அண்ணாதுரை – விமர்சனம்

சுவாரஸ்யமில்லாத இரட்டையர் ஆட்டம்!

விமர்சனம் 30-Nov-2017 7:12 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : G. Srinivasan
Production : R Studios, Vijay Antony Film Corporation
Starring : Vijay Antony, Diana Champika, Mahima, Jewel Mary
Music : Vijay Antony
Cinematography : Dillraj
Editing : Vijay Antony

அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தொடர்ந்து மூன்றாவது முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் ‘அண்ணாதுரை’ எப்படி?

கதைக்களம்

இரட்டையர்களாக பிறந்தவர்கள் அண்ணாதுரையும், தம்பி துரையும். தன் காதலி எஸ்தர் தன் கண்முன்னாலேயே ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்து விட அதை தாங்கி கொள்ள முடியாமல் நிரந்தர குடிக்காரனாகி விடுகிறார் அண்ணாதுரை! தம்பிதுரை ஸ்கூலில் விளையாட்டு ஆசிரியராக இருக்கிறார். குடிக்காரன் என்றாலும் ரொம்பவும் நல்லவன் என்பதால் அண்ணாதுரைய ஒரு தலையாக விரும்புகிறார் பெண்கள் அழகு நிலையத்தில் பணிபுரியும் ஜூவல் மேரி! தம்பிதுரையை விரும்புகிறார் டயானா சாம்பிகா! தம்பி துரைக்கும், டாயானாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் அண்ணாதுரை மீது ஒரு கொலை பழி விழுந்து ஜெயிலுக்கு போகிறார். 7 ஆண்டுகள் தண்டனை முடிந்து அண்ணாதுரை ஊருக்கு வரும்போது அப்பா நடத்தி வந்த துணிக்கடையை உள்ளூர் ரவுடிகள் அபகரித்ததை கண்டும், தம்பிதுரை பெரிய ஒரு ரௌடியாக உருவெடுத்து நிற்பதையும் கண்டு அதிர்ந்து போகிறார் அண்ணாதுரை! தம்பிதுரை எப்படி ரவுடியானான்? அப்பாவை ஏமாற்றியவர்களை அண்ணாதுரை என்ன செய்தார் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது அண்ணாதுரை.

படம் பற்றிய அலசல்

இரட்டையர்களை வைத்து சென்டிமெண்ட கலந்த ஒரு ஆக்‌ஷன் படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சீனிவாசன். ஆனால் அதற்கேற்ற வகையில் வலுவான ஒரு திரைக்கதை அமைப்பதில் கோட்டை விட்டிருக்கிறார்! முதல் பாதி காதல், அம்மா, தம்பி சென்டிமெண்ட் என்று ஸ்லோவாக பயணிக்கிறது. அண்ணாதுரை ஜெயிலிலிருந்து திரும்பி வந்ததும் கதை சூடு பிடிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியிலும் எந்த புதுமையும் இல்லை. ஏற்கெனவே நாம் பல படங்களில் பார்த்த ரௌடிசம் பற்றிய கதை தான்.

நிறைய ஆட்களை போட்டு தள்ளிய குற்றத்திற்காக தம்பிதுரையை பிடிக்க போலீஸ் வியூகம் அமைக்க, தன்னால் குடும்ப சொத்தை இழந்து தெருவுக்கு வந்த தன் குடும்பத்தையும், பாசமிக்க தம்பிதுரையையும் காப்பாற்ற அண்ணாதுரை மேற்கொள்ளும் முயற்சிகள், அதன் முடிவு ஓரளவுக்கு சுவாரஸ்யமான காட்சிகளாக பயணிப்பதால் இரண்டாம் பாதி ஓரளவுக்கு ரசிக்கும்படி அமைந்துள்ளது,. ஒரே உருவ தோற்றத்தில் இருக்கும் அண்ணாதுரை, தம்பிதுரை கேரக்டர்களை வைத்து ஒரு ஆள் மாறாட்ட கதையை வித்தியாசமான முறையில் தர முயற்சித்த இயக்குனர் அதற்கேற்ற ,மாதிரி திரைக்கதையை வலுவாக அமைத்து, புதுமையான காட்சிகளுடன், கொஞ்சம் பொழுது போக்கு விஷயங்களையும் சேர்த்து தந்திருந்தால் ‘அண்ணாதுரை’ ரசிக்கும்படியான ஒரு படமாக அமைந்திருக்கும். விஜய் ஆண்டனியின் இசை, படத்தொகுப்பு, தில்ராஜின் ஒளிப்பதிவு போன்ற டெக்னிகல் விஷயங்கள் படத்திற்கு ஓரளவுக்கு பலம் சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

அண்ணாதுரை, தம்பிதுரை என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி கிட்டத்தட்ட இரண்டு கேரக்டர்களிலுமே ஒரே மாதிரியான நடிப்பையே வழங்கியிருக்கிறார். இதற்கு முன் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த படங்களில் வழங்கியது மாதிரியான நடிப்பையே விஜய் ஆண்டனி இப்படத்திலும் வழங்கியிருப்பதால் பெரிய சுவாரஸ்யம் தரவில்லை. இனி வரும் படங்களில் விஜய் ஆண்டனி இந்த குறையை நிவர்த்தி செய்வார் என்று நம்புகிறோம்.

தம்பிதுரையை காதலிப்பவராக வரும் அறிமுக நடிகை டயானா சாம்பிகா நடிப்பில் புதுமுகம் மாதிரி தெரியவில்லை. அண்ணாதுரையை காதலிப்பவராக வரும் ஜூவல் மேரி, போலீஸ் அதிகாரியாக வரும் புதுமுகம் மகிமா, வில்லன்களாக வரும் ராதாரவி, மொட்ட ராஜாகுமார், நளினிகாந்த், அண்ணதுரையின் நண்பராக வரும் காளி வெங்கட், டயானா சம்பிகாவின் தந்தையாக் வரும் செந்தில் குமார் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கெற்ற சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

விஜய் ஆண்டனியின் பங்களிப்பு
ஓரளவுக்கு விறுவிறுப்பாக பயணிக்கும் இரண்டாம் பாதி

பலவீனம்

ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி
பொழுதுபோக்கு விஷயக்கள் இல்லாதது!

மொத்தத்தில்…

கதை தேர்விலும், தனக்கான கேரக்டர்கள் தேர்விலும் அதிக கவனம் செலுத்தி வித்தியாசமான படங்களை தந்த விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘அண்ணாதுரை’ பெயர் சொல்லும் படமாக அமையவில்லை!

ஒருவரி பஞ்ச்: சுவாரஸ்யமில்லாத இரட்டையர் ஆட்டம்!

ரேட்டிங் : 3.5/10

#AnnaduraiMovieReview #Annadurai #RStudios #VijayAntony #DianaChampika #Dillr #Mahima #VijayAntonyFilmCorporation #JewelMary

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிருபுடிச்சவன் டீஸர்


;