‘குற்றம் 23’ குழந்தை பிறப்பு பற்றிய படம்! -இயக்குனர் அறிவழகன்

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் ‘குற்றம் 23’ – இயக்குனர் அறிவழகன்

கட்டுரை 1-Mar-2017 2:50 PM IST VRC கருத்துக்கள்

‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ என வித்தியாசமான படங்களை இயக்கியவர் அறிவழகன். இவரது இயக்கத்தில் நான்காவது படமாக உருவாகியுள்ள படம் ‘குற்றம் 23’. அருண் விஜய், மகிமா நம்பியார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் நாளை மறுநாள் (மார்ச்-3) வெளியாகிறது. சமீபத்தில் இயக்குனர் அறிவழகனை சந்தித்தோம். அப்போது அவர் ‘குற்றம்-23’ படம் சம்பந்தமாக ‘டாட்10 சினிமா’வுக்கு அளித்த மினிப் பேட்டி இது!

‘குற்றம் 23’ படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

நான் இதற்கு முன் இயக்கிய 3 படங்களும் மாறுபட்ட கருத்துக்களை சொன்ன, மாறுபட்ட கதைக்களங்களில் பயணித்த படங்களாகும். அதைப் போல தான் இந்த படமும்! ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டால் குழந்தை எப்போது என்ற கேளவி எழுதுவிடும். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இந்த படத்தில் குழந்தை பிறப்பை மைய கருவாக வைத்திருக்கிறேன். அதை மெடிக்கல் க்ரைம் கலந்து சொல்லியிருக்கிறேன்.

இந்த கதை உருவான விதம் எப்படி?

சிறுவயதிலிருந்தே ராஜேஷ் குமார் எழுதிய க்ரைம் நாவல்களை படிப்பவன் நான். அவரிடம் மெடிக்கல் க்ரைம் சம்பந்தமாக ஒரு படத்தை இயக்கப் போகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் சில நாவல்களை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார். அந்த நாவல்களை படித்தபோது அதில் கிடைத்த ஒரு தகவல் என்னை மிகவும் பாதித்தது. அந்த கருவை வைத்துதான் உருவாக்கிய கதை தான் ‘குற்றம் 23’.

படத்திற்கு ‘குற்றம் 23’ என்று டைட்டில் வைக்க என்ன காரணம்?

அது சஸ்பென்ஸ்! அதை சொன்னால் கதை வெளிப்படும். அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.

இந்த கதைக்கு அருண் விஜய்யை எப்படி தேர்வு செய்தீர்கள்?

இந்த திரைக்கதை எழுதி முடித்ததும் இதற்கு நன்றாக பெர்ஃபாம் பண்ணக் கூடிய ஒரு அதிரடி ஆக்‌ஷன் ஹீரோ வேண்டும் என்று தோன்றியது. அப்படி யோசித்தபோது இந்த கதைக்கு அருண் விஜய் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவரிடம் கதையை சொன்னதும் அவரும் ’டபுள் ஓகே’ சொன்னார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த விக்டர் கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அதனால் அருண் விஜய்யை நடிக்க வைத்தேன். அவரும் நான் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு உழைப்பை கொட்டி அந்த கேரக்டருக்கு வலு சேர்த்துள்ளார். படம் துவங்குவதிலிருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது.

மகிமா நம்பியார் மற்றும் படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் குறித்து?

மகிமா நம்பியார் டீச்சராக வருகிறார். இந்த படத்தில் சிக்கலான சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லியிருக்கிறேன். இதனால் இந்த கதையில் நடிக்க முதலில் சில நடிகைகள் மறுத்தார்கள். அப்படி அவர்கள் நடிக்க மறுத்த கதாபாத்திரங்களில் மும்பையை சேர்ந்த கல்யாணி நடராஜன், அபிநயா, ஜெயலட்சுமி முதலானோர் நடிக்க முன் வந்தார்கள். அவர்களது பங்களிப்பு இப்படத்தில் பேசப்படும் என்பது என் நம்பிக்கை! நான் இதுவரை இயக்கிய எல்லா படங்களிலும் பெண்களை உயர்வாக தான் காண்பித்திருக்கிறேன். அதுபோன்று தான் இப்படத்திலும் இருக்கும்! இது பெண்கள் உட்பட அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்பது என் கருத்து’’ என்று சொல்லி முடித்தார் இயக்குனர் அறிவழகன்!

#Arivazhagan #Kuttram23 #ArunVijay #MahimaNambiar #Eeram #Vallinam #AarathuSinam #DirectorArivazhaganInterview #VishalChandrasekar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரமாரி டீஸர்


;