சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் ஸ்பெஷல் : 5 சுவாரஸ்ய தகவல்கள்!

சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் ஸ்பெஷல் : 5 சுவாரஸ்ய தகவல்கள்!

கட்டுரை 12-Dec-2017 11:53 AM IST Chandru கருத்துக்கள்

டிசம்பர் 12 தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, இந்திய சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாத நாள். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனாலேயே ‘‘இந்தியாவின் ஒரே சூப்பர்ஸ்டார் இவர்தான்!’’ என சுட்டிக்காட்டப்பட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள். தமிழ் சினிமா ரசிகர்களாலும், திரையுலக பிரபலங்களாலும் ‘தலைவர்’ என அன்போடு அழைக்கப்படும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சினிமா வாழ்க்கையிலிருந்து 5 சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

1. 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் கோலோச்சிக்கிக் கொண்டிருக்கும் ரஜினி மட்டுமே பிளாக் அன்ட் ஒயிட், ஈஸ்ட்மென் கலர், கலர், ‘கோச்சடையான்’ படத்தின் மூலமாக அனிமேஷன், தற்போது பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் 2.0 படம் மூலமாக 3டி என எல்லா ஃபார்மட்டிலும் நடித்த ஒரே ஹீரோ. அதேபோல், தமிழ்சினிமாவில் அகன்றதிரை எனப்படும் 70 எம்.எம்-ல் திரையிடப்பட்ட முதல் படம் ரஜினி நடித்த ‘மாவீரன்’தான். அதுமட்டுமில்லாமல், லைவ் கேரக்டர்களுடன் அனிமேஷன் கேரக்டர்களையும் பயன்படுத்திய முதல் இந்திய சினிமா 1989ல் வெளிவந்த ‘ராஜா சின்ன ரோஜா’ படம்தான்.

2. ஜாம்பவான்களான ரஜினி, கமல், அமிதாப் மூன்றுபேரும் இணைந்து நடித்தது ஒரே ஒரு இந்திப்படத்தில் தான். படத்தின் பெயர் ‘கிராஃப்தார்’. இதில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அமிதாப்பும் ரஜினியும் நடித்திருந்தனர். அமிதாப்பின் சகோதரராக நடித்திருந்தார் கமல்.

3. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைக்கவில்லை. ஆனால் நடிகர் திலகத்துடன் சேர்ந்து ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘நான் வாழவைப்பேன்’, ‘நட்சத்திரம்’, ‘படிக்காதவன்’, ‘உருவங்கள் மாறலாம்’, ‘விடுதலை’, ‘படையப்பா’ என ஆறு படங்களில் நடித்துள்ளார். ஆந்திர சூப்பர்ஸ்டாரும் மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவுடன் இணைந்து ரஜினி நடித்த ஒரே படம் ‘டைகர்’. இது ரஜினியின் ஐம்பதாவது படம் என்பது இன்னுமொரு சிறப்பு.

4. ரஜினி நடித்த ஒரே ஆங்கிலத் திரைப்படமான ‘பிளட்ஸ்டோன்’ திரைப்படத்துக்கும் இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான். ரஜினி தனது திரைவாழ்வில் பாடிய ஒரே பாடலான ‘‘அடிக்குது குளிரு...’’ பாடலை மன்னன் திரைப்படத்தில் பாடவைத்ததும் அவர்தான்.. பணக்காரனில் இடம்பெற்ற ‘‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி...’’ பாடல்தான் ரஜினிக்காக இளையராஜா பாடிய முதல்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

5. எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் ரஜினி நடித்து வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் சிறுவனாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய். 1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த இந்திப்படம் ‘பகவான் தாதா’வில் அவரின் வளர்ப்பு மகனாக நடித்தவர் ஹ்ருத்திக் ரோஷன். ரஜினி நடித்த ‘ஆட்டன்க் ஹி ஆட்டன்க்’ பாலிவுட் படத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார் அமீர்கான்.

#Rajinikanth #Superstar #Kaala #Kabali #KamalHaasan #Dhanush #WunderbarFilms #PaRanjith #ApoorvaRagakangal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;