ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்

பொறுத்தார் இறுதியில் சிரிப்பார்!

விமர்சனம் 14-Jul-2017 3:02 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ilavarasu Odam
Production : Amma Creations
Starring : Atharvaa, Soori, Regina Cassandra, Pranitha, Aishwarya Rajesh, Aaditi Pohankar, Rajendran
Music : D. Imman
Cinematography : Sree Saravanan
Editing : Praveen K. L.

பரதேசி, சண்டிவீரன், ஈட்டி மூலம் வரிசையாக வரவேற்பைப் பெற்றுவரும் அதர்வாவின் இந்த வார ரிலீஸ் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. ஓடம்.இளவரசு இயக்கியிருக்கும் இப்படத்தை டி.சிவா தயாரித்துள்ளார். ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போஹன்கர் என நான்கு நாயகிகளுடன் சூரி, ராஜேந்திரனும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் காதல் கசமுசவா? இல்லை காமெடி கலாட்டாவா?

கதைக்களம்

தன் திருமணத்திற்கு அழைப்பதற்காக தன் முன்னாள் காதலி ஒருவரைத் தேடி மதுரை வருகிறார் அதர்வா. வந்த இடத்தில் தான் தேடி வந்த அட்ரஸில் சம்பந்தப்பட்ட பெண் இல்லாததால், அங்கே குடியிருக்கும் சூரியிடம் உதவி கேட்கிறார். அவர் தேடிவந்த பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக அதர்வாவுடன் இணைந்து சூரியும் பயணிக்கிறார். போகும் வழியில் தன் காதல் லீலைகள் ஒவ்வொன்றாக சூரியிடம் அதர்வா சொல்லத்துவங்க, அதன்பிறகு ஃப்ளாஷ்பேக்கில் விரியும் காமெடி + காதல் கலாட்டாக்களே ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’.

படம்பற்றிய அலசல்

நான் அவன் இல்லை, தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆட்டோகிராஃப் போன்ற படங்களின் சாயலில் இருக்கும் கதை என்ற வஸ்துவை தேர்ந்தெடுத்து, அதில் எந்தவித லாஜிக்கும் இல்லாமல் கொஞ்சம் கிளுகிளுப்பு, ஆங்காங்கே கலகலப்பு கலந்து ஒரு சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதையை உருவாக்கி, 2 மணி நேர பொழுதுபோக்குப் படம் ஒன்றைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் ஓடம் இளவரசு. பெண்களை இழிவுப்படுத்துவது போன்ற கதை, லாஜிக்கே இல்லாத திரைக்கதை என்பதையெல்லாம் விட்டுவிட்டு, ஒரு பொழுதுபோக்குப் படமாக எடுத்துக்கொண்டாலும் படத்தின் முதல்பாதியை கடப்பதற்கு அத்தனை கடினமாக இருக்கிறது. ரெஜினாவுடன் காதல், அதன்பிறகு அதிதி போஹன்கருடன் காதல், இடைவேளைக்குப் பின்னர் ப்ரணிதாவுடன் காதல் என மலர்ந்துகொண்டே செல்கிறது அதர்வாவின் காதல் எபிசோட்கள்.

ஒட்டுமொத்த படத்தில் கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே நம்மையும் மறந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள் அதர்வாவும், சூரியும். அதுவரை ரசிகர்களை சோர்வடைய வைத்த ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் அந்த கடைசி 30 நிமிடங்களில் ஒட்டுமொத்த அலுப்பையும் போக்கிவிடுகிறார்கள். இந்த மேஜிக்கை முழுப்படத்திலும் நிகழ்ந்திருந்தால் ஒரு முழுநீள காமெடிப் படத்தைப் பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும்.

டெக்னிக்கலாக எடிட்டர் பிரவீனின் பங்களிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. நான்கு காதல் எபிசோட்களை ஒன்றிணைத்து, எந்த குழப்பமும் ஏற்படாத வகையில் எடிட் செய்து அசத்தியிருக்கிறார். மற்றபடி ஒளிப்பதிவு, இமானின் பாடல்கள், பின்னணி இசை போன்றவை பெரிய கவனம் பெறவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுபோன்ற கதைகளை ஒவ்வொரு நாயகனும் கடந்து வந்தே ஆகவேண்டும் என்பது விதி. அந்தவகையில், தனக்குக் கிடைத்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறார். நடிப்பதற்கு பெரிய வேலையில்லை என்றாலும், அதர்வாவின் யதார்த்தமான பங்களிப்பு படத்திற்கு பலமே. நாயகிகள் ரெஜினா, ப்ரணிதா, அததி போஹன்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு சரிசமமாக காட்சிகளை பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதில் ரெஜினாவின் கிளாமருக்கும், ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் சோதித்த சூரி, கடைசியில் ஒட்டுமொத்தமாக சிரிக்க வைத்து பேலன்ஸ் செய்துவிடுகிறார். ‘மொட்டை’ ராஜேந்திரனின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. சீரியஸான காட்சி ஒன்றில் தன் காமெடி டயலாக்கால் மெய்மறந்து சிரிக்க வைத்திருக்கிறார் மயில்சாமி. அதர்வாவின் அப்பா கதாபாத்திரத்தில் டி.சிவாவின் பங்களிப்பு பொருத்தமாக உள்ளது.

பலம்

1. படத்தின் இறுதி 30 நிமிடங்கள்
2. அதர்வா
3. எடிட்டிங்

பலவீனம்

1. கதை
2. முதல்பாதி திரைக்கதை
3. பாடல்கள்

மொத்தத்தில்...

கதை, லாஜிக் விஷயங்களையெல்லாம் பெரிதாக கவனத்தில் கொள்ளாது, முதல்பாதி தரும் சோர்வை பொறுத்துக்கொண்டால் படத்தின் இறுதி காட்சிகளில் நிச்சயமாக சிரித்துவிட்டு வரலாம் என்பதே ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படம் தரும் அனுபவம்.

ஒரு வரி பஞ்ச் : பொறுத்தார் இறுதியில் சிரிப்பார்!

ரேட்டிங் : 4/10

#GeminiGaneshanumSuruliRaajanum #Atharvaa #Soori #ReginaCassandra #Pranitha #AishwaryaRajesh #Imman #IlavarasuOdam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;