இந்த வாரம் வெளியாகும் படங்கள் – ஒரு கண்ணோட்டம்!

இந்த வாரம் செம, ஒரு குப்பைக் கதை, அபியும் அனுவும், காலக்கூத்து, புதிய புரூஸ்லி, பேய் இருக்கா இல்லையா ஆகிய 6 திரைப்படங்கள் வெளியாகின்றன!

செய்திகள் 24-May-2018 3:51 PM IST VRC கருத்துக்கள்

ஒவ்வொரு வாரமும், இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள் வெளியாகின்றன, அந்த படங்கள் எவை என்பது குறித்த தகவல்களை வழங்கி வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ:

1. செம – இயக்குனர் பாண்டிராஜின் ‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் பி.ரவிச்சந்திரனின் ‘லிங்க பைரவி’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளி காந்த் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா பினு கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவை எம்.எஸ்.விவேகானந்தன் கவனித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா பினுவுடன் ‘யோகி’ பாபு, கோவை சரளா, மன்சூரலிகான், சுஜாதா முதலானோரும் நடித்துள்ள இந்த படம் திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2. ஒரு குப்பைக் கதை – ‘பாகன்’ படத்தை இயக்கிய முகமது அஸ்லாம் தனது ‘ஃபிலிம் பாக்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் இது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் தமிழமெங்கும் வெளியிடுகிறது. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக நடித்து அறிமுகமாகும் இந்த படத்தில் கதாநாயகியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். இந்த படத்தை, இயக்குனர் அமீர், முகமது அஸ்லாம் முதலானோரிடம் உதவியாளராக பணியாற்றிய காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்க, மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை சிட்டியில் குப்பை அள்ளும் தொழிலாளியாக நடிக்கும் தினேஷ் மாஸ்டர், தான் செய்யும் தொழில் குறித்த விவரத்தை மறைத்து ஒரு கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அந்த பெண்ணுக்கு தன் கணவர் செய்யும் தொழில் குறித்த விவரம் தெரிய வர அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘ஒரு குப்பை கதை’யின் கதைக்களம்.

3. அபியும் அனுவும் – பிரபல ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி இயக்கியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கதையின் நாயகனாக நடிக்க, கதையின் நாயகியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தரன் குமார் இசை அமைத்துள்ளார். அகிலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நியூ ஜெனரேஷன் காதல் கதையாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.. இந்த படத்தில் பிரபு, சுஹாசினி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

4.காலக்கூத்து – பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, ஸ்ருஷ்டி டாங்கே, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை எம்.நாகராஜ் இயக்கியுள்ளார். கிராமத்து பின்னனியில் நடக்கும் காதல், குடும்பம், சென்டிமெண்ட் கலந்த கதையாம் ‘காலக்கூத்து’ இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார். பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

5. புதிய புரூஸ்லி – ‘மார்ஷியல் ஆர்ட்’ என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருபவர் புரூஸ்லி ஆவார். உருவ தோற்றத்தில் புரூஸ்லியை போலவே இருக்கும் ‘புரூஸ்’ ஷான் என்ற இளைஞர் புரூஸ்லி போன்ற ஒரு அதிரடி ஆக்‌ஷன் கேரக்டரில் கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் ‘புதிய புரூஸ்லி’. இந்த படத்தை முளையூர் ஏ.சோணை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் முதல் படம் இது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் இயக்குனர் முளையூர் ஏ.சோணை. S.K. AMAN FILM PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் வந்தவாசி கே.அமான் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘சேரன் பாண்டியன்’, ‘சிந்துநதிப்பூ’ உட்பட பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்த சௌந்தர்யன் இசை அமைத்துள்ளார். சிவசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

6. பேய் இருக்கா இல்லையா? – பா.ரஞ்சித் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அமர், ஜோதிஷா, விஜய்குமார் லிவிங்ஸ்டன், மதன் பாப், பொன்னம்பலம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சம்பத் இசை அமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘டீம் ஒர்க் டாக்கீஸ்’ என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பேய், ஹாரர் கலந்த காமெடி கதை என்று கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட 6 திரைப்படங்கள் இந்த வாரம் (நாளை) வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 திரைப்படங்களும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது! இந்த 6 படங்களில் எந்தெந்த திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படங்களாக அமையும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்!

#OruKuppaiKadhai #AbhiyumAnnuvum #Sema #PudhiyaBruceLee #PeiIrukaIllaya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம ட்ரைலர் 2


;