குலேபகாவலி – விமர்சனம்

ஏற்கெனவே சாப்பிட்டு சலித்த பொங்கல்

விமர்சனம் 12-Jan-2018 1:39 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Kalyaan
Production : KJR Studios
Starring : Prabhu Deva, Hansika Motwani, Revathi
Music : Vivek–Mervin
Cinematography : R. S. Anandakumar
Editing : Vijay Velkutty

‘கத சொல்லப் போறோம்’ என்ற படத்தை இயக்கிய எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, மன்சூரலிகான், ‘முனீஸ்காந்த்’ ராமதாஸ் முதலானோர் நடித்து வெளியாகியுள்ள ‘குலேபகாவலி’ எப்படி?

கதைக்களம்

மன்சூரலிகானை தலைவராக கொண்டு சில கடத்தல் வேலைகளை செய்து வருபவர் பிரபு தேவா! ஒரு பார்ட்டி முடிந்து வெளியே வரும்போது ஹன்சிகாவை சந்திக்கிறார் பிரபு தேவா! ஹன்சிகாவின் அழகில் மயங்கும் பிரபுதேவா அவரை தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்யும்போது ஹன்சிகாவும் ஒரு களவாணி பெண் என்பது தெரிய வருகிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் வசித்து வரும் மதுசூதனராவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தா, குலேபகாவலி என்ற கோயில் வளாகத்தில் புதைத்து வைத்திருக்கும் விலை மதிக்க முடியாத வைரக் கல்கள் அடங்கிய ஒரு பெட்டி குறித்த விவரம் கிடைக்கிறது. ஆபத்தான இடத்தில் இருக்கும் அந்த பெட்டியை மீட்டெடுக்கும் பொறுப்பை மதுசூதன ராவ், தனது மச்சான் ஆனந்த் ராஜிடம் வழங்க, ஆனந்தராஜ் தனக்கு விசுவாசமான முனீஸ்காந்திடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். அந்த பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அந்த பெட்டியை மீட்கும் முயற்சியில் இறங்கும் முனீஸ் காந்துடன் களவாணிகளான பிரபுதேவா, ஹன்சிகா மற்றும் பலே ஏமாற்றுக்காரியான ரேவதியும் சேர்ந்து கொள்கிறார்கள்! இவர்கள் ஒவ்வொருவரும் அந்த பெட்டியை தனதாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளில் நடக்கும் திருப்பங்களும், போராட்டங்களுமே ’குலேபகாவலி’.

படம் பற்றிய அலசல்

1957, பிரிட்டிஷ் இந்தியா ஆட்சி காலத்தில் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து கதை துவங்குகிறது. ஏதோ வித்தியாசமான ஒரு கதையை சொல்லப் போகிறார் இயக்குனர் என்று நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால், கதை நிகழ் காலத்திற்கு வந்ததும் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, முனிஸ் காந்த், மதுசூதன் ராவ், ஆனந்த்ராஜ் முதலானோர் எண்ட்ரியாகி, வழக்கமான

காதல், காமெடி, அடிதடி என்று வழக்கமான பாணியிலேயே இப்படமும் பயணிப்பதால் பெரிய சுவார்ஸயம் தரவில்லை! காமெடி கலந்த அட்வெஞ்சர் படத்தை போன்று ஒரு படத்தை தர முயற்சித்துள்ள இயக்குனர், சிரிக்க வைப்பதற்காக அமைக்கப்பட்ட காட்சிகளில் அதிக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. அதைப் போல படத்தில் நிறைய கேரக்டர்கள்! ஆனால் அந்த கேரக்டர்கள் ஒன்றோடு ஒன்று இணையாமல் பயணிப்பதால் திரைக்கதை விறுவிறுப்பில்லாமல பயணிக்கிறது.

ஒரு சில காமெடி காட்சிகள், ஹன்சிகா, ரேவதி ஆகியோர் சம்பந்தப்பட்ட கேரக்டர்கள் கதையில் ஏற்படுத்தும் திருப்பங்கள், கிளைமேக்ஸ் மற்றும் பிரபுதேவா, ஹன்சிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மட்டுமே இப்படத்தில் ப்ளஸ்ஸாக அமைந்துள்ளன. இயக்குனரின் முயற்சிக்கு ஆர்.எஸ்.ஆனந்த் குமாரின் ஒளிப்பதிவு, விவேக் - மெர்வின் ஆகியோரின் இசை பலம் சேர்த்துள்ளன. படத்தொகுப்பாளர் இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பை முதல் பாதியிலும் கொண்டு வந்திருந்தால் சொல்லப்பட்ட கதை இன்னும் விறுவிறுப்பாடைந்திருக்கும். இதுபோன்ற படங்களில் நாம் லாஜிக் விஷயங்களை எதிர்பார்க்க முடியாது என்றாலும் அதற்காக ‘இப்படியா?’ என்ற கேள்வியும் எழாமலில்லை!

நடிகர்களின் பங்களிப்பு

மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பிரபுதேவா இப்படத்திலும் மாறுபட்ட ஒரு கேரக்டரை ஏற்றுக்கொண்ட தனக்கே உரித்தான காமெடி, காதல், நடனம், சண்டை என சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஹன்சிகாவும் படம் முழுக்க அழகாக தோன்றி ரசிக்க வைக்கிறார். அதிகமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு கேர்க்டரில் ரேவதி நடித்துள்ளார். மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றும் கேரக்டரில், இப்படிப்பட்ட நடிப்பும் ரேவதியிடம் இருக்கிறதா என்று கேட்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது அவரது கேரக்டரும் நடிப்பும்! கடத்தல்காரர்களாக வரும் மதுசூதன் ராவ், ஆனந்த் ராஜ், மன்சூரலிகான், முனீஸ் காந்த், ‘யோகி’ பாபு, மற்றும் ‘மொட்டை’ ராஜேந்திரன், வேலா ராமமூர்த்தி என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1. நடிகர்களின் பங்களிப்பு
2. ஒரு சில காமெடி காட்சிகளும், திருப்பங்களும்

பலவீனம்

1. புதுமை இல்லாத கதை
2. ஒன்றோடு ஒன்று ஒட்டாத கதாபாத்திர வடிவமைப்பு

மொத்தத்தில்…

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சும்மா இரண்டு மணிநேரம் பொழுதை கழிக்க நினைப்பவர்களை இந்த ‘குலேபகாவலி’ ஓரளவுக்கு ரசிக்க வைக்கும்!

ஒருவரி பஞ்ச் : ஏற்கெனவே சாப்பிட்டு சலித்த பொங்கல் !

ரேட்டிங் : 4/10

Gulaebaghavali, Prabhu Deva, Hansika, Motwani Revathi, Kalyaan, KJR Studios, Gulaebaghavali Movie Review

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;