தமிழ்சினிமாவை கலக்கிய முதலமைச்சர் சம்பந்தப்பட்ட 5 திரைப்படங்கள்!

தமிழ்சினிமாவை கலக்கிய முதலமைச்சர் சம்பந்தப்பட்ட 5 திரைப்படங்கள்!

கட்டுரை 10-Feb-2017 6:00 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த ஒரு வாரமாக ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்நோக்கியிருப்பது தங்களின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத்தான். இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், முதலமைச்சரை மையக் கதாபாத்திரமாக கொண்டு உருவாக்கப்பட்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த 5 திரைப்படங்களைப் இங்கே தொகுத்துள்ளோம்.

1. முதல்வன்


முதலமைச்சர் சம்பந்தப்பட்ட படம் என்றவுடன் ரசிகர்களுக்கு ‘பட்’டென ஞாபகத்திற்கு வருவது ஷங்கரின் ‘முதல்வன்’ திரைப்படம்தான். அதிலும் குறிப்பாக முதலமைச்சர் ரகுவரனை, ‘க்யூ’ டிவியின் ரிப்போர்ட்டர் அர்ஜுன் பேட்டியெடுக்கும் காட்சி எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும் ரசிகர்களின் மனதிலிருந்து மறையாது. சினிமா என்பது கற்பனை உலகம் என்பதையும் தாண்டி இப்படத்தின் அர்ஜுன் கேரக்டரைப் பார்த்து, இப்படியொரு முதலமைச்சர் தங்களுக்கு உண்மையில் கிடைக்க மாட்டாரா என ஒவ்வொரு ரசிகனும் இப்போது வரை ஏங்கிக் கொண்டிருப்பதை யாருமே மறுக்க முடியாது. இப்படத்தின் மையக்கருவை, அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்டு நிக்ஸானை, பிரிட்டிஷ் பத்திரிகையாளர் டேவிட் ஃப்ரோஸ்ட் 1977ஆம் ஆண்டு எடுத்த பேட்டியின் உண்மை நிகழ்விலிருந்து எழுத்தாளர் சுஜாதா உருவாக்கியிருந்தது படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

2. மக்கள் ஆட்சி


தமிழ் சினிமாவில் வெளிவந்த மிக முக்கியமான அரசியல் திரைப்படங்களில் ‘மக்கள் ஆட்சி’யும் ஒன்று. ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் மம்முட்டி, ரோஜா நடித்து 1995ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம், அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. விபத்து ஒன்றின் மூலம் தனக்கு கிடைக்கும் பல கோடி ரூபாயை அரசியலில் பயன்படுத்தி ஹீரோ எப்படி முதலமைச்சராகிறார் என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன். முழுக்க முழுக்க அரசியலைச் சுற்றி மட்டுமே நகரும் இப்படத்தில் இடம்பெற்ற லியாகத் அலிகானின் வசனங்கள் பெரிய பாராட்டுக்களை குவித்தன.

3. கோ


ஜீவாவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். காதல், நட்பு ஆகியவற்றைச் சுற்றி ஆரம்பத்தில் நகரும் இப்படம், ஒரு கட்டத்திற்கு மேல் முழுக்க முழுக்க அரசியலை நோக்கி பயணிக்கத் தொடங்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் அரசியலுக்குள் எப்படி நுழைகிறார்கள் என்பதை இப்படம் அழுத்தமாக பதிவு செய்தது. முதலமைச்சர் பிரகாஷ் ராஜை எதிர்த்து அரசியலுக்குள் நுழையும் ஜீவாவின் முன்னாள் கல்லூரி தோழரான அஜ்மல், பத்திரிகையின் உதவியால் எப்படி முதலமைச்சர் பதவியை கைப்பற்றுகிறார் என்பதை விறுவிறப்பாக படமாக்கியிருந்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். ஹாலிவுட்டில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘ஸ்டேட் ஆஃப் பிளே’ படத்திற்கும், தமிழின் ‘கோ’விற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

4. இருவர்


மணிரத்னத்தின் ‘மாஸ்டர் பீஸ் கிளாசிக்’ படங்களில் ‘இருவர்’ படமும் ஒன்று. தமிழகத்தின் இரண்டு மிக முக்கிய அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருந்தார் மணிரத்னம். தங்களது மிகச்சிறந்த நடிப்பின் மூலம் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரை ரசிகர்களின் கண்முன் நிறுத்தியிருந்தனர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்த மோகன்லால், பிரகாஷ் ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராய். வசூல்ரீதியாக வெற்றிபெறாத இப்படத்தில் ரஹ்மானின் இசையும், பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டன.

5. புதுமைப்பித்தன்


1998ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளிவந்த இப்படம், அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு சாட்டையடியாக பதில் சொல்லியது. சுயேட்சை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படும் பார்த்திபன், தன் சீட்டு ஆதரவு மூலம் ஆனந்தராஜை முதலமைச்சராக்கி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரை டம்மியாக்கி முதலமைச்சர் பதவியை கைப்பற்றி, அக்கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் நல்லவர்களாக மாற்றவதே இப்படத்தின் கதைக்களம். பார்த்திபன், தேவயானி, ரோஜா, ப்ரியா ராமன், ரஞ்சித், ஆனந்த்ராஜ், எஸ்.எஸ்.சந்திரன், வடிவேலு என இப்படத்தில் நடித்த ஒவ்வொவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

#Mudhalvan #Shankar #Arjun #ARRahman #Iruvar #ManiRatnam #MohanLal #PrakashRaj #MakkalAatchi #Mammootty #Roja #Parthiban #Puthumaipithan #Ko #KVAnand

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போதை ஆகாத - ட்ரைலர் #2


;