தானா சேர்ந்த கூட்டம் - விமர்சனம்

சூர்யாவுக்காகவே நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் சேரும்!

விமர்சனம் 12-Jan-2018 4:29 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vignesh Shivan
Production : Studio Green
Starring : Suriya, Keerthy Suresh
Music : Anirudh Ravichander
Cinematography : Dinesh Krishnan
Editing : A. Sreekar Prasad

ஹிந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்காக வெளிவந்திருக்கிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யா, கீர்த்திசுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், கலையரசன் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். பொங்கல் விடுமுறைக்கேற்ற கொண்டாட்ட படமாக அமைந்திருக்கிறதா ‘தானா சேர்ந்த கூட்டம்’.

கதைக்களம்

சிபிஐயில் குமாஸ்தாவாக வேலை செய்யும் தம்பி ராமையாவின் மகன் சூர்யா. எப்படியாவது சூர்யாவை சிபிஐ அதிகாரி ஆக்கிவிட வேண்டுமென்று ஆசைப்படுகிறார் தம்பி ராமையா. அதற்கான எல்லாத் தகுதிகளும் சூர்யாவுக்கு இருந்தும், தம்பி ராமையாவுக்கும் சிபிஐயில் இருக்கும் உயர் அதிகாரி சுரேஷ் மேனனுக்கும் இருக்கும் ஈகோ பிரச்சனையால் இன்டர்வியூவில் ரிஜக்ட் செய்யப்படுகிறார் சூர்யா. அதன் பிறகு சூர்யா எடுக்கும் அதிரடி முடிவு ஒன்றால் சிபிஐ வட்டாரமே பரபரப்பாகிறது. அது ஏன்? எப்படி என்ன செய்கிறார் சூர்யா என்பதற்கான விடைதான் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

படம் பற்றிய அலசல்

‘ஸ்பெஷல் 26’ படம் முழுக்க முழுக்க சீரியஸாக நகர்வதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்ட படம். ஆனால், அதனை கொஞ்சம் மாற்றி கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட் போன்றவற்றை உள்ளே புகுத்தி வேறொரு பிளேவரில் தந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், விக்னேஷ் சிவன் செய்த இந்த மாற்றங்கள் படத்திற்கு புதிய கலரைத் தந்தாலும் அதுவே படத்தோடு ஒன்றிப் பயணிப்பதற்கு சற்று தடையாகவும் அமைந்திருக்கிறது. காரணம், படத்தில் லாஜிக் விஷயங்களை பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. அதேபோல், சூர்யா கதாபாத்திரத்தைத் தவிர மற்ற கதாபாத்திரங்களின் பின்பலங்களுக்காக பெரிதாக எந்த மெனக்கெடல்களும் காட்டவில்லை.

படத்தின் முதல்பாதி சுவாரஸ்யமாக கடந்துவிட்டாலும், இரண்டாம்பாதியின் ஆரம்பக் காட்சியில் படம் சற்று தொய்வடையவே செய்திருக்கிறது. ஆனால், கடைசி 25 நிமிடங்கள் பரபரப்பாக அமைந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. பாடல்களில் பெரிதாக ஸ்கோர் செய்திருக்கும் அனிருத், பின்னணி இசையில் இன்னும்கூட சிறப்பாகச் செய்திருக்கலாம். ஒளிப்பதிவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. அதேபோல் படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் படத்தின் கலை இயக்கம்.

நடிகர்களின் பங்களிப்பு

நிச்சயமாக தன்னுடைய ரசிகர்களுக்கு ‘டிஎஸ்கே’ மூலம் பெரிய சர்ப்ரைஸ் தந்திருக்கிறார் சூர்யா. பிதாமகன், கஜினி ஸ்டைல் ஜாலியான, கூலான சூர்யாவை மீண்டும் கண்முன் நிறுத்தியிருக்கிறார். பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என எல்லாவற்றிலும் சூர்யாவிடம் ஒரு மாற்றமிருப்பதை உணர முடிகிறது. சூர்யாவின் இந்த மாற்றம் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஹிந்தியைப் போலவே, தமிழிலும் நாயகியின் கேரக்டருக்கு பெரிய ஸ்கோப் இல்லை. அதனால் கீர்த்தி நான்கைந்து காட்சிகளுக்கும், இரண்டு பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். ஆனாலும், கொடுத்த வேலையை கச்சிதமாகவே செய்திருக்கிறார். ஹிந்தியில் அனுபம்கெர் செய்த கதாபாத்திரத்தை தமிழில் ரம்யா கிருஷ்ணன் செய்திருக்கிறார். சூர்யாவிற்குப் பிறகு படத்தில் கவனம் பெறுவது ரம்யா கிருஷ்ணன்தான். இவர்களைத்தவிர கார்த்திக், சுரேஷ் மேனன், செந்தில், கலையரசன், ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்தராஜ் என பலரும் நடித்திருந்தாலும், அவர்களுக்கான கேரக்டர் வடிவமைப்பில் இன்னும்கூட டீடெயிலிங் செய்திருக்கலாம்.

பலம்

1. சூர்யா
2. அனிருத்தின் பாடல்கள்
3. கலை இயக்கம்

பலவீனம்

1. லாஜிக் விஷயங்கள்
2. இரண்டாம்பாதியின் ஆரம்பக்காட்சிகள்
3. கதாபாத்திர வடிவமைப்பு

மொத்தத்தில்...

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் கதை அழுத்தமானதாக இருந்தாலும், படத்தை ஜாலியாக கொண்டு செல்வதா? அல்லது லாஜிக் விஷயங்களோடு சீரியஸாக கொண்டு செல்வதா என்பதில் சிறிது தடுமாறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். தன்னுடைய திரைக்கதை யுக்தியில் இந்த விஷயத்தை சரி செய்திருந்தால், இன்னும்கூட பெரிய திருப்தியைத் தந்திருக்கும் இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’.

ஒரு வரி பஞ்ச் : சூர்யாவுக்காகவே நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் சேரும்!

ரேட்டிங் : 5/10

#ThaanaaSerndhaKoottam #Suriya #KeerthySuresh #StudioGreen #VigneshShivan #AnirudhRavichander #DineshKrishnan #SreekarPrasad

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

OMG பொண்ணு வீடியோ பாடல் - சர்கார்


;