பலே வெள்ளையத் தேவா – விமர்சனம்

’பலே’ சொல்ல முடியவில்லை!

விமர்சனம் 23-Dec-2016 5:38 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : P. Solai Prakash
Production : Company Productions
Starring : M. Sasikumar, Tanya, Kovai Sarala, Sangili Murugan
Music : Darbuka Siva
Cinematography : Ravindranatha Guru
Editing : Praveen Antony

அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் காமெடி களத்தில் குதித்திருக்கும் சசிகுமாரின் ’பலே வெள்ளையத் தேவா’ எப்படி?

கதைக்களம்

போஸ்ட் மாஸ்டராக வேலை செய்யும் ரோகிணியின் ஒரே மகன் சசிகுமார். படித்து முடித்து அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அவரது அம்மா ரோகிணிக்கு மதுரை பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கிறது. அந்த கிராமத்திற்கு வரும் சசிகுமாருக்கும், அந்த ஊர் மக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து கேபிள் டிவி தொழிலை செய்து வரும் வளவனுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. அதே நேரம் வளவனின் உறவுக்காரர்களான சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோருக்கு செல்லப் பிள்ளையாகும் சசிகுமாருக்கு, கறிக் கடைக்காரர் பாலாசிங் மகள் தான்யா மீது காதலும் வருகிறது. சசிகுமாரை ஒழித்துகட்ட வளவன் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளில் இருந்து சசிகுமார் எப்படி தப்பித்து, அந்த ஊர் மக்களின் நன்மதிப்பு பெற்று தான்யாவின் கரம் பிடிக்கிறார் என்பது தான் ‘பலே வெள்ளையத் தேவா’வின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

மதுரை பின்னணியில் ஒரு காமெடி படத்தை தர முயற்சித்திருக்கும் இயக்குனர் சோலை பிரகாஷின் முயற்சி குறிப்பிடும்படியாக அமையவில்லை. சிரிக்க வைக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட திரைக்கதை வலுவாக அமையவில்லை என்பதோடு அரதபழசான காட்சி அமைப்புகள், வசனங்கள் என்று பயணிப்பதால் படத்தை ரசிக்க முடியவில்லை. படம் முழுக்க தனது வழக்கமான ஸ்டைலில் பேசிகிட்டே இருக்கும் கோவை சரளாவின் கேரக்டர் படத்தில் பெரிய மைனஸாக அமைந்துள்ளது. ‘கிடாரி’யில் கவனம் பெற்ற இசை அமைப்பாளர் ’டர்புகா’ சிவாவின் பின்னணி இசையும், இரண்டு பாடல்களும் இப்படத்திலும் கவனம் பெறுகின்றன. மதுரை, தேனியின் கிராமத்து அழகை ஒளிப்பதிவாளர் ரவிந்திரநாத் குரு அழகாக படம் பிடித்துள்ளார். ‘இந்த படம் மதுரை மக்களின் நையாண்டியை சொல்லும் படம்’ என்று சொன்ன சசிகுமாருக்கு இந்த ‘பலே வெள்ளையத் தேவா’ எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை!

நடிகர்களின் பங்களிப்பு

சசிகுமார் தனது வழக்கமான நடிப்பை இப்படத்திலும் வழங்கியுள்ளார். கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் தான்யா நடிப்பில் தன் தாத்தா ரவிச்சந்திரன் பெயரை காப்பாற்றியுள்ளார். சீட்டு பிடித்து மக்களை ஏமாற்றும் கறிக் கடைக்காரராக வரும் பாலா சிங், சசிகுமாரின் அம்மாக வரும் ரோகிணி, வில்லனாக வரும் வளவன் ஆகியோர் தங்களது கேரக்டர்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1. ஒரு சில காமெடி காட்சிகள்!
2. இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தவிர்த்து அனைத்தும் பலவீனமாகவே அமைந்துள்ளன.

மொத்தத்தில்…

இந்த காலகட்டத்தில் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைப்பது என்பது சவாலான விஷயம்! அந்த சவாலில் ‘பலே வெள்ளையத் தேவா’வுக்கு வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை.

ஒரு வரி பஞ்ச் : ’பலே’ சொல்ல முடியவில்லை!

ரேட்டிங் : 3.5/10

#BalleVellaiyathevaaMovieReview #BalleVellaiyathevaa #Sasikumar #Tanya #KovaiSarala #SangiliMurugan #DarbukaSiva #SolaiPrakash #PraveenAntony #CompanyProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;