‘ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம்!’ - ‘காஸி’ பற்றி ராணா!

‘காஸி’ படம் குறித்து ‘டாப் 10 சினிமா’வுக்கு ராணா அளித்த பேட்டி!

கட்டுரை 15-Feb-2017 10:59 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் சங்கல்ப் இயக்கத்தில் ராணா, டாப்சி, நாசர், ஓம்புரி, அதுல்குல்கர்னி முதலானோர் நடித்துள்ள படம் ‘காஸி’. இந்த படம் நாளை மறுநாள் (17-2-17) அன்று உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் குறித்து நடிகர் ராணா ‘டாப்10 சினிமா’வுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

‘காஸி’ திரைப்படம் என்ன சொல்ல வருகிறது?

இந்திய பாகிஸ்தான் இடையே இதுவரை 4 போர்கள் நடந்துள்ளது. 1971-ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின்போது விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் நடந்த சில நிஜ சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. பாகிஸ்தான், கராச்சியில் இருந்து புறப்பட்ட பி.என்.எஸ்.காஸி என்ற நீர்மூழ்கி போர் கப்பல் எப்படி இந்திய கப்பல் படையால் அழிக்கப்பட்டது என்பது தான் இந்தப் படத்தின் கதைக்களம். இதுவரை அதிகமாக யரும் அறிந்திராத சில உண்மை சம்பவகளை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கியிருக்கும் சங்கல்ப் ‘புளூ ஃபிஷ்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இதற்காக இயக்குனர் சங்கல்ப் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.

75 நாட்கள வரை தண்ணீருக்கு அடியில் இருந்து செயல்ப்படும் இதுபோன்ற நீர்மூழ்கி கப்பல் பற்றி இந்தியாவில் யாரும் இதுவரை படம் எடுத்ததாக தெரியவில்லை. இது முதல் படம் என்று நினைக்கிறேன். அமெரிக்க தயாரிப்பான, பாகிஸ்தானின் காஸி நீர்மூழ்கி கப்பலை எப்படி இந்திய கப்பல் படை வீரர்கள் அழித்தார்கள் என்பதை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் சங்கல்ப். தேசப்பற்றை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ள இப்படம் போர் களத்தில் நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் பெருமை சேர்க்கும். இந்த படத்தை ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பாரக்க வேண்டும்.

‘காஸி’யில் உங்களது கேரக்டர் பற்றி?

கப்பல் படை உயர் அதிகாரியாக வருகிறேன். மிகவும் சேலஞ்சிங்கான கேரக்டர்! ‘பாகுபலி’ படத்திற்காக எடையை அதிகரித்திருந்தேன். ‘காஸி’க்காக 14 கிலோ எடையை குறைத்து நடித்துள்ளேன். சரித்திர கதை என்பதால நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அந்த விஷயத்தில் நிறைய நேவி ஆஃபீசர்ஸ் எங்களுக்கு உதவினார்கள். படத்தின் பெரும்பாலான பகுதி படப்பிடிப்பும் கடலுக்கு அடியிலேயே நடந்ததால் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டார்கள். இருந்தாலும் எல்லோரும் ஒரே உணர்வுடன், ஒரே குறிக்கோளுடன் பணியாற்றினார்கள்.

இந்த கதை நடக்கிற காலகட்டத்தில் கம்யூனிகேஷ்ன் வசதிகள் என்பது மிகவும் குறைவு! ரேடியோ கம்யூனிகேஷன் மட்டும் தான் அப்போது இருந்தது! கடலுக்கு அடியில் நடக்கும் போராட்டத்தில் கம்யூனிகேஷன் வசதிகள் துண்டிக்கப்பட்டு விடும். இதனால் கடலுக்கு அடியில் இருக்கும் போர் வீரர்களால் எந்த விதத்திலும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது! அந்த சூழ்நிலையில் போர் வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் படத்தில் ஹைலைட்டாக இருக்கும். இந்த படத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு பணியாற்றியவர் யார் என்றால் அவர் ஒளிப்பதிவாளர் மதி தான்! இந்த படத்தை பொறுத்தவரியில் அவரது பணி சவாலாக அமைந்திருந்தது. அண்டர் வாட்டரில் ஷூட் பண்ணுவது என்பது ரொம்பவும் கடினமானது! சொல்லப் போனால் இந்த படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் மதி தான்!

படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது?

நிறைய இருக்கிறது! இப்படத்திற்காக கிட்டத்தட்ட 8 மாத காலம் கிராஃபிக்ஸ் வேலைகள் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற ஒரு கதையை இதுவரை யாரும் படமாக்கியதில்லை. அதனால் இந்த படத்தில் பணிபுரிந்த எல்லோருக்கும் இந்த படம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

‘பாகுபலி’ படத்தில் நடிக்க எடுத்துக் கொண்ட பயிற்சிகளை போன்று இப் படத்திற்காக ஸ்பெஷல் பயிற்சிகள் ஏதும் எடுத்துக் கொண்டீர்களா?

மேலே குறிப்பிட்டதுபோல ‘பாகுபலி’க்காக அதிகரித்துக் கொண்ட எடையை இப்படத்திற்காக 14 கிலோ எடையை குறைத்தேன். மற்ற படி எந்த கடுமையான பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. கப்பல் படை வீரர்களின் கதை என்பதால் அந்த மேனரிசங்களை தெரிந்துக்கொள்ள நிறைய நேவி ஆஃபீசர்ஸை சந்தித்து பல தகவல்களை சேகரித்தோம். இயக்குனர் சங்கல்ப் நிறைய ஆராய்ச்சிகளை செய்து உருவாக்கிய கதை இது என்பதால் அவரும் நிறைய விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதால் நடிக்க அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை!

படத்தில் டாப்சிக்கு என்ன கேரக்டர்?

அவர் வங்கதேச அகதியாக வருகிறார். அவருக்கும் கதையில் முக்கியமான கேரக்டர் தான்! அந்த கேரக்டரை பற்றி இதற்கு மேல் நான் சொல்ல முடியாது!

அடுத்து நடிக்கும் படங்கள்?

‘பாகுபலி’ ஏப்ரல் மாதம் ரிலீசாகவிருக்கிறது. தமிழில் ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த காலத்து மெட்ராஸ் மகாணத்தில் நடக்கும் ஒரு வித்தியாசமான கதை! ‘பாகுபலி’ ரிலீசுக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்க இருக்கிறேன். இயக்குனர் பாலாவும் ஒரு படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார். வித்தியாசமான நல்ல கதைகள் அமைந்தால் நேரடி தமிழ் படங்களில் நடக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

சினிமாவில் உங்களுக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள்! எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள்?

கேர்ள் ப்ரெண்ட்ஸ் மட்டும் அல்ல, நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸும் இருக்கிறார்கள்! தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலாக நடித்து வருகிறேன். எல்லா மொழி சினிமாவிலும் எனக்கு நிறைய ஆண், பெண் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்க்ள்! திருமணம் செய்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. என்ன அவசரம்? முடிவாகும்போது உங்களுக்கெல்லாம் சொல்லிவிட்டு தான் செய்வேன்’’ என்ற ராணாவிடம் ‘காஸி’ திரைப்படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்துவிட்டு பேட்டியை முடித்து கொண்டோம்!

#RanaDaggubati #Ghazi #Baahubali #Baahubali2 #Arrambam #Sathyasiva #Kazhugu #Taapsee #RanaDaggubatiSpecialInterview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;