ஸ்கெட்ச் - விமர்சனம்

சியான் ரசிகர்களுக்கு மட்டும்!

விமர்சனம் 12-Jan-2018 3:02 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vijay Chandar
Production : Moving Frame
Starring : Vikram, Tamannah, Soori
Music : SSThaman
Cinematography : M. Sukumar
Editing : Ruben

‘இருமுகன்’ படம் வெளிவந்து கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பிறகு சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படமான ‘ஸ்கெட்ச்’ ரிலீஸாகியிருக்கிறது. இயக்குனர் விஜய் சந்தர் போட்ட ‘ஸ்கெட்ச்’ ஒர்க்அவுட்டாகியிருக்கிறதா?

கதைக்களம்

வடசென்னை ஏரியா, அங்கே ஒரு தாதா, அதே ஏரியாவில் யாருக்கும் அஞ்சாத அடிதடி ஹீரோ, அவருக்கு 3 ஃப்ரண்ட்ஸ், ரௌடி ஹீரோவைக் காதலிக்கும் ஹைகிளாஸ் ஹீரோயின், கொஞ்சம் காதல், கொஞ்சம் நட்பு, நிறைய அடிதடி, அவ்வப்போது கொலைகள் இவையெல்லாம் கலந்த கலவைதான் ‘ஸ்கெட்ச்’.

படம் பற்றிய அலசல்

மாஸ் ஹீரோக்களுக்கே உரிய அடிதடி டெம்ப்ளேட் கதை ஒன்றைக் கையிலெடுத்திருக்கும் இயக்குனர் விஜய்சந்தர், திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாது, பொதுவான சினிமா ரசிகர்களையும் ‘ஸ்கெட்ச்’ மூலம் கவர்ந்திருக்கலாம். க்ளைமேக்ஸில் வரும் ஒரேயொரு ‘ட்விஸ்ட்’டிற்காக 2 மணி நேரப் படத்தை பொறுமையாக கடக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், இடையிடையே சின்னச் சின்ன காமெடிகள் மூலம் ஓரளவுக்கு ரசிகர்களை போரடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ‘ஸ்கெட்ச்’ டீம்.

படத்தில் பெரிதாக கவர்ந்த விஷயம் எதுவென்றால் சியான் விக்ரமின் ஸ்கிரீன் பிரசென்ஸும், மாஸான சண்டைக்காட்சிகளும் மட்டுமே. பாடல்கள் படத்தின் வேகத்திற்குத் தடையாக இருந்தாலும், பின்னணி இசையில் பெரிதாக ஸ்கோர் செய்திருக்கிறார் எஸ்.எஸ்.தமன். ஒளிப்பதிவு படத்திற்குத் தேவையான கலரைத் தந்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

சியான் விக்ரமின் நடிப்பிற்குத் தீனிபோடும் கேரக்டர் இல்லையென்றாலும், பழைய ஜெமினி விக்ரமை திரையில் பார்த்த திருப்தி அவரது ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். சண்டைக்காட்சிகளில் பெரிதாக உழைத்திருக்கிறார் விக்ரம். மற்றபடி ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கம்போல் ஸ்கோர் செய்து அசத்தியிருக்கிறார். ‘தர்மதுரை’யில் பெரிதாகக் கவர்ந்த தமன்னாவிற்கு இப்படத்தில் பெரிய வேலை எதுவும் இல்லை. ஒன்றிரண்டு காதல் காட்சிகளில் தோன்றிவிட்டு, விக்ரமுடன் 2 பாடல்களுக்கு டூயட் பாடுவதோடு அவரின் வேலை முடிவடைந்துவிடுகிறது. மெயின் வில்லன் பாபுராஜிற்கு வழக்கமான வில்லன் வேலை. பெரிய பில்டப்புகளுடன் அறிமுகமாகி கடைசியில் ஹீரோவால் கழுத்தறுபட்டு சாகிறார். ஆர்.கே.சுரேஷின் கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. காமெடிக்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் சூரியால் ஒரு காட்சியில்கூட சிரிக்க வைக்க முடியவில்லை. விக்ரமின் ஃபிரண்ட்ஸாக வரும் ஸ்ரீமன் உள்ளிட்டவர்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பலம்

1. விக்ரமின் பங்களிப்பு
2. சண்டைக்காட்சிகளும் அதற்கான பின்னணி இசையும்

பலவீனம்

1. திரைக்கதை
2. பாடல்கள்

மொத்தத்தில்...

இதுபோன்ற கமர்ஷியல் படங்களில் ஃபேமிலி ஆடியன்ஸையும் திருப்திப்படுத்தும் வகையிலான ஒரு பொழுதுபோக்கு திரைக்கதையை விஜய்சந்தர் உருவாக்கியிருந்தால், ‘ஸ்கெட்ச்’ போட்டபடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : சியான் ரசிகர்களுக்கு மட்டும்!

ரேட்டிங் : 4.5/10

#Sketch #Vikram #Tamannah #VijayChander #KalaipuliSThanu #Soori #SSThaman #Sukumar #Ruben #SketchMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வர்மா ட்ரைலர்


;