‘எங்க அம்மா ராணி’ படத்திற்கு இளையராஜா இசை அமைக்க காரணம்?

தன்ஷிகா நடித்துள்ள ‘எங்க அம்மா ராணி’ படம் குறித்து இளையராஜா சொன்ன விஷயங்கள்!

கட்டுரை 2-May-2017 1:44 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பாணி இயக்கத்தில் தன்ஷிகா முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘எங்க அம்மா ராணி’. இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கும் இந்த படம் வருகிற 5-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் குறித்து இளையராஜா பேசிய விஷயங்கள் விவரம் வருமாறு:

‘‘இன்று இருக்கும் திரையுலகம் எங்கெங்கோ போய் கொண்டிருக்கிறது. அது சரியான தடத்தில் செல்கிறதா இல்லை தடம் மாறி செல்கிறதா என்பது பார்க்கும் பார்வையாளர்களுக்கும், படம் எடுப்பவர்களுக்குமே சரியாக தெரிவதில்லை. உதாரணத்திற்கு ஒரு சிறு விஷயம்! சினிமாவில் சிஜி என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதற்கான ரிசல்ட் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியுமா? அப்படி இருக்கையில் அதற்கென்று தனி பட்ஜெட் எதற்கு?

இன்று இருக்கும் சினிமா உலகில் ஒரு சாதாரண, யதார்த்தமான கதையை எமோஷனலாக சொல்லும் தன்மை குறைந்து கொண்டே இருக்கிறது. கோயில்களும், கலாச்சாரங்களும் எதற்காக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது? மக்களுக்கு நல்ல விஷயங்களை தொடர்ந்து ஞாபகப்படுத்ததான்! அப்படி இல்லை என்றால் அது வழக்கொழிந்து போய்விடும். முன்னோர்கள் இதை நமக்கு செய்தது எதிர்காலத்தில் நல்ல விஷயங்கள் ரத்ததில் கலந்து நிற்க வேண்டும் என்பதற்காக தான்! சினிமாவை பொருத்தவரை அது ஒரு பொழுது போக்கு சாதனம் என்றாலும் அது நல்ல விஷயங்களை நல்ல விதமாக சொல்லும் விதமாகவும் இருக்க வேண்டும்! அந்த வகையில் இந்த படம் சற்று மாறுபட்டு இருந்ததால் தான் இப்படத்திற்கு இசையமைத்தேன்’’ என்று சொல்லியிருக்கும் இளையராஜாவிடம் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

இதற்கு முன் இசையமைத்த படங்களை விட இப்படத்தில் உள்ள வேறுபாடுகள் பற்றி?

நான் வேலை செய்யும் படம் பற்றி எப்போதும் சொல்வதில்லை. ஜனங்கள் போய் பார்த்து விட்டு அவர்கள் தான் சொல்ல வேண்டும். அவர்கள் தான் இது நல்ல படம் என்று முடிவை சொல்ல வேண்டும்.

‘எங்க அம்மா ராணி’ படத்தைப் பற்றி?

ஒரு தாய் தன் குழந்தைக்காக எது வேண்டுமானாலும் செய்வாள். குழந்தை மீதான தாயின் அக்கறை 200 சதவீதம் இருக்கும். இப்படத்தி ல் தன் குழந்தைக்காக அந்த தாய் யாரும் செய்ய முடியாத ஒரு விஷயத்தை செய்கிறாள். அது தான் மத்த படங்களுக்கும் இந்த படத்திற்குமான வித்தியாசம்!

படத்தின் பாடல்கள் பற்றி?

அம்மாவை பற்றிய ஒரு பாடல் போட்டுள்ளேன்! உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அம்மா என்று ஒருத்தி இல்லையென்ற ஒரு எண்ணமே உலகில் எவருக்கும் வந்ததில்லை. ‘வா வா மகளே…’ என்ற பாடல் படத்தின் ப்ரோமாவிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் பின்னணி இசை பற்றி?

படத்தின் பின்னணி இசை ஒவ்வொரு ரீலுக்கும் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக ஒரு தீம் கிடைத்தது என்றால் இசையமைப்பாளர்கள் அதை மேம்படுத்தி கொண்டே செல்வோம். ஆனால் இந்த படத்தில் காட்சிகளுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தால் பின்னணி இசையும் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. அது ஒரு புதிய விஷயமாக, இண்டஸ்ட்ரிங்கான விஷயமாக இருந்தது! நிச்சயமாக இப்படத்தை எதிர்பார்த்து போகலாம். உங்கள் வாழ்த்துகளை தான் இப்படத்தின் குழு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது, என்பதை படக்குழுவின் சார்பாக நான் சொல்லிக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார் இளையராஜா!

‘எம்.கே.ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் முத்துகிருஷ்ணன் தயாரித்திருக்கும் ‘எங்க அம்மா ராணி’ படத்தை இயக்கியிருக்கும் பாணி, இயக்குனர் சமுத்திரக்கனியிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



#EngaAmmaRani #Ilayaraja #Dhansika #Muthukrishnan #Baani #Samuthirakani #MKFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;