2016ஆம் ஆண்டின் லாபம் தந்த ‘டாப் 10’ தமிழ் படங்கள்!

2016ஆம் ஆண்டின் லாபம் தந்த ‘டாப் 10’ தமிழ் படங்கள்!

கட்டுரை 4-Jan-2017 4:18 PM IST Chandru கருத்துக்கள்

நேர்த்தியான படங்களும், சமூகத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த வேண்டிய படங்களும் எத்தனை அவசியமோ, அதேபோல வணிகரீதியாக வெற்றிபெற வேண்டிய படைப்புகளும் இன்னொருபுறம் உருவாக வேண்டியதும் அவசியமே. மசாலா படங்களின் வணிக ரீதியிலான வெற்றியின் மூலம், சில நல்ல படங்கள் உருவாக்குவதற்கான உற்சாகம் லாபமடைந்த தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தவகையில், இந்த வருடத்தில் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட படங்களில் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, வெளியீட்டு உரிமையைப் பெற்றவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபம் தந்த படங்கள் 20க்கும் குறைவே. அதில் ‘டாப் 10’ லாபம் தந்த படங்களை இங்கே ரிலீஸ் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளோம். (ஒன்றிரண்டு படங்கள் பெரிய வசூல் குவித்தும், அவை விநியோகஸ்தர்களுக்கு லாபகரமாக அமையாததால் கணக்கில் கொள்ளவில்லை).

ரஜினி முருகன்


ரிலீஸுக்கு ரெடியாகி பல்வேறு நிதிச்சிக்கல்களால் சில பல மாதங்கள் கடந்தே இப்படம் வெளியானது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வெற்றிப்படக் கூட்டணி என்பதால் ‘ரஜினி முருகன்’ படத்திற்கு நல்ல ஓபனிங் இருந்தது. படமும் ரசிகர்களை நல்லவிதமாக என்டர்டெயின் பண்ணவே, சிவகார்த்திகேயனுக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது ‘ரஜினி முருகன்’. அதோடு, படத்தை தயாரித்த திருப்தி பிரதர்ஸ் மட்டுமின்றி, படத்தை வாங்கியவர்களுக்கும், ரிலீஸ் செய்தவர்களுக்கும் லாபம் பெற்றுத்தந்தது இப்படம்.

இறுதிச்சுற்று


மாதவன் மறுபிரவேசம் செய்த படம் ‘இறுதிச்சுற்று’. தன் முதல் படத்தில் கிடைக்காத கவனத்தை அடுத்த படைப்பில் எப்படியும் கண்டடைந்தே தீர்வது என்ற லட்சிய வெறியுடன் இப்படத்தை இயக்கியிருந்தார் சுதா கொங்கரா. அவரின் கடுமையான உழைப்பும், நேர்த்தியான படைப்பும் நினைத்த வெற்றியை பெற்றுத்தந்தது. இப்படத்தின் மூலம் ரித்திகா சிங் என்ற அற்புதமான நாயகியையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் சுதா. இப்படம் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் மிகப்பெரிய லாபத்தையும், பி அன்ட் சியில் ஓரளவுக்கு லாபத்தையும் பெற்று விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படமாக அமைந்தது.

பிச்சைக்காரன்


சந்தேகமேயில்லாமல் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படம் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படம் ‘பிச்சைக்காரன்’தான். தன்னுடைய கேரியரில் முதல் வெற்றிப்படம் என இயக்குனர் சசியே இப்படத்தின் வெற்றிகுறித்து உற்சாகமாக பேட்டியும் அளித்தார். சராசரியாக உயர்ந்து வந்த நடிகர் விஜய் ஆண்டனியின் மார்க்கெட் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று அசத்தியது. வாங்கியவர்களையும், வெளியிட்டவர்களையும் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாற்றியது ‘பிச்சைக்காரன்’.

தெறி


‘கபாலி’க்குப் பிறகு மிகப்பெரிய வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது ‘தெறி’. அதோடு, ‘ராஜா ராணி’யைத் தொடர்ந்து இயக்குனர் அட்லியின் 2வது படமும் வெற்றி என்ற சாதனையையும் படைத்தது. பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டு, திட்டமிட்டு வெளியிடப்பட்டு, நினைத்த வெற்றியை எட்டினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த குடும்பப்படமாக உருவாக்கப்பட்டிருந்ததே ‘தெறி’யின் வெற்றிக்கு முக்கிய காரணம். இயக்குனர் மகேந்திரனின் வில்லன் அவதாரம், மீனாவின் மகள் நைனிகாவின் அறிமுகம் படத்திற்கு கூடுதல் பலம்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்


‘மினிமம் கோரண்டி’ இயக்குனர் என தற்போதைய தமிழ் சினிமாவால் போற்றப்படுபவர் எழில். அவரின் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படமும் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர்கள் சூரியும், ரோபோ ஷங்கரும். இவர்களின் காமெடிக்கு தியேட்டரில் எழுந்த வெடிச்சிரிப்பே படத்தை 50 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓட வைத்தது.

தில்லுக்கு துட்டு


ஹாரர் காமெடி வகையறாவில் இந்த வருடத்தின் வெற்றிப்படம் ‘தில்லுக்கு துட்டு’. அதோடு, சந்தானத்தின் ஹீரோ கேரியரிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இப்படமே. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அனைத்துத்தரப்பினருக்கும் லாபம் தந்த படமாக அமைந்தது.

தர்மதுரை


சேதுபதி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களோடு ‘தர்மதுரை’யும் விஜய்சேதுபதிக்கு இந்த வருடத்தின் வெற்றிப்படமாக அமைந்தது. சமூக அக்கறையை வலியுறுத்தும் கருத்துக்களையும், அறிவுரைகளையும் கமர்ஷியல் விஷயங்கள் கலந்து இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி வெளிவந்து, விமர்சர்களிடமும், ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்றதோடு, படத்தை விநியோகம் செய்தவர்களுக்கு லாபத்தையும் பெற்றுத் தந்தது ‘தர்மதுரை’.

இருமுகன்


எதிர்வினை கொண்ட ரசிகர்களே இல்லாத நடிகர்களின் பட்டியலில் விக்ரமிற்கு தனி இடம் உண்டு. அந்தளவுக்கு தன் படங்களின் கேரக்டர்களை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்பவர் விக்ரம். இருந்தபோதும், அவரின் சமீபகால படங்கள் அவருக்கு பெரிய வெற்றிதேடித்தராதது ஒரு குறையாகவே இருந்தது. அந்தக்குறையைப் போக்கிய படம்தான் ‘இருமுகன்’. இப்படத்திற்காக இரண்டு வேடங்களில் அற்புதமாக நடித்து அசத்தியிருந்தார் விக்ரம். குறிப்பாக அவர் முதன்முறையாக வில்லன் வேடமேற்ற ‘லவ்’ கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல்முறையாக இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார் நயன்தார். சரியான வியாபார யுக்தியோடு இப்படம் வெளியானதால் குறித்த லாபத்தை ஈட்டித் தந்தது.

ரெமோ


ஒரு படத்தை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என இந்திய சினிமாவிற்கே பாடம் நடத்திய படம் என ‘ரெமோ’வை தாராளமாகச் சொல்லலாம். சரியான திட்டமிடல், வெளிப்படையான வியாபார அறிவிப்புகள், சிறந்த கூட்டணி என ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தனது முதல் படைப்பை வெற்றிப்படமாக கச்சிதமாக அறுவடை செய்தது. இப்படத்திற்கு விமர்சனங்கள் இருவேறாக இருந்தபோதும் வசூலில் எந்தக்குறையும் வைக்கவில்லை. படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது 5 நாள் விடுமுறையை குறிவைத்து சரியாக ரிலீஸ் செய்தது. சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக அதிக வசூல் செய்தது ‘ரெமோ’.

சென்னை 28: II


இதுபோன்ற சர்வ சாதாரணமான ஒரு கதையை கையிலெடுத்து, அதை வெற்றிப்படமாக்குவதில் கைதேர்ந்தவர் வெங்கட் பிரபு. முதல் பாகத்தின் வெற்றிக்கூட்டணியை மீண்டும் இணைத்து அதன் இரண்டாம் பாகத்தையும் வெற்றிப்படமாக்கினார். குறைந்த பட்ஜெட், திட்டமிட்ட படப்பிடிப்பு, சரியான விலைக்கு வியாபாரம் செய்தது, 2 மணி நேரம் ரசிகர்களை எந்தக்குறையுமில்லாமல் பொழுதுபோக்க வைத்தது போன்ற காரணங்களால் ‘சென்னை 28 : II’ படம் 2016ஆம் ஆண்டின் லாபம் தந்த கடைசி தமிழ்ப் படமாக அமைந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இவன் யாரென்று தெரிகிறதா - வீடியோ


;