எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘பைரவா’ டிரைலர்?

புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை இரவு வெளியான ‘பைரவா’ படத்தின் டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பு எப்படி?

கட்டுரை 2-Jan-2017 11:09 AM IST Chandru கருத்துக்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் டீஸர் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. அருண்ராஜா காமராஜின் கர்ஜணையில் உருவான ‘வர்லாம் வர்லாம் வா பைரவா...’ என்ற பாடலை பின்னணி இசையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த டீஸருக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதோடு, இந்த டீஸரில் ‘இன்னைக்கு நிறைய பேருகிட்ட இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்கிட்ட இருக்கு’ என விஜய் பஞ்ச் பேச, ‘‘அப்படியென்ன கெட்ட பழக்கமா இருக்கும்’’ என ரசிகர்கள் தங்களுக்குள் பட்டிமன்றம் நடத்தத் தொடங்கினர். கடந்த ஆண்டின் கடைசி இரவான டிசம்பர் 31ஆம் தேதியன்று ‘பைரவா’ டிரைலர் வெளியிடப்பட்டது. தற்போது 1 கோடியோ 34 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களைப் பெற்றுள்ள ‘பைரவா’ படத்தின் டீஸரைத் தொடர்ந்து, இந்த டிரைலருக்கும் நல்ல பார்வையிடல்கள் கிடைத்து வருகின்றன. டிரைலர் வெளியாகி 36 மணி நேரத்தை கடந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 40 லட்சம் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது ‘பைரவா’. சரி... இதெல்லாம் டெக்னிக்கல் கணக்கு... உண்மையில் இந்த டிரைலர் ரிலீஸிற்குப் பின்பான ‘பைரவா’ படத்தின் மதிப்பீடு எப்படி இருக்கிறது?

விஜய் படங்கள் என்றாலே மாஸ் மசாலாவாகத்தான் இருக்கும் என்பது குழந்தைக்கூடத் தெரியும். ஆனால், இந்த ‘பைரவா’ அதையும் தாண்டி ஒரு படி மேலேபோய் விஜய்யின் பகவதி, ஆதி, சுறா படங்களையெல்லாம் கண்முன் காட்டிவிட்டுபோவதைப்போன்ற ஒரு உணர்வைத் தருகிறது. டீஸர் மூலம் பெரிய ஹிட்டடித்ததால், டிரைலருக்கும் ‘வர்லாம் வா....’ பாடலையே பின்னணி இசையாகத் தொடர்ந்துள்ளனர். ‘கத்தி’யைத் தொடர்ந்து இப்படத்திலும் விஜய்யுடன் காமெடிக் கூட்டணி அமைத்துள்ள சதீஷ் பெரிய சிரிப்பை வரவைக்கவில்லை. படத்தில் காமெடிக்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்கும் என்பது இந்த டிரைலரை வைத்து கணிக்க முடியவில்லை. அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் எந்த வசனமும் இல்லை. முழுக்க முழுக்க ஹீரோவை மட்டுமே முன்னிறுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது. ஆக்ஷன், காதல், காமெடி கலந்த இப்படத்தில் ஏதோ ஒரு சமூகப் பிரச்சனையையும் கையிலெடுத்திருக்கிறார் இயக்குனர் பரதன்.

விஜய்க்கான ஆக்ஷன் காட்சிகளில் மாஸ்டர் அனல் அரசு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. அதேபோல், அவருக்கான வசனங்கள், நடனங்கள், ஒப்பனை ஆகியவற்றிலும் தனி சிரத்தையெடுத்துள்ளது ‘பைரவா’ டீம். ‘சொன்ன வார்த்தையை காப்பாத்துறதுதான்’ விஜய்யோட கெட்டப்பழக்கம் என்பதையும் ஊரறியச் செய்திருக்கிறது இந்த டிரைலர்.

விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் எதிர்பார்ப்பதைவிட அன்லிமிடெட் மாஸ் சீன்களையும், பஞ்ச் டயலாக்குகளையும் அடுக்கி வைத்திருக்கிறார் இயக்குனர் பரதன். ஆனால், பொதுவான சினிமா ரசிகனின் பார்வையில் இந்த டிரைலர் ஏமாற்றத்தையோ, அல்லது பெரிய எதிர்பார்ப்பையோ ஏற்படுத்தத் தவறியிருக்கிறது. ‘இதுவும் ஒரு வழக்கமான விஜய் படமாகத்தான் இருக்கும்’ என அவர்கள் ‘பைரவா’வை கண்டுகொள்ளாமல் விடுவதற்கும் இந்த டிரைலர் வாய்ப்பளிக்கிறது.

‘பைரவா’ பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவிருப்பதால், குடும்ப ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தும் பட்சத்தில் நினைத்த வெற்றியை அடையலாம். பழைய ஃபார்முலாவாக இருந்தாலும், ட்ரீட்மென்டில் பரதன் புதிததாக முயற்சித்திருப்பாரேயானால் மட்டுமே அது சாத்தியம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜுங்கா ட்ரைலர்


;