வேலையில்லா பட்டதாரி 2 - டீஸர் விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி 2 - டீஸர் விமர்சனம்

கட்டுரை 8-Jun-2017 1:26 PM IST Chandru கருத்துக்கள்

முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு வரும் இரண்டாம் பாகமென்பதால், ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ, அதை சுற்றி வளைக்காமல் நேரடியாகவே இந்த டீஸர் மூலம் சொல்லிவிட்டார் தனுஷ். ஆம்... இதுவும் கமர்ஷியல் மாஸ் என்டர்டெயின்மென்ட் படம்தான் என்பதற்கு இந்த 37 வினாடிகள் ஓடும் டீஸரே சான்று. தனுஷின் கேரியரிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ‘விஐபி’யின் 2ஆம் பாக அறிவிப்பு வந்தபோதே, முதல் பாகத்தைப்போல் 2ஆம் பாகமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுமா என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கின. ஆனால், அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் 2ஆம் பாகத்தில் என்னென்ன புதுமாதிரியான விஷயங்களை புகுத்தலாம் என்பதில் தனுஷ் தெளிவாக இருந்தார்.

அதன் விளைவுதான், ஹிந்தியிலிருந்து கஜோலை அழைத்துவந்து படத்தின் வில்லியாக்கியதும், அனிருத்திற்குப் பதிலாக ஷான் ரோல்டனை இசையமைக்க வைத்திருப்பதும். இந்த டீஸரில் காட்டியிருப்பது இரண்டு கேரக்டர்கள் மட்டுமே. ஒன்று ஹீரோ தனுஷ். இன்னொன்று அவருடைய அப்பா சமுத்திரக்கனி. மற்றபடி தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக வேறு வேறு சண்டைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரே மாதிரியான ‘கிக்’ ஷாட்களை ஸ்லோ மோஷனில் காட்டியிருக்கிறார்கள் அவ்வளவே.

‘‘ஒருத்தனுக்கு எதிரங்க அதிகமா இருந்தாங்கன்னா, அவனைப் பார்த்து அவனுங்க பயப்படுறானுங்கன்னு அர்த்தம்!’’ ‘‘எதிரிங்க இல்லைனா வாழ்க்கையே போர்!’’ ‘‘இந்த எதிரிங்கள்லாம் அவங்களாவே வருவாங்க... அவங்களே போய்டுவாங்க!’’ என ஹீரோ தனுஷுக்கு அப்பாவின் அறிவரை வசனங்களே டீஸர் முழுவதும் வியாபித்திருக்கின்றன.

முதல் பாகம் அம்மா சென்டிமென்ட்டை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருந்ததுபோல, இந்த 2ஆம் பாகத்தில் அப்பா சென்டிமென்டிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கஜோலின் கதாபாத்திரத்தை இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் எப்படி கையாண்டிருக்கிறார் என்பதைப் பொறுத்துதான் தனுஷின் மாஸ் காட்சிகளுக்கான கைதட்டல்களும் திரையரங்குகளில் அரங்கேறும்.

‘விஐபி’யின் மிகப்பெரிய ப்ளஸ் அனிருத்தின் பாடல்களும், செம மாஸான பின்னணி இசையும். ஆனால், 2ஆம் பாகத்திற்காக ஷான் ரோல்டனை ஒப்பந்தம் செய்திருப்பது தனுஷின் துணிச்சல். ஆனால், அது இந்தப் படத்திற்கு புதியதொரு பரிணாமத்தை கொடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. ‘விஐபி’யின் பின்னணி இசையை 2ஆம் பாக டீஸரில் இடம்பெறச் செய்யாமல், ஷானின் புதிய பின்னணி இசைக் கேட்பது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதற்கே தனுஷை பாராட்டலாம்!

மற்றபடி, இப்படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும், தனுஷின் ரொமான்ஸ் பக்கங்கள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும் என்பன போன்ற விஷயங்களை டிரைலர் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதே இப்போதைய நிலை.#Kajol #Dhanush #SoundaryaRajinikanth #AmalaPaul #VIP2 #SeanRolden #Anirudh #WunderbarFilms #VCreations #KalaipuliSThanu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலா ட்ரைலர்


;