படைவீரன் – விமர்சனம்

வீரம் குறைவு, கதையில் வீரியம் இருக்கிறது!

விமர்சனம் 2-Feb-2018 2:01 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Dhana
Production : Madhivanan - Evoke
Starring : Vijay Yesudas, Bharathiraja, Amritha & Kalloori Akhil
Music :Karthik Raja
Cinematography : Rajavel Mohan

மணிரத்னம் உதவியாளர் தனா இயக்குனராகவும், விஜய்யேசுதாஸ் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கவிதா பாரதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘படைவீரனி’ன் ஆட்டம் எப்படி?

கதைக்களம்

தேனி பகுதியில் இரண்டு ஜாதி பிரிவினருக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதும், அதில் சில உயிர்கள் பலியாவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த ஊரில் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றித் திரிந்து வந்த விஜய் யேசுதாஸ், போலீஸ் வேலையில் சேர்ந்தால் கைக்கு நிறைய பணம் வரும், ஓசியாக சரக்கு அடிக்கலாம் என்ற ஆசையில் ஓயவு பெற்ற இராணுவ வீரரும், தனது பெரியப்பாவுமான பாரதிராஜா சிபாரிசில் போலீஸ் வேலையில் சேருகிறார்! போலீஸ் பயிற்சி முடிந்து விஜய் யேசுதால் தனது ஊருக்கு திரும்ப இருக்கும் நிலையில், தனது சொந்த ஊரான தேனியில் அந்த இரண்டு ஜாதி பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடிக்கிறது. இந்த கலவரத்தை அடக்குவதற்காக அனுப்பபடும் போலீஸ் குழுவில் விஜய்யேசுதாஸும் இடம் பெற, அந்த கலவரத்தை அடக்க மேற்கொள்ளும் முயற்சியில் பல திடுக்கிடும் சம்பவங்கள நடைபெறுகின்றன. அந்த சம்பவக்கள் என்ன? விஜய்யேசுதாஸால் அந்த கலவரத்தை அடக்க முடிந்ததா? என்பதே ‘படைவீரனி’ன் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

தமிழ்நாட்டின் சில கிராமங்களில் காலங்காலமாக நடந்து வரும் ஜாதி சண்டைகளை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள தனா, ‘இனியுமா ஜாதிக்கு பின்னாடி போய் வாழ்க்கையை தொலைப்பது? சிந்தியுங்கள் மக்களே!’ என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். இதற்காகவே அவருக்கு முதலில் பாராட்டு தெரிவிக்கலாம். கவிதா பாரதி தலைமையிலான ஒரு ஜாதி பிரிவினர், நித்தீஷ் வீரா தலைமையிலான இன்னொரு ஜாதி பிரிவினர், இவர்களுக்கிடையே நடக்கும் சண்டைகளை படு யதார்த்தமான காட்சிகளாக படம் பிடித்த இயக்குனர், லாஜிக் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. கலவரத்தை அடக்க வந்த போலீஸ்காரர் விஜய்யேசுதாஸ் கேரக்டர் மூலம் ஜாதி தலைவரான கவிதா பாரதிக்கு வழங்கும் தண்டனை, ஜாதி வெறி பிடித்து அலைபவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக படமாக்கி, தனக்கு இந்த சமூகத்தின் மீதிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர். ‘நாம் காலங்காலமாக ஆண்ட பரம்பரை என்று சொல்லி வருகிறோம், இந்த நாட்டை வெள்ளைக்காரன் கூடதான் ஆண்டான்! அதற்காக அவனை தலையில் வைத்து கொண்டாடுகிறோமா?’ என்று கேட்கும் பாரதிராஜாவின் கேரக்டர் படம் முழுக்க பேசும் வசன்ங்கள் சிந்திக்க வைக்க கூடிய விதமாக அமைந்துள்ளது. கமர்ஷியல் விஷயங்களை நம்பாமல் கதைக்கு என்ன தேவையோ அதுமாதிரியான காட்சிகளை அமைத்து அந்த கதையுடன் ஒட்டி வரும் காமெடி, செண்டிமெண்ட் என்று ஒரு நிஜ கிராமத்து கதையை பார்க்கும் உணர்வை தரும்விதமாக இப்படத்தை இயக்கி தனது குருநாதர் மணிரத்னத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் தனா!

படத்தின் முதல் பாதி திரைக்கதை அதிக விறுவிறுப்பில்லாமல் கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற ஃபீலிங்கை தந்தாலும் இரண்டாம் பாதி அதை சரி செய்து விடுகிறது! சில காமெடி காட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள், போலீஸ் பயிற்சியிலிருந்து பயந்து ஓடி வரும் விஜய்யேசுதாஸுக்கு கதாநாயகி அம்ருதா வார்த்தைகளால் கொடுக்கும் சாட்டையடி என படம் சுவாரஸ்யமாக பயணிக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜ்வேல் தனது ஒளிப்பதிவின் மூலம் நம்மை அந்த கிராமத்திற்கே அழைத்து சென்ற உணர்வை தருகிறார். அதைப்போல கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் ரசிக்க முடிகிறது. முதல் பாதியில் படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நடிகர்களின் பங்களிப்பு!

‘மாரி’யில் வில்லன் போன்ற ஒரு கேரக்டரில் நடித்த விஜய் யேசுதாஸ் இப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். நடிப்பை பொறுத்தவரையில் எந்த குறையும் வைக்கவில்லை. அந்த கிராமத்து இளைஞன் கேரக்டரை சரியாக உள்வாங்கி, நேர்த்தியாக நடித்துள்ளார். விஜய்யேசுதாஸ்! இவரை விரும்பும் கிராமத்துப் பெண்ணாக வரும் அறிமுகம் அம்ருதாவின் நடிப்பு முதல் படத்திலேயே பாஸ் வாங்கியிருக்கிறார். தெத்து பல் அழகியான அம்ருதாவின் சுட்டித்தனமான நடிப்பும், பார்வையும் வசீகரம்.
ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கேரக்டரில் வரும் பாரதிராஜாவின் நடிப்பும் நேர்த்தி! அவர் பேசும் வசனங்கள் ஜாதி வெறியர்களுக்கு சாட்டையடி போல் அமைந்துள்ளது. ஜாதி வெறி பிடித்தவராக வரும் கவிதா பாரதி தோற்றத்திலும் நடிப்பிலும் மிரட்டியுள்ளார். விஜய்யேசுதாஸின் அப்பாவாக வரும் இயக்குனர் மனோஜ்குமார், இன்னொரு ஜாதி தலைவராக வரும் நித்தீஷ் வீரா, மற்ற சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்கள் என அனைவரையும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் தனா!


பலம்
1.கதை, கதாபாத்திர வடிவமைப்பு
2. நடிகர்களின் பங்களிப்பு
3. ஒளிப்பதிவு இசை

பலவீனம்
1. ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி
2. லாஜிக் விஷயங்கள்

மொத்தத்தில்…

ஜாதி பிரச்சனைகளை மையமாக வைத்து ஏற்கெனவே பல படங்கள் வெளிவந்துள்ளது என்றாலும் அப்படங்களிலிருந்து இப்படம் மாறுபட்டு சில சமூக கருத்துக்களை சொல்லும் விதமாகவும் உருவாகியிருப்பதால இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச்: வீரம் குறைவு, கதையில் வீரியம் இருக்கிறது!

ரேட்டிங் : 5/10


#Padaiveeran #PadaiveeranMovieReview #PadaiveeranReview #VijayYesudas #Bharathiraja #Amritha #KallooriAkhil #KavithaBharathi #Rajavelmohan #KarthickRaja #Dhana

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காளி முதல் 7 நிமிடங்கள்


;