'தவறானவர்களுக்கு என்னிடம் இடமில்லை’ – ரசிகர்கள் சந்திப்பு விழாவில் ரஜினி பேச்சு!

 'தவறானவர்களுக்கு என்னிடம் இடமில்லை’ – ரசிகர்கள் சந்திப்பு விழாவில்  ரஜினி பேச்சு!

செய்திகள் 15-May-2017 2:45 PM IST VRC கருத்துக்கள்

9 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் இன்று தன் ரசிகர்களை சந்தித்துள்ளார். மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்திக்க முடிவு செய்திருக்கும் ரஜினி இன்று திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்பட்ம் எடுத்துக்கொண்டார். சென்னை கோடம்பாகத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திர திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரஜினியுடன் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும் கலந்துகொண்டார். அப்போது ரஜினி பேசிய பேச்சின் சுருக்கம் வருமாறு:
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னுடைய இன்னொரு சகோதரர். அவர் என் மேல் காட்டிய அக்கறை, அன்பு, அவர் எனக்கு கொடுத்த பாடங்கள் பல! அவரிடமிருந்து தான் நான் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். சினிமாவில் அவரைப்போல நேர்மையான ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை.

முதலில் நடக்க இருந்த இந்த சந்திப்பு ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த படங்களுக்கான வேலை இருந்ததால் அந்த சந்திப்பை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது.
அதைப் போல இலங்கை செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்தபோதும் சிலர் நான் பின் வாங்கிவிட்டதுபோல் பேசினார்கள். ரஜினி முடிவு எடுக்க திணறுகிறார், தயங்குகிறார், பயப்படுகிறார் என்றெல்லாம் பேசினார்கள். நான் எந்தவொரு முடிவு எடுக்கும்போதும் மனதளவில் நிறைய யோசிப்பேன். பிரச்சனைகள் வரக்கூடாது என்று யோசித்து எடுத்த முடிவு தான் அது!

என்னை பற்றி வேறுவிதமாகவும் பேசுகிறார்கள். ரஜினி தன் பட ரிலீசின்போது மட்டும் தான் ஏதாவது யுக்திகள் செய்வார் என்றெல்லாம்! என் ரசிகர்களின் ஆசீர்வாதத்தால் எனக்கு அதுபோன்று யுக்திகள் எல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

என் ரசிகர்களை, தமிழ் மக்களை அப்படியெல்லாம் ஏமாற்றிவிட முடியாது. அவர்கள் ஏமாற மாட்டார்கள். அவர்கள் ஏமாறுவது ஒரு விஷயத்தில் மட்டும் தான். அதுபற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை.

அரிசி வெந்தால்தான் சோறாகும். படம் நன்றாக இருந்தால் தான் வெற்றியடையும். என்னை இயக்கியவர்கள் நல்ல கதை, பாடல், கருத்து அமைத்து நல்ல படம் கொடுத்ததால் தான் நான் இப்போது இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.

அரசியல் பற்றி பேசுவது என்றால் ரசிகர்களை படம் பார்க்க வைப்பதற்காகவே நான் அரசியில் மாயை காட்டுவது போல் செய்திகள் வருகின்றன. 21 வருடங்களுக்கு முன்பாக ஒரு அரசியல் விபத்து நடந்தது. அந்த நிகழ்வு அப்போது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது போன்று உருவானது. அப்போது சில ரசிகர்கள் அரசியலில் சற்று ஆர்வம் காட்டினார்கள். அதில் சில தவறான வழிகாட்டுதலிலும் சென்றார்கள். அதற்கு பிறகுதான் நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்று பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

ஒரு நடிகனாக நான் இப்போது என்னுடைய கடமைகளை சரிவர செய்து வருகிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அதுபோல நாம் எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு பொறுப்புக்கும் உண்மையாக இருக்க வேண்டும். ஒருவேளை நான் அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது மாதிரியான தவறான நோக்கத்தோடு அரசியலை அணுகுபவர்களுக்கு என்னிடத்தில் இடமில்லை!

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

#Rajinikanth #Superstar #SPMuthuraman #Kabali #Endhiran2 #Sivaji #Rajini #Lingaa #2PointO

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;