பண்டிகை - விமர்சனம்

கொண்டாடலாம்!

விமர்சனம் 14-Jul-2017 11:42 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Feroz
Production : Tea Time Talks Production
Starring : Krishna, Anandhi, Aathma Patrick
Music : R. H. Vikram
Cinematography : Aravind
Editing : Prabaahar

பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள நடிகை விஜயலட்சுமி தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் படம் ‘பண்டிகை’. கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் மூலம் விஜயலட்சுமியின் கணவரான ஃபெரோஸ் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். பர பர ஆக்ஷன் காட்சிகளால் எடிட் செய்யப்பட்டிருந்த ‘பண்டிகை’ டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பு, படத்திலும் பிரதிபலித்திருக்கிறதா?

கதைக்களம்

ஸ்டார் ஹோட்டலில் சர்வீஸராக வேலைசெய்யும் ஆதரவற்ற கிருஷ்ணாவிற்கு வெளிநாடு சென்று வேலைபார்க்க வேண்டுமென்பது நீண்டநாள் ஆசை. அதற்கு அவருக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. சொந்த பந்தங்கள், நண்பர்கள் என அனைவரும் கைவிரித்த நிலையில் பணத்திற்கு என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறார் கிருஷ்ணா. இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் கிரிக்கெட் பெட்டிங்கில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் ‘தாதா’ மதுசூதனன், கிரிக்கெட் இல்லாத சமயங்களில் ‘பண்டிகை’ எனும் ஆட்கள் மோதிக்கொள்ளும் சூதாட்டம் ஒன்றை சட்டத்திற்கு புறம்பாக நடத்தி வருகிறார். இந்த சூதாட்டத்தின்படி இரண்டு பேர் மோதிக்கொள்வார்கள். சண்டை நடந்துகொண்டிருக்கும்போதே இருவர்மீதும் பார்வையாளர்கள் ‘பெட்டிங்’ கட்டலாம். முடிவை சரியாகக் கணித்தவர்களுக்கு கணிசமாக பண்ம கிடைக்கும். இப்படிப்பட்ட ‘பண்டிகை’யில் அடிக்கடி சூதாடி தன் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் சரவணன், கிரிக்கெட் சூதாட்டம் ஒன்றில் தன் வீட்டுப் பத்திரத்தையும் பறிகொடுக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், ஒயின் ஷாப்பில் நடக்கும் அடிதடி மோதல் ஒன்றில் கிருஷ்ணாவின் ஆக்ரோஷத்தையும் வேகத்தையும் பார்க்கும் சரவணன் அவருக்கு ‘பண்டிகை’யை அறிமுகம் செய்து வைக்கிறார். ஆரம்பத்தில் அதில் மோதுவதற்கு விருப்பமில்லாத கிருஷ்ணா, தன் பணத்தேவைக்காக அதில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு கிருஷ்ணா, சரவணனின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதே ‘பண்டிகை’!

படம் பற்றிய அலசல்

‘பண்டிகை’ எனும் சூதாட்டம் நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதியதொரு அனுபவத்தைத் தரும். அதற்காக அறிமுக இயக்குனர் ஃபெரோஸிற்கு பாராட்டுகள்! ஒரு பரபரப்பான ஆக்ஷன் படம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு சமீபகால படங்களில் ‘பண்டிகை’யின் முதல்பாதியை தாராளமாக உதாரணம் சொல்லலாம். அந்தளவிற்கு காட்சிகளை விறுவிறுப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஃபெரோஸ். இயக்குனரின் எண்ணத்தை திரையில் பிரதிபலிப்பதற்காக ‘டெக்னிக்கல்’ டீம் கடுமையாக உழைத்துள்ளது படத்தில் கண்கூடுடாகத் தெரிகிறது. குறிப்பாக ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் போன்றவை கச்சிதமாக வேலைசெய்துள்ளன. ‘பண்டிகை’ மோதல்களை அத்தனை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார் சண்டை இயக்குனர். அவருக்கும் ஒரு தனிப் பாராட்டு!

இத்தனை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்ட படத்தின் முதல்பாதியைப் பார்த்த ரசிகர்களுக்கு, இரண்டாம்பாதி மீதான எதிர்பார்ப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், ரசிகர்களின் எண்ணத்திற்கு மாறாக படத்தின் இரண்டாம்பாதி முற்றிலுமாக வேறொரு கோணத்தில் பயணிக்கத் தொடங்குகிறது. ஆரம்பத்தில் அது கொஞ்சம் சோர்வைத்தந்தாலும், போகப்போக காட்சிகளின் சுவாரஸ்யத்தால் படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறார் இயக்குனர் ஃபெரோஸ். இருந்தபோதும் முதல்பாதியை ஒப்பிட்டுப் பார்க்கையில், இரண்டாம்பாதி சற்று ஏமாற்றமே! ஆனாலும் சாமர்த்தியமாக அமைக்கப்பட்டிருக்கும் ‘க்ளைமேக்ஸ்’ ஒரு திருப்தியான படம் பார்த்த அனுபவத்தை தந்துவிடுகிறது.

அதேபோல் கதைக்கு கொஞ்சம்கூட தேவையேயில்லாத கதாநாயகியின் கேரக்டரை எதற்காக இத்தனை பலவீனமாக அமைத்துள்ளார் இயக்குனர்? என்ற கேள்வியும் எழுகிறது. மற்ற அனைத்து கேரக்டர்களையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கும் ஃபெரோஸ் நாயகி கதாபாத்திரத்திற்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அல்லது அந்த கேரக்டர் இல்லாமலேயே படத்தை நகர்த்தியிருக்கலாம். அதேபோல், இரண்டாம்பாதியில் வரும் ஒரு ‘அயிட்டம் சாங்’கும் தேவையில்லாத ஒன்றே! இதுபோன்ற குறைகளைக் களைந்திருந்தால் ‘பண்டிகை’யை இன்னும் சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள் ரசிகர்கள்.

நடிகர்களின் பங்களிப்பு

இதுவரை கிருஷ்ணா நடித்துள்ள படங்களில் ‘பண்டிகை’தான் பெஸ்ட் என தாராளமாகச் சொல்லலாம். அந்தளவுக்கு அவரின் உழைப்பை இந்த படம் முழுவதும் பார்க்க முடிகிறது. ஒரு சாதாரணனை சாமானியனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆக்ஷன் காட்சிகளில் அவர் சிந்தியிருக்கும் வியர்வைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். நாயகி கதாபாத்திரமே படத்திற்கு தேவையில்லை என்பதால், ஆனந்தியைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. பணம் சம்பாதிக்க குறுக்க வழியை நாடும் ஒரு மிடில் கிளாஸ் ஆளிற்கு ஏற்படும் பரிதாபங்களை அருமையாக பிரதிபலித்திருக்கிறார் சரவணன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு பெயர்சொல்லும் படமாக அமைந்துள்ளது ‘பண்டிகை’. வழக்கமான கதாபாத்திரம்தான் என்றாலும் ‘தாதா’ கேரக்டரில் மிரட்டியிருக்கிறார் மதுசூதனன். சிரிப்பதற்காக மட்டுமில்லாமல், கதையோடும் ஒன்றிப்பயணித்துள்ளார் ‘பிளாக்’ பாண்டி. ‘முந்திரி சேட்டு’ கேரக்டரில் நிதின் சத்யா மனதில் நிற்கிறார். ‘திக்கு வாய்’ கேரக்டரில் வரும் கருணாஸ் இரண்டு காட்சிகளில் தோன்றி பலத்த கைதட்டல்களை அள்ளியிருக்கிறார்.

பலம்

1. விறுவிறுப்பான படத்தின் முதல்பாதி
2. டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. நாயகியின் கேரக்டரும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும்
2. இரண்டாம்பாதியில் வரும் தேவையில்லாத பாடல்

மொத்தத்தில்...

அறிமுகப்படம் என்ற வகையில் ‘பண்டிகை’ மூலம் அழுத்தமாக தமிழ் சினிமாவில் கால்பதித்திருக்கிறார் இயக்குனர் ஃபெரோஸ். முதல்பாதியிலிருந்து இரண்டாம்பாதி கதைக்களம் வேறொரு தளத்திற்கு மாறினாலும், ரசிகர்களுக்கான சுவாரஸ்யத்தை தக்க வைத்துக்கொள்ளும் அவரின் வித்தையால் ‘பண்டிகை’ வசீகரிக்கிறது. அதற்கு டெக்னிக்கல் விஷங்கள் பெரிய அளவில் கைகொடுத்துள்ளன. சின்னச் சின்ன குறைகளைக் களைந்திருந்தால் ‘பண்டிகை’ இன்னும் மெருகேறியிருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : கொண்டாடலாம்!

ரேட்டிங் : 5.5/10

#PandigaiMovieReview #Pandigai #Kreshna #Anandhi #AathmaPatrick #Aravind #Prabaahar #Vijayalakshmi #PandigaiReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரா - டிரைலர்


;