விநியோகஸ்தர் சங்க தேர்தலில் களமிறங்கும் கே.ஈ.ஞானவேல் ராஜா தலைமையிலான புதிய அணி!

விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் கே.ஈ.ஞானவேல் ராஜா!

செய்திகள் 6-Dec-2017 12:16 PM IST VRC கருத்துக்கள்

வருகிற 24-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிற சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது. இதற்காக கே.ஈ.ஞானவேல் ராஜா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது சம்பந்தமாக கே.ஈ ஞானவேல்ராஜா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,

‘‘கடந்த 8 மாத காலத்தில் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், சங்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட எழுபது சதவிகிதமும் நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் நான் ஏன் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தேன் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறேன். நண்பர் அசோக் குமார் அவர்களின் தற்கொலை பொதுமக்களையே புரட்டி போட்ட ஒரு விஷயம். அவர் அப்படியொரு முடிவு எடுப்பதற்கு காரணம் என்னாவாயிருக்கும் என்று யோசித்தபோது ஒரு சிலர், அதாவது மூன்று அல்லது நான்கு நபர்களின் கையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஒரு மாஃபியா போல் மாட்டிக் கொண்டிருக்கிறது. இவர்கள் தான் யார் படமெடுக்க வேண்டும்? யாருக்கு விற்பனை செய்ய வேண்டும்? என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.

முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படமானாலும் சரி, புதுமுகங்கள் நடிக்கும் படமானாலும் சரி, அவர்கள் விரும்பினால் அதற்கு ஒரு பிரச்சனையை உருவாக்கி புகார் தர வைத்து அதற்கு பஞ்சாயத்து செய்து தயாரிப்பாளரையும் விநியோகஸ்தரையும் அசிங்கப்படுத்தி அவர்கள் மனதை காயப்படுத்தி, புதிய விநியோகஸ்தர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரிந்து கொள்வதற்குள் அவர்களின் படத்தால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து சிரமத்துக்கு ஆளாக்கி விடுகிரார்காள்! இந்த சூழலில் நான் 18 படங்களை தாயாரித்திருக்கிறேன். இதனால் ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படும் சோதனையும், வேதனையும் தெரியும். ஒரு விநியோகஸ்தருக்கு ஏற்படும் சோகங்களும், இழப்புகளும் வலிகளும் தெரியும். விநியோகஸ்தர் சங்கம் ஒன்றை வைத்துகொண்டு அங்கு விநியோகஸ்தர்களின் பிரச்சினையை பற்றி பேசாமல் ஓரிருவர் பலன் பெறவேண்டும் என்பதற்காக அந்த சங்கத்தை இயக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை எல்லாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக நான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் வேறு எந்த அமைப்பிலும் எந்தவித பதவியிலும் இருக்கக் கூடாது என்ற விதி இருப்பதால் தான் தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதை தவிர்த்து நான் பதவி விலக வேறு எந்த காரணமும் இல்லை. எப்படி நடிகர் சங்கத்திற்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் புதிய அணி வெற்றி பெற்று பதவிக்கு வந்ததோ அதுபோல் புது ரத்தம் பாய்ச்சுவது போல் விநியோகஸ்தர் சங்கத்திலும் மாற்றங்கள் உருவாக வேண்டும் என்பதற்காக புதிய அணியாக நாங்கள் போட்டியிடுகிறோம். எங்களிடம் புதிய திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அந்த திட்டங்கள் மூலம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முதலானோரின் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர எங்களால் முடியும். அதற்கு அனைவரது ஆதரவும், ஒத்துழைப்பும் வேண்டும்’’ என்றார்.

#KEGnanavelRaja #StudioGreen #ProducerCouncil #DistributorsElection

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ


;