ஸ்பைடர் - விமர்சனம்

லாஜிக் மீறல்களையும் மறக்கச் செய்கிறது ‘ஸபைடரி’டன் பரபர காட்சிகள்!

விமர்சனம் 27-Sep-2017 1:28 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : AR Murugadoss
Production : NVR Cinema
Starring : Mahesh Babu, Bharath, Rakul Preet Singh, S. J. Surya, RJ Balaji
Music : Harris Jayaraj
Cinematography : Santosh Sivan
Editing : Sreekar Prasad

‘ஸ்பைடர்’ங்கிற டைட்டிலைக் கேட்டதுமே.... ‘ஸ்பை’ த்ரில்லர் படமோனு கேட்கத் தோணுது... ‘ஸ்பைடர்’ ஸ்பை த்ரில்லரா?

படம் பார்க்கிறதுக்கு முன்னாடி எல்லோருக்கும் இந்த சந்தேகம் வர்றது சகஜம்தான். ஏன்னா, டைட்டில் மட்டுமில்ல, டீஸர், டிரைலரைப் பார்த்ததுமே அப்படியொரு எண்ணம்தான் வரும். ஆனா, ஹீரோ, வில்லன் சேஸிங்கை அடிப்படையா வச்சு பண்ணிருக்கிற வழக்கமான த்ரில்லர் படம்தான் ஸ்பைடர். சிபிஐல வேலை பார்க்குற மகேஷ் பாபு ஒரு இன்டெலிஜென்ட் ஆபிஸர். அவரோட வேலை என்னன்னா, ‘‘போன் மூலமா யாராவது சதி வேலைகள் பத்தி பேசுறாங்களானு ஒட்டுக்கேட்கிறதுதான்’’. ஆனா, கவர்ன்மென்ட்டுக்குத் தெரியாம இன்னொரு வேலையும் பண்றாரு ஹீரோ. போன்ல பேசுற அப்பாவி ஜனங்க எதாவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தா, அந்த பிரச்சனையில இருந்து அவங்கள விடுவிக்கிறாரு. இந்த மாதிரி முகம் தெரியாத மனுஷங்களுக்கு உதவி பண்றதுதான் தனக்கு ஆத்ம திருப்தி தர்ற விஷயம்னு நெனைக்கிறாரு மகேஷ் பாபு. இப்படிலாம் போய்க்கிட்டிருக்கிறப்போ, திடீர்னு ரெண்டு கொலை நடக்குது. தன்னையும் மீறி அந்த கொல நடந்ததால, அதுக்குப் பின்னாடி யாரு இருக்காங்கன்னு கண்டுபிடிக்க மகேஷ் பாபு களத்துல இறங்குனா, அடுத்தடுத்த பல அதிர்ச்சியான விஷயங்கள கண்டுபிடிக்கிறாரு. அதுக்கப்புறம் நடக்கிற பரபர சம்பவங்கள்தான் ‘ஸ்பைடர்’ படத்தோட கதை.

மகேஷ் பாபுவோட அறிமுக தமிழ்ப்படம்னு விளம்பரம் பண்றாங்க... இருந்தாலும் ‘டப்பிங்’ படம் மாதிரியான ஃபீல் வர்றதையும் தவிர்க்க முடியல... உண்மையைச் சொல்லுங்க... நேரடித் தமிழ்ப்படம் பார்க்கிற மாதிரி இருக்கா ‘ஸ்பைடர்’?

டீஸர், டிரைலர்லயே பல பேருக்கு சந்தேகம் போயிருக்கணும். ஏன்னா, மகேஷ் பாபுவோட தமிழ் வாய்ஸ் அவ்ளோ பெர்ஃபெக்ட்டா பொருந்தியிருந்துச்சு. அதேமாதிரிதான் முழுப்படத்துக்கும் உழைச்சிருக்காங்க. ஒவ்வொரு சீனையும் தமிழ், தெலுங்குக்குன்னு தனித்தனியா ஷூட் பண்ணி ‘டப்பிங்’ பேசியிருந்தா மட்டும்தான் இந்தளவுக்கு பெர்ஃபெக்ஷன் கொண்டு வர முடியும். அதோட மகேஷ் பாபுவை தவிர்த்துட்டு பார்த்தோம்னா, எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பரத், ஆர்.ஜே.பாலாஜி, ஜெயப்பிரகாஷ்னு படத்துல நடிச்சிருக்கிற முக்கியமான நட்சத்திரங்கள் எல்லோருமே நம்மூர் ரசிகர்களுக்கு ரொம்ப பரிச்சயம்மானவங்கதான். அதுனால ஒரு டப்பிங் படம் பார்க்கிறோம்ங்கிற உணர்வை ‘ஸ்பைடர்’ படம் உங்களுக்கு நிச்சயமா தராது.

எஸ்.ஜே.சூர்யா எப்படி பண்ணிருக்கார்... மனுஷன் டீஸர், டிரைலர்லயே அந்த மிரட்டு மிரட்டியிருந்தாரே...?

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ்ஸே எஸ்.ஜே.சூர்யாவோட கதாபாத்திர வடிவமைப்பும், அவரோட நடிப்பும்தான். பொதுவா, ஏ.ஆர்.முருகதாஸோட படங்கள்ல வில்லன் கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும். அது ‘ஸ்பைடர்’ படத்துல வர்ற சுடலை கேரக்டர்லையும் தொடர்ந்திருக்கு. கிட்டத்தட்ட இன்டர்வெலுக்கு கொஞ்சம் நேரம் முன்னாடிதான் அறிமுகமாகிறாரு எஸ்.ஜே.சூர்யா. ஆனா, ஃபர்ஸ்ட் சீன்லயே மொத்த தியேட்டரும் அதிருது. படம் முழுக்க அவரோட சாம்ராஜியம்தான். வெல்டன் எஸ்.ஜே.சூர்யா!

ஹீரோயின் ரகுல், பரத், ஆர்.ஜே.பாலாஜிலாம் என்ன பண்ணிருக்காங்க?

ஹீரோயின் கேரக்டர படத்துல இருந்து தூக்கிட்டாக்கூட கதைல எந்த மாற்றமும் இருக்காது. ரெண்டு லவ் சீன், நாலு பாட்டுக்காக மட்டுமே ஹீரோயினை சேர்த்திருக்காங்க. பரத் ரெண்டு சீன்ல வந்தாலும் முக்கியமான ரோல்ல நடிச்சிருக்கார். காமெடியன் ஆர்.ஜே.பாலாஜிக்கு சீரியஸ் ரோல். அவர்தான் பண்ணிருக்கணும்னு அவசியம் இல்ல. நம்மூர் ரசிகர்களுக்காக சேர்த்திருக்காங்க. மத்தபடி ஜெயப்பிரகாஷ், ரகுலோட அம்மாவ நடிச்சிருக்கிறவங்க, சிபிஐ ஆபிஸர்னு அந்தந்த ரோல்ல எல்லோரும் நல்லாவே பண்ணிருக்காங்க.

சந்தோஷ் சிவன், ஹாரிஸ், ஸ்ரீகர் பிரசாத்னு மறுபடியும் ‘துப்பாக்கி’ கூட்டணி ஸ்பைடருக்காக இணைஞ்சிருக்காங்களே... டெக்னிக்கலா படம் எப்படியிருக்கு?

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்துக்கு பக்க பலமா அமைஞ்சிருக்கு. ‘துப்பாக்கி’யில இருந்து வேறொரு கலர் டோனைக் கொடுத்திருக்கார் சந்தோஷ். அதேமாதிரி ஸ்ரீகர் பிரசாத்தோட எடிட்டிங்கையும் குறிப்பிட்டு சொல்ற மாதிரி பண்ணிருக்கார். இவர்தான் ஹீரோ, இவர் பண்ற வேல இதுதான்னு ஒரேயொரு பாட்டுலயே அட்டகாசமா எடிட் பண்ணிருக்கார் ஸ்ரீகர். ஆனா, ஹாரிஸோட பாடல்களும், பின்னணி இசையும்தான் பெரிசா வசீகரிக்கத் தவறியிருக்கு. கேட்கிறதுக்கு மட்டுமில்ல, கதையில பிளேஸ்மென்ட்டாவும் பாடல்கள் சுவாரஸ்யத்துக்கு தடைபோடுது. பின்னணி இசையும், ஏற்கெனவே ஹாரிஸோட இசையில கேட்டமாதிரியே இருக்கிறதால சுவாரஸ்யமான காட்சிகளோட முழு உணர்வையும் ரசிகர்களால என்சாய் பண்ண முடியலைன்னுதான் சொல்லணும்.

ஏ.ஆர்.முருகதாஸ் படம்னாலே சின்னதாவாவது ஒரு மெசேஜ் இருக்குமே... இதுல எப்படி?

எல்லோரோட மனசுக்குள்ளயும் சின்னதா ஒரு குரூரம் ஒளிஞ்சுக்கிட்டிருக்கும். அத அதிகமா ஆகாம பார்த்துக்கணும். இல்லைனா அதோட விபரீதம் பயங்கரமா இருக்கும்னு சொல்ல வருது ‘ஸ்பைடர்’. முகம் தெளியாவதங்களுக்கு நாம செய்யுற உதவிக்குப் பேருதான் மனிதநேயம்னு சொல்றாரு ஏ.ஆர்.முருகதாஸ். பெரிய ஹீரோக்கள் படங்கள்ல இருக்கிற வழக்கமான லாஜிக் மீறல்கள் ‘ஸ்பைடர்’ல இருந்தாலும், சின்ன ஒரு கான்செப்ட்டை எடுத்துக்கிட்டு, அத தன்னோட ஸ்டைல்ல ஒரு சுவாஸ்ரயமான படமா மாத்தியிருக்கிறதுக்காகவே முருகதாஸை பாராட்டலாம்!

ரேட்டிங் : 5.5/10

#SpyderMovieReview #Spyder #ARMurugadoss #MaheshBabu #Bharath #RJBalaji #RakulPreetSingh #SJSuriya HarrisJayaraj #SantoshSivan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தா தா 87 டீஸர்


;