சீமராஜா - விமர்சனம்

சற்றே சறுக்கியிருக்கிறார் இந்த ‘சீமராஜா’!

விமர்சனம் 13-Sep-2018 1:36 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Ponram
Production: 24AM Studios
Cast: Sivakarthikeyan, Samantha Akkineni, Soori, Simran, Nepolean
Music: D.Imman
Cinematography: Balasubramaniem
Editor: Vivek Harshan


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து ‘ஹாட்ரிக்’ கூட்டணி அமைத்திருக்கிறார்கள் இயக்குனர் பொன்ராமும், நடிகர் சிவகார்த்திகேயனும். ‘சீமராஜா’ வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறாரா?

கதைக்களம்

ராஜ வம்சத்தின் கடைசி வாரிசான சிங்கம்பட்டியைச் சேர்ந்த சிவகார்த்திகேயன், எதிரி ஊரான புளியம்பட்டியைச் சேர்ந்த சமந்தாவை ‘லவ்’வுகிறார். எல்லாம் கைகூடி வரும்வேளையில் அவர்களின் காதலுக்கு குறுக்கே நிற்கிறது சிம்ரன்&லால் தம்பதி. சிவா & சமந்தா காதலுக்கு இவர்கள் குறுக்கே நிற்பது ஏன்? சிவகார்த்திகேயனின் ராஜ வம்ச பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகளோடு படத்தை சீரியஸ் ராஜாவாக இல்லாமல் சிரிப்பு ராஜாவாக சொல்லியிருப்பதே ‘சீமராஜா’.

படம் பற்றிய அலசல்

தனது முதல் இரண்டு படங்களிலும் கொஞ்சூண்டு கதையோடு, முழுநீள காமெடியை வைத்து ஃபேமிலி என்டர்டெயினர் படத்தை உருவாக்கி வெற்றிபெற்ற இயக்குனர் பொன்ராம், ‘சீமராஜா’வில் ஒருசில படிகள் மேலேறி வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய ஒரு காமெடி ஆக்ஷன் படத்தை கொடுக்க முயன்கிறார். வரலாற்றுப் பின்னணி, மாஸான ஃப்ளாஷ்பேக் என ஹீரோ சிவாவின் கேரியருக்கேற்ற ஒரு ஒன்லைனை யோசித்த பொன்ராம் அதற்கான ஒரு சுவாரஸ்யமான கதையும், என்கேஜிங்கான திரைக்கதையும் உருவாக்குவதில் கவனம் சிதறியிருக்கிறார். படத்தின் முதல் பாதி சூரியின் காமெடிகள், சிவா, சமந்தாவின் லவ் என கதைக்குள் நுழையாவிட்டாலும் ஓரளவுக்கு பார்க்கும்படியாகவே பயணிக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ராஜா சிவகார்த்திகேயனின் ஃப்ளாஷ்பேக் போர்ஷன் உருவாக்கமாக நல்ல தரத்தோடு இருந்தாலும், இந்தப்படத்தின் கதைக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதோடு, இடையிடையே பாடல்கள், தேவையில்லாத காமெடிகள் என இரண்டாம்பாதியின் நீளம் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. இமானின் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், படத்தின் சுவாரஸ்யத்திற்கு தடைபோடுவதாக அமைந்துள்ளது. படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது பாலசுப்ரமணியனின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு.

நடிகர்களின் பங்களிப்பு

காமெடியை குறைத்து, ஆக்ஷனை அதிகப்படுத்தி, பஞ்ச் டயலாக்கை வலுக்கட்டாயமாகத் திணித்து, கடைசியில் கருத்து சொல்லி... ஒரு ஹீரோவாக அடுத்த லெவலுக்கு நகர முயற்சித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனாலும், அவரின் காமெடியும், ரொமான்ஸும் மட்டுமே நம்மை பெரிதாக வசீகரிக்கிறது. ராஜா போர்ஷனில் காட்சிகள் கம்பீரமாக இருந்தாலும், சிவாவின் உடல்மொழியில் இன்னும்கூட சிறிது மெனக்கெடல்களை அதிகப்படுத்தியிருக்கலாம். சிலம்பம் சுற்றும் பி.டி. டீச்சராக சமந்தாவின் கேரக்டரை வித்தியாசமாக யோசித்திருந்தாலும், வழக்கமான ஹீரோயின்கள் செய்யும் வேலைகளை மட்டும் சமந்தாவும் செய்துவிட்டுப் போகிறார். சிம்ரனின் வில்லி அவதாரம் அவரின் புதிய இன்னிங்ஸை இனிதாக துவக்க உதவும். லால் வழக்கம்போல் வசனங்களில் மட்டும் ‘கெத்து’ காட்டிவிட்டு ஹீரோவிடம் அடிவாங்கி மறைகிறார். சூரியின் காமெடிகள் படத்தின் சில இடங்களில் கைகொடுத்திருக்கின்றன. ஆனாலும், இந்தக் கூட்டணியின் முந்தைய படங்களை ஒப்பிட்டால்
ஏமாற்றமே. ‘சீவலப்பேரிபாண்டி’யை (நெப்போலியன்) சிரிப்பு ராஜாவாக்கி சிதைத்திருக்கிறார்கள்.

பலம்

1. சிவகார்த்திகேயன் - சூரியின் சில காமெடிகள்
2. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு

பலவீனம்

1. கதை
2. சுவாரஸ்யமற்ற திரைக்கதை
3. படத்தின் நீளம்

மொத்தத்தில்...

முந்தைய படங்களின் வெற்றி, உயர்ந்துவரும் ஹீரோவின் கேரியர் கிராஃப், பரவலான விளம்பர யுக்தி என எல்லாம் சரியாக அமைந்தும் படத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் திரைக்கதை சறுக்கியிருப்பதால் ‘சீமராஜா’ ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தத் தவறியிருக்கிறார்.

ஒரு வரி பஞ்ச்: சற்றே சறுக்கியிருக்கிறார் இந்த ‘சீமராஜா’!

ரேட்டிங் : 4.5/10


#Seemaraja #SeemarajaMovieReview #Sivakarthikeyan #Samantha #Soori #Simran #SK #DImman #Ponram #BalaSubramaniem #VivekHarshan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வரேன் வரேன் வீடியோ பாடல் - சீமராஜா


;