இந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்?

இந்த வாரம் ஜுங்கா, மோகினி, பிரம்மபுத்ரா என்று 3 நேரடி தமிழ் படங்கள் வெளியாகிறது!

செய்திகள் 26-Jul-2018 5:51 PM IST VRC கருத்துக்கள்

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு முன்னோட்டத்தை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ:

1. ஜுங்கா – விஜய்சேதுபதியின் ‘விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் அருண்பாண்டியனின் ‘A&P GROUPS’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ஜீவா நடிப்பில் ‘ரௌத்திரம்’, விஜய்சேதுபதி நடிப்பில் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமார’, கார்த்தி நடிப்பில் ‘காஷ்மோரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். காமெடி கலந்த ‘டான்’ கதை ஜுங்கா என்றாலும் அனைத்து தரப்பினருக்குமான படமாக ‘ஜுங்கா’ உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகிகளாக சாயிஷா, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்க, யோகி பாபு, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ஜுங்கா’விற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்துள்ளார். இன்று மாலை மலேசியாவில் ‘ஜுங்கா’ பிரத்தியேக காட்சியாக திரையிடப்படுகிறது. இதற்காக ‘ஜுங்கா’ படக்குழுவினர் மலேசியா பயணமாகியிருக்க, நாளை உலகம் முழுக்க நிறைய தியேட்டர்களில் வெளியாகிறது ‘ஜுங்கா’.2. மோகினி – விஜய் நடிப்பில் ‘மதுர’, விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்’, வினய் நடித்த ‘மிரட்டல்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் மோகினி. சூர்யா நடிப்பில் ‘சிங்கம்-2’ படத்தை தயாரித்த ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா மோகினி, வைஷ்ணவி என இரண்டு கேரக்டர்களில் முதன் முதலாக நடித்துள்ளார். த்ரிஷாவுடன் யோகி பாபு, பூர்ணிமா பாக்யராஜ், சாமிநாதன் ஆகியோரும் நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசை அமைத்துள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். DNA தொடர்பு பற்றிய விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஹாரர் படம் இது. த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நேரடி தமிழ் படம் ‘கொடி’. இந்த படம் 2016, அக்டோபர் மாதம் வெளியானது. ‘கொடி’ வெளியாகி ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு த்ரிஷா நடிப்பில் வெளியாகும் படம், ஆர். மாதேஷ் இயக்கியுள்ள படம், சிங்கம்-2 பட தயாரிப்பாளரின் படம் என பல சிறப்புக்களுடன் வெளியாகிறது நாளை வெளியாகிறது ‘மோகினி’.

3. பிரம்மபுத்ரா – ‘கோல்டன் மீடியா’ என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பிரம்மபுத்ரா’. டாக்டர் தினேஷ் பாபு, உதயதாரா ஒரு ஜோடியாகவும், முரளி, அக்‌ஷதா இன்னொரு ஜோடியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் டெல்லி கணேஷ், பாண்டு, வையாபுரி, போண்டா மணி ஆகியோரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் தாமஸ் இயக்கியுள்ள இந்த படம் காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. . சென்சாரில் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ள இந்த படத்தில் பணியாற்றியிருக்கும் பெரும்பாலான டெக்னீஷியன்களும் புதியவர்களே! புதியவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த ‘பிரம்மபுத்ரா’வும் நாளை வெளியாகிறது.

மேற்குறிப்பிட்ட மூன்று நேரடி தமிழ் படங்கள் இந்த வார ரிலீசாக நாளை வெளியாகிறது. இந்த படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களின் ஆதரவு பெற்று வெற்றிப் படங்களாக அமையும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

#Junga #Mohini #BrammaPuthra #VijaySethupathi #Trisha #Sayyesha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;