கொடிவீரன் - விமர்சனம்

‘அதே... அதே’ என நிறைய ‘அதே’க்களைக்  கொண்டிருக்கிறான் ‘கொடிவீரன்’!

விமர்சனம் 7-Dec-2017 4:17 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : M. Muthaiya
Production : Company Productions
Starring : M. Sasikumar, Mahima Nambiar, Sanusha, Vidharth, Poorna
Music : N. R. Raghunanthan
Cinematography : S. R. Kathir
Editing : Venkat Rajen

அம்மா சென்டிமென்ட், மாமனார் சென்டிமென்ட், அப்பத்தா சென்டிமென்ட் படங்களைத் தந்த முத்தையா இப்போது ‘கொடிவீரன்’ படத்தில் தங்கச்சி சென்டிமென்ட்டோடு களமிறங்கியிருக்கிறார். சென்டிமென்ட் ஒர்க் அவுட்டாகியுள்ளதா?

கதைக்களம்

ஊரே கும்பிடும் சாமியாக சசிகுமார் இருக்க, தன் தங்கை சனுஷாவைத் தன் சாமியாக நினைத்துக் கொண்டாடுகிறார் சசிகுமார். இந்த நல்ல குணம் கொண்ட அண்ணன் தங்கை ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் கெட்ட குணம் கொண்ட அண்ணன் தங்கையாக பசுபதியும், பூர்ணாவும் பக்கத்து ஊரில் அழிச்சாட்டியம் செய்கிறார்கள். இந்த ரெண்டு ஜோடி அண்ணன் தங்கைகளையும் விதி ஒரு புள்ளியில் எதிரும் புதிரும் நிறுத்த, அதன் பிறகு நடக்கும் அடிதடி, வெட்டுக்குத்துக்களே ‘கொடிவீரன்’.

படம் பற்றிய அலசல்

நம் மண் சார்ந்த படங்களை எடுக்க வேண்டும் என்ற இயக்குனர் முத்தையாவின் முயற்சியை ஒருபுறம் பாராட்ட வேண்டுமென்று தோன்றினாலும், எதற்காக இப்படி ஒரேவிதமான கதைக்களத்தைக் கையிலெடுத்து ‘டெம்ப்ளேட்’ படங்களாகத் தந்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வியும் இன்னொருபுறம் எழுந்துகொண்டேயிருக்கிறது. அவர் கதையின் நாயகர்களும், வில்லன்களும் எப்போதுமே வெட்டிக் கொண்டும், குத்திக் கொண்டுமேதான் இருப்பார்களா? இடையிடையே கொஞ்சம் அன்பை மட்டும் காட்டிவிட்டு படம் நெடுக பழிவாங்கல்களை மட்டுமே மையப்படுத்திதான் படத்தை எடுத்தாக வேண்டுமா? இப்படி நிறைய கேள்விகள் அவரின் இரண்டாவது படத்திலிருந்தே எழுந்து கொண்டேயிருக்கிறது. அது இந்தப்படத்திலும் தொடர்கிறது.

ஆனால், இதையெல்லாம் தாண்டி, ஒரு இயக்குனராக காட்சிகளை சுவாரஸ்யமாகத் தருவதில் கைதேர்ந்தவராகவே இருக்கிறார் முத்தையா. அதிலும், ‘கொடிவீரன்’ படத்தின் முதல்பாதி நிச்சயமாக நல்ல பொழுதுபோக்கோடு சுவாரஸ்யமாகவே பயணிக்கிறது. இரண்டாம்பாதி திரைக்கதை ரசிகன் யூகித்தபடியே பயணிப்பதால் ஆங்காங்கே கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து போகிறது. ஆனாலும், ஜனரஞ்சகமான படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார். படத்தின் பெரிய பலமாக இருப்பது ஒளிப்பதிவும், பின்னணி இசையும். இந்த இரண்டுமே காட்சிகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதில் போட்டி போட்டு உழைத்திருக்கின்றன. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ஆர்.எஸ்.கதிரின் ஒளிப்பதிவும், ரகுநந்தனின் பின்னணி இசையும் சுவாரஸ்யத்தை வெகுவாக அதிகப்படுத்தியிருக்கின்றன. பாடல்களையும் கேட்கும் ரகத்தில் தந்திருக்கிறார் ரகுநந்தன்.

நடிகர்களின் பங்களிப்பு

அண்ணனாக நெகிழ்வதிலும், வீரனாக எதிரிகளைப் பந்தாடுவதிலும் ‘கொடிவீரன்’ கதாபாத்திரத்திற்கு அத்தனை பொருத்தமாய் இருக்கிறார் சசிகுமார். ஆனால், அடுத்தடுத்து ஏன் இதேபோன்ற கதாபாத்திரத்தில் சசிகுமார் தொடர்ந்து நடிக்கிறார் என்ற அயர்ச்சியும் ஏற்படுகிறது. அவரின் எதிர்காலப் படங்களில் இது மாறும் என நம்புவோம். நேர்மையான அரசு அதிகாரியாக கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் விதார்த். பாசம் காட்டும் அண்ணனாகவும், வெறித்தனம் காட்டும் வில்லனாகவும் பழைய கொத்தாளத் தேவனை கண்முன் காட்டியிருக்கிறார் பசுபதி. மஹிமா, பூர்ணா, சனுஷா என படத்தில் மூன்று நாயகிகள். மூவருக்கும் அளவான கேரக்டர்கள். மூவருமே நன்றாகவே செய்திருக்கிறார்கள். காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கும் பாலசரவணனுக்கு காட்சிகள் குறைவுதான். ஆனால், கிடைத்த கேப்பில் சிரிக்க வைத்திருக்கிறார்.

பலம்

1. சண்டைக்காட்சிகள்
2. ஒளிப்பதிவு
3. பின்னணி இசை

பலவீனம்

1. டெம்ப்ளேட் ஃபார்முலா
2. பலவீனமான இரண்டாம்பாதி திரைக்கதை

மொத்தத்தில்...

காட்சிகளை சுவாரஸ்யமாகத் தருவதிலும், ஒரு கதையை கோர்வையாக படமாக்குவதிலும் தேர்ந்தவராக இருக்கும் முத்தையா, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே சுழன்று கொண்டிருப்பதிலிருந்து வெளியே வந்தால் நிச்சயமாக வித்தியாசமான படைப்புகளைத் தரலாம். முத்தையா படம் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவெடுத்துவிட்டு வந்தால் நிச்சயமாக ‘கொடிவீரன்’ சுவாரஸ்யமாகவே தெரிவான்.

ஒரு வரி பஞ்ச் : ‘அதே... அதே’ என நிறைய ‘அதே’க்களைக் கொண்டிருக்கிறான் ‘கொடிவீரன்’!

ரேட்டிங் : 4.5/10

#Kodiveeran #Sasikumar #MahimaNambiar #Sanusha #Poorna #Muthaiya #Raghunanthan #VenkatRajen #KodiveeranMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணனுக்கு ஜெ ட்ரைலர்


;