ஃபளாஷ்பேக் வியாழன் - மக்கள் திலகத்தை ‘மிஸ்டர் எம்.ஜி.ஆர்’ என அழைத்த ஒரே நடிகர்!

மக்கள் திலகத்தை ‘மிஸ்டர் எம்.ஜி.ஆர்’ என அழைத்த ஒரே நடிகர்!

கட்டுரை 28-Sep-2017 4:58 PM IST Chandru கருத்துக்கள்

தமிழ்த்திரை உலகை இசை மேதைகள் ஆக்கிரமித்திருந்த வேளையில் இசை அறிவு இல்லாத பாமரர்களைக்கூட தனது நகைச்சுவை நடிப்பாலும் பாட்டினாலும் தன் பக்கம் ஈர்த்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். அவருக்கு பின்னர் அடித்தட்டு ரசிகர்களை தனது வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் கவர்ந்த பெருமை நடிகர் சந்திரபாபுவையே சாரும்.

தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக கோட், சூட் உடை அணியும் பழக்கத்தைக் கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பெயருக்கு முன்னால் ‘மிஸ்டர்’, ‘மிஸ்’, ‘மிஸ்ஸஸ்’ சேர்த்து அழைப்பதையே சந்திரபாபு வழக்கமாகக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை ‘மிஸ்டர் எம்.ஜி.ஆர்’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை ‘வாடா, போடா’ என உரிமையாகக் கூப்பிட்டதும் இவர் ஒருவரே.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர் என ஒரே நேரத்தில் தனது பல பரிமாணங்களை வெளிப்படுத்திய சந்திரபாபு மேல்நாட்டு நடனங்கள் கற்றவர். சந்திரபாபுவின் சோக, தத்துவ, நகைச்சுவைப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் சட்டென பதிந்தன. தமிழுடன் ஆங்கிலச் சொல்லையும் கலந்து சந்திரபாபு ஆடிப்பாடிய பாடல்களும் மக்களை பெரிதும் கவர்ந்தன.

‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக‘, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போது அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை‘, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய பாடல்கள் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதமாக வானொலி ரசிகர்களை தாலாட்டி தூங்கவைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய ‘சோக கீதங்கள்’ பெரிய அளவில் ரசிக்கப்பட்டது என்றால் அது சந்திரபாபு பாடல்கள் மட்டும்தான்.

#Chandrababu #MGR #SivajiGanesan #MGRamachandran #Naanorumuttalunga

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவகாமியின் செல்வன் - டிரைலர்


;