ஃப்ளாஷ்பேக் வியாழன் - ‘கெட்அப்’பில் புதுமை செய்து அசத்திய மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணி!

‘கெட்அப்’பில் புதுமை செய்து அசத்திய மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணி!

கட்டுரை 26-Oct-2017 11:56 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ் சினிமா ரசிகர்களால் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாத இயக்குனர்களில் மணிவண்ணனும் ஒருவர். மணிவண்ணன் என்று சொன்னாலே கூடவே நடிகர் சத்யாராஜும் நமது ஞாபகத்தில் வந்துவிடுவார். அந்தளவுக்கு இந்த இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவில் பல சுவாரஸ்ய படங்களை தந்து அசத்தியுள்ளனர். 50 படத்திற்கும் மேலாக இயக்கியுள்ள மணிவண்ணன், சத்யராஜை மட்டுமே வைத்து 16க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளாரென்றால் அந்த கூட்டணியின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். 1987ல் வெளிவந்த ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் இக்கூட்டணி ‘கெட்அப்’ விஷயத்தில் ஒரு புதுமையைச் செய்து அந்தக்கால ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஆம்... ஜல்லிக்கட்டு படத்தின் கதைப்படி ஹீரோ வில்லன்களை பழிவாங்க வேண்டும். போலீஸிடம் மாட்டிக்கொள்ளாமல் பழிவாங்க வேண்டுமென்றாலே நம்மூரில் முதலில் இயக்குனர்கள் கையிலெடுக்கும் விஷயம் ‘கெட்அப்’ மாற்றுவதுதானே. அதைத்தான் ஜல்லிக்கட்டு படத்தில் மணிவண்ணனும், சத்யராஜும் செய்தார்கள். ஆனால், அந்த கெட்அப் விஷயத்திலேயே ஒரு புதுமையைப் புகுத்தினார்கள். ‘ஜல்லிக்கட்டு’ படத்தின் ஆரம்பக்காட்சியிலேயே ‘நூறாவது நாள்’ ‘மொட்டை’ கெட்அப்பில்தான் சத்யராஜே அறிமுகமாவார். இந்த ஒரு கெட்அப் மட்டுமில்லாமல் படத்தின் இரண்டாம்பாதியில் வரும் 4 கெட்அப்களும் ஏற்கெனவே சத்யராஜ் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படங்களில் அவர் ஏற்றிருந்த கேரக்டர்களையும், அதே உருவத்தையும் பயன்படுத்தி அசத்தியிருந்தார்கள்.

‘விடிஞ்சா கல்யாணம்’ படத்தின் ஆஃபாயில் ஆறுமுகம், ‘முதல் வசந்தம்’ படத்தின் குங்குமப் பொட்டு கவுண்டர், ‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் முட்டம் சின்னப்பதாஸ், ‘24 மணி நேரம்’ படத்தின் ராஜரத்தினம் ஆகிய நான்கு கெட்அப்களும், அதே கேரக்டர் பெயர்களையும் ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் பயன்படுத்தி, அப்படத்தை ஒரு மாபெரும் வெற்றிப்படமாக்கினார்கள் மணிவண்ணன், சத்யராஜ் கூட்டணி.

ஏற்கெனவே தாங்கள் ரசித்து மகிழ்ந்த சத்யராஜின் புகழ்பெற்ற கேரக்டர்களை ஒரே படத்தில் மீண்டும் பார்க்கும் வாய்ப்பைப்பெற்ற பாக்கியவான்கள் ஆனார்கள் 80களின் ரசிகர்கள்.

#Manivannan #Sathyaraj #Jallikattu #NooravadhuNaal #MudhalVasantham #VidinjaKalyanam #KadoloraKavidhaigal #24ManiNeram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கனா டீஸர்


;