர். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வண்ணம், வேறொரு பரிமாணத்தில் இப்பாடலுக்கான சூழல் இடம்பெற்றிருந்தது. காதல் தோல்விப் பாடலாக இடம்பெற்ற இப்பாடலில் நாயகன் தனுஷிற்கு இருக்கும் வித்தியாசமான பிரச்சனை ஒன்று ரசிகர்களுக்கு தெரிய வரும். அதோடு நாயகனின் வாழ்க்கையும் கேள்விக்குறியாவதுபோல் சூழல் இருக்கும். தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய அறிமுகப் படம் இது.

5. தள்ளிப்போகாதே... (அச்சம் என்பது மடமையடா)

இந்தப் பாடலுக்காகவே படத்தைப் பார்க்க வேண்டுமென ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்த படம். ரஹ்மானின் அட்டகாசமான இசையில் உருவான இப்பாடல் யு டியூபில் 2 கோடியே 53 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது. கௌதம் மேனனின் சிந்தனையில் வித்தியாசமானதொரு சூழலில் உருவான பாடல் இது. நாயகன் சிம்புவும், நாயகி மஞ்சிமாவும் சாலை விபத்து ஒன்றில் சிக்க, அந்தரத்தில் பறக்கும் நாயகன், தன் காதலை முதல்முறையாக நாயகியிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தன் தவிப்பை வெளிப்படுத்துவதுபோல் அமைந்த பாடல். பரபரப்பான இந்த காட்சியில் இப்படியொரு பாடல் இடம்பெறும் என சத்தியமாக எந்த ரசிகரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த பாடலுக்குப் பிறகே, படத்தில் நாயகனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;