2.0 - இசை விமர்சனம்

‘2.0’ இசையும் ஒலியும் தமிழ் சினிமாவிற்குப் புதிது!

இசை விமர்சனம் 28-Oct-2017 1:57 PM IST Chandru கருத்துக்கள்

இதுபோன்றதொரு ஆடியோ விழாவை இந்திய திரையுலகமே கண்டிராது. துபாயிலுள்ள உலகிலேயே உயர்ந்த கட்டிடடத்தில் ‘2.0’ இசை விழா நடத்தி ஒட்டுமொத்த உலகத்தையும் அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது லைக்கா புரொடக்ஷன் நிறுவனம். ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எப்போதுமே பிரம்மாண்டம் சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அந்த எதிர்பார்ப்பை இந்த ‘2.0’ படத்தின் பாடல்களும் தக்க வைத்திருக்கிறதா?

ராஜாளி நீ காலி...
பாடியவர்கள் : பிளாஸே, அர்ஜுன் சண்டி மற்றும் சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


இந்தப் பாடலை முதல்முறை கேட்டுவிட்டு இது எப்படிப்பட்ட பாடலாக இருக்கும் என்ற முடிவுக்கு கண்டிப்பாக யாராலும் வந்துவிட முடியாது. இதுவரை தமிழ் சினிமா பாடல்களில் எங்குமே கேட்டிர முடியாத இசை ஒலிகளை இப்பாடலெங்கும் பல அடுக்குகளில் படரவிட்டு அதிரடித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒருமுறை கேட்டுவிட்டால்போதும், மீண்டும் மீண்டும் கேட்டு அதிலுள்ள நுண்ணொலிகளையும் உள்வாங்க நமது செவியும், மூளையும் நம்மை தன்னிச்சையாக இயங்கச் செய்யும். எதுமை மோனை ஸ்டைலில் இப்பாடலுக்கான வரிகளை உருவாக்கியிருக்கும் மதன் கார்க்கியின் எழுத்துக்கள் பாடலுக்கு பெரிய ப்ளஸ். முள்ளங்கி - பீரங்கி, பட்டாஸு - பூட்ட கேஸு என பாடல் முழுவதும் ஜாலியான வரிகளைத் தூவியிருக்கிறார் கார்க்கி. ரஹ்மானின் ஃபாஸ்ட் மோட் இசைக்கு ஈடுகொடுத்துப் பாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் அர்ஜுன் சண்டி. அவருக்கு உறுதுணையாக ஒலிக்கின்றன பிளாஸே மற்றம் சித் ஸ்ரீராமின் குரல்கள்.

எந்திரலோகத்தின் சுந்தரியே...
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் சாஷா திருப்பதி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


சாஷா திருப்பதியின் மயக்கும் குரலில் ஆரம்பிக்கும் இப்பாடல் அருமையான மெலடி ரகம் போன்ற தோற்றத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்துகிறது. ஆனால், போகப்போக பாடலின் இசையில் எனர்ஜியை ஏற்றிக்கொண்டே சென்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ரோபோக்கள் பாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவோ என்னவோ முழுக்க முழுக்க பாடகர்களின் குரல்களை கம்ப்யூட்டரைஸ்டு வாய்ஸ்களாக மாற்றியிருக்கிறார்கள். பாடல் முழுவதும் டெக்னோ பீட்களாலான ஒவ்வொரு ஒலியும் காதுவழியே இதயத்தில் இறங்குகிறது. எந்திரலோகத்து சுந்தரியே, மின்சார சம்சாரமே என வார்த்தைகள் அத்தனையும் புதிய அனுபவத்தைத் தருகின்றன. ஷங்கருக்கும், கார்க்கிக்கும் தனியே ஒரு ‘வேவ் லென்த்’ இருப்பதை இரண்டு பாடல்களுமே பறைசாற்றுகின்றன. கேட்டவுடன் பிடித்துப்போகும் இந்தப் பாடலும் கேட்டுக்கொண்டே இருக்கத்தூண்டுகிறது.

மொத்தமே இரண்டு பாடல்கள் என்பது மட்டுமே ‘2.0’ ஆல்பத்தின் ஒரே குறை. ஆனால், இந்த இரண்டு பாடல்களுக்காகவே 20 பாடல் உருவாக்கத்திற்கான உழைப்பைக் கொட்டியிருக்கிறார் ரஹ்மான் என்பது நிதர்சனம். ஒலி வடிவில் கேட்ட இந்த பாடலின் ஒளி வடிவையும் பார்க்க மனசு பற பறக்கிறது. அதுதான் ஷங்கர் - ரஹ்மானின் மிகப்பெரிய பலம். ‘எந்திரனி’ன் அப்டேட் வெர்ஷன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது ‘2.0’வின் பாடல்கள்.

மொத்தத்தில், ‘2.0’ இசையும் ஒலியும் தமிழ் சினிமாவிற்குப் புதிது!#2PointO #Rajinikanth #AkshayKumar #AmyJackson #Shankar #ARRahman #LycaProduction #Antony #NiravShah #2PointOMusicReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;