இந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்?

சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யு-டர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இந்த வாரம் வெளியாகிறது!

செய்திகள் 12-Sep-2018 7:29 PM IST Top 10 கருத்துக்கள்

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் நேரடித் தமிழ் படங்கள் குறித்த தகவல்களை வழங்கி வருகிறோம். சென்ற வாரம் 6 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் இந்த வாரம் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யு-டர்ன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகின்றன. அந்த படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டம் இது!

1. சீமராஜா – ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பொன்ராமும், சிவகார்த்திகேயனும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை ‘24 AM STUDIOS’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் சம்ந்தா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சிம்ரன், நெப்பொலியன், சூரி, மலையாள நடிகர் லால், மனோபாலா, யோகி பாபு, ரிஷிகாந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்கள் மாதிரியே இந்த படமும் கிராமத்து பின்னணியில் உருவாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த டி.இமானே இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஆர்.டி.ராஜா மூன்றாவது முறையாக தயாரித்துள்ள இந்த படம் விநாயகசதுர்த்தி விழாவை முன்னிட்டு நாளை உலகம் முழுக்க வெளியாகிறது தமிழகத்தில் மட்டும் ‘சீமராஜா’ 400-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வரிசையில் இப்படமும் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

2. யு-டர்ன் – கன்னடத்தில் பவன் குமார் இயக்கத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கேரக்டரில் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற படம் அதே இயக்குனர் இயக்கத்தில் சமந்தா நடிக்க, அதே பெயரில் தமிழில் ரீ-மேக் ஆகியுள்ளது. ஸ்ரீனிவாசா சித்தூரி, ராம்பாபு பண்டாரு ஆகிய இருவர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் பூமிகா, ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பூர்ண சந்திர தேஜஸ்வி இசை அமைத்துள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் பவன் குமார் பேசும்போது, ‘கன்னட யு-டர்ன் கதையை தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்கள் செய்து இயக்கியிருக்கிறேன். அதனால் கன்னட ‘யு-டர்ன்’ படத்தை விட தமிழ் ‘யு-டர்ன்’ கதை அதிக விறுவிறுப்பும், த்ரில்லும் கலந்து பயணிக்கும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தை இயக்கிய பவன் குமாரும், சமந்தாவும் ஏற்கெனவே நண்பர்கள். இந்நிலியில் கன்னட ‘யு-டர்ன்’ படத்தின் டிரைலர் வெளியான் நேரத்தில் சமந்தா, பவன் குமாரை தொடர்பு கொண்டு, ‘உனக்கு என்னை தெரியும். ஏன் இந்த கதையில் என்னை நடிக்க வைக்கவில்லை?’ என்று உரிமையோடு கேட்டுள்ளார் சமந்தா! இதனை தொடர்ந்து தமிழ் யு-டர்னில் சமந்தாவை நடிக்க வைத்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார் இயக்குனர் பவன் குமார். இந்த தகவலை சமந்தா சமீபத்தில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். சிவகார்த்திகேயனுடன் சமந்தா நடித்துள்ள ‘சீமராஜா’ வெளியாகும் அதே நாளிலேயே சமந்தாவின் யு-டர்ன்’ படமும் வெளியாவதால் இந்த வருட விநாயகசதுர்த்தி சமந்தாவை பொறுத்தவரையில் ஸ்பெஷலாகும்!

‘சீமராஜா’, ‘யு-டர்ன்’ ஆகிய 2 படங்கள் இந்த வார ரிலீசாக நாளை வெளியாகிறது. இந்த 2 படங்கள் ரசிகர்களிடத்தில் எப்படிப்பட்ட வரவேற்பை தரும் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஓ! பேபி Teaser


;