‘டோரா’ ஸ்பெஷல் : சாதனங்கள், ஊடகங்கள் வழியே பயமுறுத்திய தமிழ் சினிமா பேய்கள்!

சாதனங்கள், ஊடகங்கள் வழியே பயமுறுத்திய தமிழ் சினிமா பேய்கள்!

கட்டுரை 30-Mar-2017 2:50 PM IST Chandru கருத்துக்கள்

‘திகில்’ என்ற வார்த்தையைச் சொன்னதும், சட்டென்று ரசிகர்களுக்கு ஞாபகத்திற்கு வருவது தமிழ் பேய்ப் படங்கள்தான். அந்தளவுக்கு கடந்த ஒருசில வருடங்களாக பேய்ப் படங்கள் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் குறைந்தபட்சம் ஒரு பேய்ப்படமாவது ரிலீஸாகிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் ஹாரர் படம் நயன்தாராவின் ‘டோரா’. தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா பவளக்கொடி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரின் தந்தையாக தம்பி ராமையா நடித்திருக்கிறார். இப்படத்தில் இன்னொரு கதாபாத்திரமாக வருகிறது பழைய மாடல் கார் ஒன்று. இந்த காரை ஊடகமாகப் பயன்படுத்தி, பழிதீர்க்க நினைக்கும் ஒரு பேயின் கதைதான் ‘டோரா’ படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாழடைந்த பங்களாதான் பெரும்பாலும் பேய்கள் இருக்கும் இடமென காலங்காலமாக தமிழ் சினிமாவில் காட்டப்பட்டு வருகின்றன. அதிலிருந்து விலகி ஒரு சில படங்கள் மட்டுமே மாற்றுச் சிந்தனையுடன் வெளிவந்துள்ளன. அந்தவகையில், எலக்ட்ரானிக் பொருட்களையும், இயற்கை ஊடகங்களையும் பயன்படுத்தி பழிதீர்த்த தமிழ் சினிமா பேய்கள் பற்றிய சிறப்புக்கட்டுரைதான் இது...

யாவரும் நலம் (தொலைக்காட்சி பெட்டி)


பேய்ப் படங்களுக்கு புதிய இலக்கணம் வகுத்த படம்! பேய்ப் படங்களுக்கென்றே இருக்கும் அத்தனை ‘க்ளிஷே’க்களையும் உடைத்து, கடைசி வரை ‘சஸ்பென்ஸ்’ மூலமாகவே ரசிகர்களை திகிலடையச் செய்தது ‘யாவரும் நலம்’. விக்ரம்குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் ஒரு ‘டிவி’யை ஊடகமாகப் பயன்படுத்தி தான் நினைத்ததை சாதிக்கத் துடிக்கும் பேயைப் பற்றிய கதையைத்தான் படமாக்கியிருந்தார்கள். இப்படம் வெளிவந்த பிறகு தங்களின் வீட்டில் இரவு நேரத்தில் தனியாக ‘டிவி’ பார்ப்பதே திகில் கலந்த அனுபவமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரம் (தண்ணீர்)


‘பஞ்ச பூத’ங்களில் ஒன்றான தண்ணீரைப் பயன்படுத்தி ஒரு பெண்ணின் ஆவி பழிதீர்ப்பதுதான் ‘ஈரம்’ படத்தின் கதைக்களம். கோரமான முகம், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் என எதையுமே காட்டாமலும் ஒரு பேய்ப்படம் எடுக்க முடியும் என்பதை ‘ஈரம்’ மூலம் நிரூபித்திருந்தார் இயக்குனர் அறிவழகன். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஸ்டைலில் ஆரம்பமாகி விறுவிறுப்பாகப் பயணிக்கும் இப்படம், ஒரு கட்டத்திற்கு மேல்தான் பேய்ப்படம் என்ற உணர்வையே தரும். தண்ணீரும், சிவப்புக் கலரும்தான் இப்படத்தில் பேயின் முக்கிய ஊடகமாகக் காட்டப்பட்டிருக்கும்.

ஹலோ நான் பேய் பேசுகிறேன் (செல்போன்)


சுந்தர்.சி தயாரிப்பில் பாஸ்கர் இயக்கிய இப்படம் வழக்கமான ஒரு ஹாரர் காமெடிப் படம்தான். செல்போன் மூலமாக பேய் ஊடுருவது மட்டுமே இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒரே புதிய விஷயம். வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி கணேஷ், கருணாகரன், யோகிபாபு என ஏகப்பட்ட நட்சத்திரப்பட்டாளங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றன. சாலை ஒன்றில் அனாதையாகக் கிடக்கும் செல்போன் ஒன்றை நாயகன் வீட்டிற்கு எடுத்துவர, அதிலிருக்கும் பேய் ஒன்று வெளியே வந்து அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் புரட்டி எடுப்பதுதான் இப்படத்தின் கதைக்களம்.

மாயா (படம், மோதிரம், பொம்மை)


‘யாவரும் நலம்’ படத்தைப்போல அனைத்துத்தரப்பு விமர்சகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்ட படம் ‘மாயா’. பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸின் முதல் படமாக உருவான இப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கினார். நயன்தாரா, ஆரி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் ‘நைட் ஷோ’ என்றொரு படத்தை தனியாகப் பார்ப்பவர்களுக்கு பரிசை அறிவிப்பார், அப்படத்தின் தயாரிப்பாளர். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு தானே ஒரு கேரக்டராக மாறி அப்படத்தின் கதைக்குள் பயணிப்பதைப் போன்ற வித்தியாசமானதொரு திரைக்கதையை உருவாக்கியிருந்தார்கள். ‘நைட்ஷோ’ படத்தின் கதை மூலம் தன் கதையை தன் மகளுக்குச் சொல்ல முயலும் ஒரு தாயின் (பேயின்) கதைதான் ‘மாயா’வின் கதைக்களம். இருந்தபோதும்... ஒரு மோதிரம், பொம்மை ஆகியவை மூலமும் தன் இருப்தை வெளிக்காட்டும் ‘மாயா’ பேய்.

‘பீட்சா 2’ வில்லா (கலை)


‘பீட்சா’ படத்தின் 2ஆம் பாகம் என்ற அறிவிப்போடு வெளிவந்திருந்தாலும், அப்படத்தின் கதைக்கும் இந்த ‘வில்லா’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நெகட்டிவ் எனர்ஜி இருக்கும் இடத்தில் ஆவிகளின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதையே இப்படத்தின் மூலம் இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி நிறுவ முயன்றிருப்பார். படத்தின் நாயகன் அசோக் செல்வன் ஒரு நாவலாசிரியர். ‘வில்லா’ ஒன்றில் தங்கியிருந்து நாவல் எழுதுவார். அங்கிருக்கும் பெயிண்டிங் ஒன்றில் வரையப்பட்டிருக்கும் காட்சி, தன் நிஜ வாழ்க்கையில் நடந்ததுபோன்ற உணர்வு அவருக்கு ஏற்படும். அதனைத் தொடர்ந்து நடிக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணியில் கதை நகரும். நாவல், பெயின்டிங், சினிமா போன்ற கலை வடிவங்களின் வழியே ரசிகர்களை பயமுறுத்த முயன்றது ‘வில்லா’.

#Nayantara #Dora #YaavarumNalam #Madhavan #VikramKumar #Eeram #HelloNaanPeiPesuren #Vaibhav #AishwaryaRajesh #Maya #AshwinSaravanan #Pizza2 #SJSuryah

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;