கோலிவுட்டில் அதிகரிக்கும் பாலிவுட்டின் ஆதிக்கம்!

கோலிவுட்டில் அதிகரிக்கும் பாலிவுட்டின் ஆதிக்கம்!

கட்டுரை 30-May-2017 4:23 PM IST Chandru கருத்துக்கள்

அக்ஷய்குமார், கஜோல், அனுராக், விவேக் ஓபராய், நானா படேகர் என பாலிவுட்டின் ஆதிக்கம் கோலிவுட்டில் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்த சிறப்புக் கட்டுரை

‘பாகுபலி’யின் பிரம்மாண்ட வெற்றி தென்னிந்திய சினிமாவின் வர்த்தகத்தை உலகளவில் பல மடங்கு உயரச் செய்திருக்கிறது. அதோடு, தென்னிந்திய படங்கள் மீதான பாலிவுட் நடிகர்களின் கவனமும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. திறமையுள்ள நடிகர்களை மொழி, மாநிலம் கடந்து சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதில் தமிழ் சினிமாவிற்கு நிகரில்லை என்பது வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தெரியவரும். பாலிவுட்டில் கொடிகட்டிப் பறப்பதற்கு முன்பே ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா போன்ற உலக அழகிகளை திரையுலகத்தில் அறிமுகம் செய்து வைத்த பெருமை கோலிவுட்டையே சாரும். பாலிவுட் ரசிகர்களின் ஆதர்ச நாயகனான அனில் கபூரை தன்னுடைய ‘பல்லவி அனு பல்லவி’ கன்னட படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தவர் நம் மண்ணின் இயக்குனரான மணிரத்னமே!

இதற்கு முன்பு அவ்வப்போது பாலிவுட் நடிகர்கள் தமிழ்ப்படங்களில் நடித்த வரலாறு உண்டென்றாலும், இப்போது இந்த 2017ஆம் ஆண்டில் உருவாகிக் கொண்டிருக்கும் பெரிய படங்கள் பலவற்றில் முக்கிய கதாபாத்திரங்களில் பாலிவுட்டின் ஆதிக்கம் சொல்லிக்கொள்ளும்படி அதிகரித்திருக்கிறது. அதனைப்பற்றிய ஒரு சிறப்புக்கட்டுரைதான் இது.

1. அக்ஷய்குமார் (2.0)

பாலிவுட்டின் முன்னணி ஹீரோ ஒருவர் தமிழ்ப்படமொன்றில் வில்லனாக நடிப்பார் என நிச்சயமாக யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படமொன்றில், அதுவும் ஏற்கெனவே பிரம்மாண்ட வெற்றிபெற்ற ‘எந்திரன்’ படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பென்றால், யார்தான் மறுக்க முடியும்? டெல்லியில் நடந்த முக்கிய காட்சி ஒன்றில் பங்குபெற்ற அக்ஷய்குமாரின் கெட்அப் இணையதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ‘2.0’வில் அக்ஷய்குமாரின் கேரக்டர் எப்படிப்பட்டதாக இருக்கும் என நகம் கடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய சினிமா ரசிகர்கள். அக்ஷய்குமார் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

2. அனுராக் காஷ்யப் (இமைக்கா நொடிகள்)

அதர்வா, நயன்தாரா ஆகியோருடன் பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார் என்றதுமே ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. ‘டிமான்ட்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில், சைக்கோ வில்லனாக அனுராக் காஷ்யப்பின் கதாபாத்திரம் ரசிகர்களை மிரளச் செய்துள்ளது. அவரின் நடிப்பைப் பார்ப்பதற்காக படத்தைப் பார்க்க வேண்டும் என தனியொரு கூட்டம் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் நிற்கிறது.

3. கஜோல் (வேலையில்லா பட்டதாரி 2)

20 வருடங்களுக்கு முன்பு, ‘மின்சாரக்கனவு’ படத்தின் மூலம் அறிமுகமான ஒரு ஜோடி காந்தக் கண்களை அத்தனை எளிதில் தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பாலிவுட் அழகியை இப்போது ‘வில்லி’யாக்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது ‘வேலையில்லா பட்டதாரி 2’ டீம். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருககிறார்கள்.

4. விவேக் ஓபராய் (விவேகம்)

பாலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார், ‘ரத்த சரித்திரம்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த சென்னை பையன் விவேக் ஓபராய், இப்போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் இன்டர்நேஷனல் போலீஸாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் வில்லனா? அல்லது நல்ல போலீஸா? என்பதுதான் ரசிகர்களின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. வரும் ஆகஸ்டில் அதற்கான விடை கிடைத்துவிடும்.

5. நானா படேகர் (காலா)

இந்திய அளவில் சிறந்த நடிகர்களின் பட்டியலை எடுத்தால், அதில் நானா படேகருக்கு தனியொரு இடமுண்டு. அப்படிப்பட்டவரை ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் பாரதிராஜா. இப்போது, சூப்பர்ஸாடரின் ‘காலா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார். ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

#AkshayKumar #Rajinikanth #AnuragKashyap #ImaikkaNodigal #Kajol #MinsaraKanavu #Dhanush #NanaPatekar #Kaala #VivekOberoi #Vivegam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்க செல வீடியோ பாடல் - காலா


;